Wednesday, December 31, 2025

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அதை செய்து விட வேண்டும் 
இதை முடித்து விட வேண்டும் 
என்று குறிக்கோளுடன் தான் தொடங்குகிறது ஒவ்வொரு ஆண்டும்.

மாதங்கள் ஆக ஆக 
வைராக்கியம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து
சிறிதேனும் செய்து விட வேண்டும் என்கிறது சிந்தனை 
மலை அளவு குறிக்கோள் இருந்தாலும் 
மடு அளவு சாதித்து விட முடிகிறது,
குறிக்கோளை முழுமையாய் அடைவது முக்கியமில்லை 
குறிக்கோளை குறித்து, முயற்சி செய்வதுதான் முக்கியம் என்கிறது  மனது.
 
மீண்டும்  குறிக்கோள்கள் குறித்து தீர்மானம் ஏற்போம் இவ்வாண்டிலும்,
செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையில்.

 நம்பிக்கைதான் வாழ்க்கை.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன். 
இரா.ரெங்கசாமி.

Sunday, December 21, 2025

நூற்றுக்கணக்கான செடி கொடி 
மரங்களுடன் வாழ்ந்தவனை
மொட்டை மாடி ரோஜா செடிகளுடன்
முடக்கி விடுகிறது வாழ்க்கை.

-பூமி.சாமி.

Wednesday, December 17, 2025

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

காகிதத்தை திங்கும் 
கழுதைக்கு 
காகிதத்தில் இருப்பது 
கட்டுரையா இருந்தால் என்ன 
கவிதையா இருந்தால் என்ன.

-பூமி.சாமி.
உங்கள் குடும்பத்திற்குள்
வருவதற்கு முன் கொஞ்சம் 
உசாராய் இருந்து இருக்கலாம்,

நீங்கள் தந்த ஒவ்வொன்றும் 
உண்மை என்று நம்பி இருந்தேன்,
உங்கள் நாடகங்களிலும்
போலி வார்த்தைகளிலும் சிக்கி கொண்டேன், 
பெரும் தாகக்காரன் கிணற்றில் விழுந்தது போல்,

நீங்கள் என்னவோ பறவை சிறகை உதிர்ப்பது போல எளிதாக உதிர்த்து விட்டீர்கள் என்னை
நான் தான் உங்களை உதிர்க்க முடியாமல்
தினம் தினம் துன்ப படுகிறேன்.

-பூமி.சாமி.



Sunday, December 14, 2025

நீ என் மனதிற்குள் இருக்கிறாய் 
நான் உன் கைகளுக்குள் இருக்கிறேன்.

-பூமி.சாமி.

Saturday, December 13, 2025

பாலம்
இரு கரைகளை இணைக்கக் தான் 
பாலத்தை தாங்கும் பொறுப்பு இருக்கரைகளுக்கும் தான்.

உறவும் அப்படித்தான்.

-பூமி.சாமி.


பத்தாயம்

நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும்போது நெல் சேமித்து வைக்க வீட்டில் பத்தாயம், குதிர் என்று இருக்கும். பத்தாயம் மரத்தால் செய்யப்பட்டது சற்று பெரிதாக இருக்கும், பெரும்பாலும் சதுர அல்லது செவ்வக வடிவில் இருக்கும், மரப்பலகையில் பெட்டி பெட்டியாக செய்து ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி செய்யப்பட்டிருக்கும்.

நெல்லை உள்ளே கொட்டுவதற்கு மேல் பெரிதாக ஒரு துவாரமும், கீழே நெல்லை வேண்டும்போது சிறிது சிறிதாக எடுக்க சிறிதாக ஒரு துவாரமும் இருக்கும்,  சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை அதாவது 50 அல்லது 60 மூட்டை போடும் அளவிற்கு கூட இருக்கும்,  மூட்டை என்பது 24 மரக்கால் நெல் ஆகும், 

நெல் அறுவடை செய்து அதனை நன்றாக தூற்றி காய வைத்தபின், அதனை பத்தாயத்தில் சேமித்து தேவையான போது எடுத்து அரைத்து அரிசியாக மாற்றி கொள்வோம். பெரும்பாலும் அறுவடை நேரங்களில் நெல்லின் விலை குறைவாக இருக்கும் அதனால் சேமித்து பின் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு விற்றால் வேல் நல்ல விலை போகும் அதுவே பத்தாயத்தின் பெரும் பயன். கிராமத்தில் தொழிலாளர்களுக்கும் கூலி  நெல்லாகவே கொடுக்கப்படும்.

 நெல்லை உள்ளே கொட்டுவது என்பது மிக மகிழ்ச்சியான ஒரு வேலையாகும், எங்கள் வீட்டில் அது பெரும்பாலும் அதிகாலை 5 மணிக்கு நடக்கும், காலை 5 மணிக்கு எல்லோரையும் எழுப்பி விடுவார்கள் பெரும்பாலும் நான் மேல் உட்கார்ந்து கொள்வேன், அதன் உயரம் ஒரு 10 அடி இருக்கும்,  ஏறக்குறைய ஓட்டு வீட்டின் உத்தரத்தை இடிக்கும் அளவிற்கு இருக்கும், கீழிருந்து என் சகோதர சகோதரிகள் நெல் மூட்டைகளைப் பிரித்து நெல்லை கூடையில் கொட்டி எடுத்து தருவார்கள், மேலிருந்து அந்த நெல் மணிகளை உள்ளே கொட்டும்போது நெல்லிருந்து வரும் நறுமணம் நாசியை துளைக்கும்.  

 நெல் போடுவதற்கு முதல் நாள் அந்த பத்தாயத்தை சுத்தம் செய்யவேண்டும், அதாவது கொஞ்சம் பழைய நெல் அடியில் இருக்கும்,  அதைக் கூட்டி அள்ள உள்ளே இறங்க வேண்டும், இறங்க இரும்பு கம்பியும் பலகை ஓரத்தில் சக்கையும் அடிக்கப்பட்டிருக்கும், சுத்தமாக கூட்டி தள்ளிவிட்டு பிறகு நொச்சி இலை வேப்ப இலை போட்டு கீழ் நெல்லை எடுக்கும் துளையை அடைத்து வெளியில் பூட்டு போட்டு விடுவோம், பூட்டு போடவில்லை என்றால் சிறு பிள்ளைகள் அதை விளையாட்டாக திறந்து விட வாய்ப்பு இருக்கிறது.

 எங்கள் வீட்டில் மூன்று பத்தாயங்கள் இருந்தன, அவை பெரும்பாலும் குடும்ப உறுப்பினர் போலவே நடு வீட்டில்  அடைத்து உட்கார்ந்து கொண்டிருக்கும்.  எப்பொழுதெல்லாம் வீட்டில் பணம் இல்லையோ அப்பொழுதெல்லாம் பத்தாயத்தை திறந்து சில மூட்டைகளை எடுத்து விற்று பணம் பெறுவோம், பத்தாயம் ஆபத்தில் அவசரத்தில் உதவும் நண்பன் போலவே நம்மோடு இருக்கும், சில பொருட்கள் பண்டமாற்று முறையில் வாங்குவதற்கும் சில நேரங்களில் கொஞ்சமாய் நெல் எடுப்போம் உதாரணமாக உப்பு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவை வாங்க நெல் எடுப்போம் .

அப்பாவிடம் பணம் கேட்க முடியாத நேரங்களில் அம்மா அப்பாவிற்கு தெரியாமல் நெல் எடுத்து என்னிடம் கொடுத்து விற்க சொல்லும், அது பெரும்பாலும் பாத்திரம் வாங்குவதற்காகவே இருக்கும்.

சுவற்றுக்கும் பத்தாயத்திற்கும் ஒரு சந்து இருக்கும் அதுதான் பெரும்பாலும் நாங்கள் ஒளிந்து விளையாடுவதற்கான இடமாக இருக்கும்,  அதே போல் பத்தாயத்தின் கீழ் நல்ல இடைவெளி இருக்கும் அங்குதான் அருவா, மண்வெட்டி, கடப்பாரை இதுபோல இரும்பு சாமான்கள் போடுவதற்கு பயன்படுத்திக் கொள்வோம். நான் அந்த இடைவெளியில் கொஞ்சநாள் முயல் வளர்த்தேன்.

கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும்  இரண்டு மூன்று பத்தாயங்கள் இருக்கும், தன்னுள் நெல்லை நிரப்பி எங்களின் மனதை, வயிற்றை நிறைத்த பத்தாயங்கள் இன்று ஒரு வீட்டில் கூட இல்லை என்பது தான் மிகுந்த வருத்தத்திற்குரியது செய்தி.

கஷ்ட காலங்களை அள்ளி அள்ளி எடுத்துக் கொள்ள இருந்த அட்சய பாத்திரங்கள் காலத்தால் அழிந்து விட்டன. பத்தாயத்தில் நெல் வெளிவந்து கொட்டும் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
 
 குதிர் என்பது சிறிய அளவில் மண்ணால் செய்யப்பட்ட வட்ட வடிவ உறையால் செய்யப்பட்டிருக்கும், அது மாட்டு சாணத்தால் மொழுகப்பட்டிருக்கும் அது பெரும்பாலும் விதை நெல் பதப்படுத்தி வைக்க பயன்படும் அதுவும் பயன்பாட்டில் இருந்து அகன்றுவிட்டது.

தன்னுள் நெல்லை நிறைத்து எங்களின் மனதை நிறைத்துக் கொண்டிருந்த பத்தாயம், குதிர் ஆகியவைகளை இனிவரும் சந்ததிகள்  google இமேஜில் மட்டுமே பார்க்க முடியும் என்பது தான் வருத்தமான உண்மை.

நன்றி.
-பூமி.சாமி.


Sunday, December 7, 2025

எவ்வாறெல்லாம் ஒருவரை
பயன்படுத்தி கொள்ளலாம் 
எப்போதும் எவ்வாறு தூக்கி 
வீசலாம் என்பதில் 
பல பேர் ஆராய்ச்சி வரை
படித்திருப்பது தான்
வேதனை.

-பூமி.சாமி.

Saturday, December 6, 2025

உனக்கு என்ன பிடிக்கும் என்றேன்
அப்படி ஒன்றும் இல்லை என்றாய் 

எதை செய்ய விருப்பம் என்றேன் 
அப்படியும் ஒன்றும் இல்லை என்றாய் 

யாரை உனக்கு பிடிக்கும் என்றேன்
என்னை தவிர சிலரை சொன்னாய்

உனக்கு உன்னை பிடிக்குமா என்றேன்
அமைதியாய் இருந்தாய்

என்னை பிடிக்குமா என்றேன்
பேரமேதிக்கு சென்றாய் 

எது எப்படியோ 
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன்,
புன்னகை புரிந்தாய்.

-பூமி.சாமி.




Thursday, December 4, 2025

ஓட்டை குடிசை

மழை நின்ற பிறகும் 
மழை துளிகளின்
ஆசிர்வாதம்.

-பூமி.சாமி.

Saturday, November 29, 2025

உனக்காக காத்திருக்கிறேன்,

என்னை நீயாக அழைக்கப்போவதுமில்லை
என் கை கோர்க்க போவதுமில்லை 
என் தோள் சாய போவதுமில்லை 
சாப்பிட்டாயா என்று கூட கேட்க போவதுமில்லை 
ஆனாலும் காத்திருக்கிறேன் அன்பே
இவையெல்லாம் ஒருநாள் 
நடக்கும் என்று.

Sunday, November 23, 2025

LIFE

LIFE IS NOT A DESTINATION 
ITS NOT A JOURNEY 
ITS WHO YOU BECOME ON THE WAY.

Saturday, November 22, 2025

சில நேரங்களில் 
விசாரிப்புகள்,
நச்சரிப்பு 
தொந்தரவு 
என தோன்றும் 

அதுவும்
அன்புதான்
என்று உணரும்
ஒரு நாளில் 
விசாரிப்பும்
விசாரித்த வரும்
இல்லாமல் 
போயிருக்கும்.

-பூமி.சாமி.

Tuesday, November 18, 2025

நான் உன்னை மதிப்பதால் 
நீ என்னை மதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை 

நான் உன்னை மரியாதையுடன் நடத்துவதால் 
நீ என்னை அப்படி நடத்த தேவையில்லை

 நான் உன்னிடம் நன்றியுடன் இருப்பதால் நீ என்னிடம் நன்றியுடன் இருக்க வேண்டியதில்லை

 நான் உன்னிடம் அன்பாக இருப்பதால் நீயும் அன்பாக இருக்க தேவையில்லை

 நான் உன்னிடம் அக்கறையுடன் இருப்பதால் நீயும் அப்படி என்னிடம் இருக்கத் தேவையில்லை 

ஆனால் ஒரு உறவில் இவையெல்லாம் அவசியம் என்று மட்டும் எனக்கு தெரியும்

 நான் நானாக இருக்கிறேன்
 நீ நீயாக இரு 

காய்ந்த மரக்கட்டை துளிர்க்கும் என்று நினைத்தால் நான் ஒரு முட்டாள் ஆவேன்.


-பூமி.சாமி.

Thursday, November 13, 2025

உங்களுக்கு வரும்
தொலைபேசி அழைப்பு 
குறுஞ்செய்தி 
இவையெல்லாம் 
செய்தி சொல்லவோ
தகவல் தரவோ
மட்டுமல்ல 

அவை பெரும்பாலும் 
அன்பை வெளிப்படுத்தவோ
அக்கறையை காட்டவோ
நலம் விசாரிப்பாகவோ தான் 
இருக்கும் என்பதை 
மனதில் வையுங்கள் 
மனிதர்களே.


பூமி.சாமி.



Tuesday, November 11, 2025

நான் 'நாம்' என்கிறேன்
நீ 'நான்' என்கிறாய்.

-பூமி.சாமி.
நாம் அறிவை வளர்க்கும் 
புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், தவறில்லை 
அதே வேளையில் 
சிந்தனையில் உணர்வில் 
மாற்றம் ஏற்ப்படுத்தும்
புத்தகங்களை படிக்கும் போது
மனிதனால் இந்த சமூகத்தில் 
ஏற்படும் பிரச்சனைகள்
குறையும்.
மிகப் பெரிய மாற்றங்களை இது காலப்போக்கில் ஏற்படுத்தும்.
அதுவும் மனிதர்களை 
சக உயிர்களை, இயற்கையை
கையாளும் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு 
இந்த புத்தக வாசிப்பை 
கட்டாயம் ஆக்க வேண்டும் 
சக மனிதனின்
சக உயிரின் வலி புரியாதவர்கள் மற்றும் 
உயிர்நாடியான இந்த இயற்கையின் 
முக்கியத்துவம் தெரியாதவர்கள்
அறிவை மட்டுமே கொண்டு 
சிந்திப்பதால் பல பிரச்சனைகள் 
எழுகின்றன,
அவர்களை மனதை பண்படுத்தவும்
பக்குவபடுத்தவும் புத்தக வாசிப்பு நிச்சயம் பயண்படும்.
சில முடிவுகளை அறிவை பயன்படுத்தியும்
சில முடிவுகளை மனதை பயன்படுத்தியும்
முடிவு எடுக்க இந்த வாசிப்பு அவர்களுக்கு கைகொடுக்கும்.
கதவடைத்து இருளாய்
குறுகி கிடக்கும் மனித மனங்களை 
விசாலமான ஒளி பொருந்திய மனங்களை உருவாக்க 
புத்தக வாசிப்பு வழி வகுக்கும்.
எல்லா அலுவலத்திலும் புத்தகம் வாசிப்பதற்கும்
அதன்பின் உரையாடடுவதற்கும்
நேரம் இருக்கும் என்றால் 
சிந்தனை, செயல், சேவை மாற்றம் தானாகவே வரும்.


-பூமி.சாமி.






Sunday, November 9, 2025

அன்பு

நான் தூய்மையிலும் 
தூய்மையானதை கொடுக்கிறேன்,
நீ மாசிலும் மாசனதை தருகிறாய்.

பூமி.சாமி.

Saturday, November 1, 2025

அன்பை விட
உண்மை மேன்மையானது
அன்பில் உண்மை அதனினும் 
மேன்மையானது.

-பூமி.சாமி.

Wednesday, October 22, 2025

நான் ஒவ்வொரு முறை 
உங்களை விசாரிக்கும் போதும் 
'எனக்கு நிறைய நேரம் 
இருக்கிறது என்றோ
எனக்கு வேலை வெட்டி இல்லை' என்றோ 
உங்களுக்கும் தோன்றக்கூடும்

என் சக மனிதனுக்கு 
சிறிது நேரத்தை செலவிடுவதும்
என் அன்பானவர்களுக்கு கொஞ்சம் 
அக்கறையை காட்டுவதைவிடவும்
எனக்கு என்ன பெரிய வேலை இருந்துவிட போகிறது என் வாழ்வில்.

-பூமி.சாமி.

Tuesday, October 21, 2025

உன்னிடம் உரையாடும் போது
ஆயிரம் வார்த்தைகள்
வந்து வந்து போகிறது சொல்வதற்கு
ஆனாலும்  "இது உனக்கு தேவையில்லாத வேலை" என்று
அறிவுறுத்தி கொண்டே இருக்கிறது உன்னிடம் அடி வாங்கிய என் மனம்.

-பூமி.சாமி.
என்னுடைய அன்பு எளிமையானது
மிகச் சிறியது  தூய்மையானது உண்மையானது

ஆனால் நீ கொடுக்கும் எல்லாம் மிகப்பெரியது பிரமாண்டமானது ஒப்பனையானது பாசாங்கானது உண்மையுற்றது 

ஒரு வகையில்
 நான் ஒரு அன்பு முட்டாள்
 இதை புரிந்து கொள்ள எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டிருக்கிறது எனக்கு 

ஒரு நாளில் புரிந்து கொண்டேன் 
'ஒரு குழந்தையை மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல்' என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் என்பதை.

-பூமி.சாமி.
படித்துக் கொண்டிருக்கும் 
புத்தகப் பக்கங்களில் 
எறும்பு ஒன்று உலவிக் கொண்டிருக்கிறது

ஒருவேளை
இனிப்பான வார்த்தைகளை தேடுகிறது போலும் 

அந்தப் பக்கம் படித்து முடித்த பின்
எறும்பு இறங்கி செல்லும் என காத்திருக்கிறேன்

 நீண்ட தேடுதலுக்கு பின் இறங்கி செல்கிறது எறும்பு 

 நான் அடுத்த பக்கத்தில் தேடுதலை துவங்குகிறேன்.

-பூமி.சாமி.

Sunday, October 19, 2025

அனைவருக்கும் 
இனிய தீபாவளி திருநாள் 
நல்வாழ்த்துகள்.🧨💥🧨💐

Saturday, October 11, 2025

இந்த மலைக்கு 
வரும் எல்லோருக்கும் 
கொடுக்க எதோ ஒன்று
அதனிடம் இருந்து கொண்டே இருப்பதுதான் 
ஆச்சரியம்‌.

பூமி.சாமி.



Sunday, October 5, 2025

வார்த்தையில்
'வாவ் ' இருக்கும்வரை 
வாழ்கிறாய்.

-பூமி.சாமி.

Saturday, October 4, 2025

உங்கள் நடிப்போ நாடகத்தனமோ
தேவையில்லை எனக்கு 

உண்மையான 
ஒரு துளி அன்போ
அல்லது 
ஒரு துளி வெறுப்போ கூட போதும்.


-பூமி.சாமி.



Friday, October 3, 2025

இன்னும் கொஞ்சம்......


இன்னும் கொஞ்சம் நேரம் 
கடல் அலையில் 
கால் நனைத்து இருந்து இருக்கலாம் 

இன்னும் கொஞ்சம் நேரம் 
முழு நிலவு வெளிச்சத்தில் நனைந்து நடந்து இருக்கலாம்

அந்த மரத்தோடு 
இன்னும் கொஞ்சம் நேரம் செலவிட்டு இருக்கலாம்

அவர்களிடம் இன்னும் கொஞ்சம் அன்பாய் இருந்து இருக்கலாம் 

அந்த பயணத்தை இன்னும் ஒருநாள் நீடித்து இருக்கலாம்

அவர்களோடு இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம்

இப்படி பல 'இன்னும்' களோடு அலையும் மனசை

இக்கணத்தில் 'இன்னும்' கொஞ்சம் 
இருக்கலாம் என்று அழைக்கிறேன்

காதில் வாங்காமல் 
கடந்த காலத்திலேயே அலைகிறது மனசு.

-பூமி.சாமி.




உணரும் எல்லா உணர்வுகளுக்கும்
ஒரு பெயர் இருக்க வேண்டும் என்றோ
பழகும் எல்லா உறவுகளுக்கும்
ஒரு வகைப்படுத்தலில் 
அடங்க வேண்டும் 
என்றோ கட்டாயம் இல்லை.

-பூமி.சாமி.

Monday, September 29, 2025

உங்கள் தாய் மொழியை
போற்றி பாதுகாத்து
அடுத்த தலைமுறைக்கு
கடத்துவதற்கு ஒரே வழி
அதை பேசுவதும்
எழுதுவதும் தான்.

-பூமி.சாமி.

சிடுமூஞ்சி என்பார் 
சிரிக்க தெரியாதவன் என்பார் 
திமிரு பிடித்தவன் என்பார் 
பழக தெரியாதவன் என்பார் 
'Introvert' என்பார் 
இவையெல்லாம் 
மாற்றும் மந்திர செயல்
தெரியுமா உனக்கு? 

அதுதான் 'புன்னகை'
பொன் நகை இருக்கிறதோ இல்லையோ 
நிச்சயம் 'புன்னகை' யை கட்டாயம் 
அணிந்து கொள்
உன்னையும் மாற்றும்
உன்னை சுற்றி உள்ள உலகத்தையும்
மாற்றும்.

-பூமி.சாமி.

Tuesday, September 23, 2025

பல நேரங்களில் நம் மனதில் 
அன்பும் 'Ego' வும்
போட்டி போடுகிறது
எதை தீனி போட்டு வளர்க்கிறோமோ
அவை வெற்றி பெறுகிறது.

-பூமி.சாமி.

Thursday, September 18, 2025

புத்தகங்கள்
இயற்கை 
கடவுள்
இவற்றில் ஏதோ ஒன்றை
பற்றிக் கொள்கிறேன்,
மனிதர்கள் கைவிடும் போதெல்லாம்.

-பூமி.சாமி.

Sunday, September 14, 2025

தன்னை தாங்கும் தாங்கும் 
தண்ணீரின் திவலைகளையே
தள்ளிவிடுகிறது 
தாமரை இலை.

-பூமி.சாமி.

Friday, September 5, 2025

சுயநலம், பணம் 
பிரதானமாகி 
போன இடங்களில் 
அன்பு, பாசம்,  உணர்வு எல்லாம் வெறும் பாசாங்கு தான்  
அங்கெல்லாம்
 உண்மையை எதிர்பார்த்தோ
 உண்மையாகவோ இருக்க விரும்பினால் முட்டாள்தனம் தான்.

-பூமி.சாமி.

Sunday, August 31, 2025

ஒரு கோவில் திருவிழா
குச்சி சேமியா ஐஸ் விற்கிறது 
வாங்கி சாப்பிட  ஆசைப்படுகிறது 
நம் குழந்தை மனம் 
எல்லோரும் பார்ப்பார்கள் என்று அச்சப்படுகிறது மெச்சூரிட்டி அறிவு உண்மையாக 'வாழ்வது ' என்பது 
இப்படித்தான் கைநழுவி போகிறது 
பல நேரங்களில்.

-பூமி.சாமி.

Saturday, August 30, 2025

நீ என்னையும்
நான் உன்னையும்
பழிவாங்க நினைத்து 
சிலவற்றை செய்ய போய் 
நம் வாழ்வை பழி கொடுத்து விடுகிறோம்.

-பூமி.சாமி.

Tuesday, August 26, 2025

எல்லாம் 
நடிப்பு என்று 
உணர்ந்த 
தருணத்தில் 
என்னை அறியாமல் 
நானும் 
நடிக்க தொடங்கி இருந்தேன்.

-பூமி.சாமி.

Saturday, August 23, 2025

உனக்கு 
ஓர் இடர் என்றால் 
துன்பம் என்றால் 
மனதின் வலி என்றால்
வலிய வந்து உன்னருகில்
நின்று கொள்கிறேன் 

இவையெல்லாம் 
எனக்கு வந்தால் 
என்னருகில் நானே 
நின்று கொள்கிறேன்.

-பூமி.சாமி.

உங்களை நீங்களே 
பாராட்டி கொள்ளவும் 
தேற்றி கொள்ளவும் 
பழகிக் கொள்ள வேண்டும் 
என்பதுதான் 
இவ்வுலகின் 
நிதர்சனமான உண்மை.

-பூமி.சாமி.

Tuesday, August 19, 2025

அவளின் மனதில் என்ன நினைக்கிறாள்
என்று ஒரு " promt type" பண்ணினேன் 
ஞே  என்று "hang" ஆனது AI.

-பூமி.சாமி.

Sunday, August 17, 2025

உனக்கு வந்தால் இரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னியா?

நீ எனக்கு கொடுத்த 
அதே வார்த்தைகள் தான் 
பத்திரமாய் வைத்து 
உரிய நேரத்தில் 
உனக்கே திருப்பி தருகிறேன் 
ஆனால் 
அது உன்னை காயப்படுத்துவதாய்
சொல்கிறாய்.

-பூமி.சாமி.

Wednesday, August 13, 2025

நம் மீது பிறர் வைக்கும் அன்புக்கு ஏதாவது 'காலாவதி தேதி' இருக்குமோ?

அது ஒரு நாளா, மாதமா,
இல்லை சில வருடமா?
அது ஆளைப் பொருத்து மாறும் என்றாலும்,
ஏதாவது பொதுவான விதி இருக்கும் தானே?

சிந்திக்கையில் 'நாம் தேவை இல்லை' எனும் நாளே
அன்பு தீர்ந்து போகும் நாளாக இருக்கிறது பெரும்பாலும்.

-பூமி.சாமி.

Tuesday, August 12, 2025

"Money" 
தேடலில் 
மக்களை தொலைத்து
'Money' யோடு
 பிணியையும் தேடி
மக்களற்று 
மாக்களாய் 
மரணித்தலில் 
முடிகிறது மானிடனின்
வாழ்க்கை.





-பூமி.சாமி.

Saturday, August 9, 2025

இந்த நாய்
எவ்வளவு அவமான பட்டாலும் 
அங்கேயே போய் நிற்கிறது 
எவ்வளவு அசிங்கப்பட்டாலும்
அங்கேயே வாலாட்டி நிற்கிறது 
ஒரு துண்டு பிஸ்கட் கிடைக்காது எனினும் 
உமிழ்நீர் நாக்குடன் நிற்கிறது 
அவர்களுக்கு பயன்பட்டு
பயனற்று நிற்கிறது 
இந்த நன்றியுள்ள நாய்.

 -பூமி.சாமி.

Friday, August 8, 2025

ஜன்னல் வழி எட்டி பார்த்து 
உன் சிரிப்பிலிருந்து 
எப்படி மலர்வது என்று 
கற்றுக் கொள்கிறது ஒரு ரோஜா மொட்டு.

-பூமி.சாமி.


உன் அன்பு
அக்கறை 
கண்கள் 
சிரிப்பு 
மேலும் இன்னும் இரண்டு 
இவையெல்லாம்
உன்னில் பேரழகு சகி.

Wednesday, August 6, 2025

இரு கைகளையும் 
தோள் வலிக்கும் அளவுக்கு 
வானத்தை நோக்கி 
விரித்து காட்டுகிறேன்,

உன்னை எவ்வளவு பிடிக்கும்
என்ற கேள்விக்கு பதிலாய்.

-பூமி.சாமி.
உன்னை எவ்வளவு பிடிக்கும்,
சொல்ல தெரியாது,
செயலில் சொல்ல முயல்கிறேன் 
செய்து கொண்டும் இருக்கிறேன்,
உணர்வாய் ஒருநாள்.

-பூமி.சாமி.


Tuesday, August 5, 2025

செய்த உதவியையும்
உதவி பெற்றவரையும்
உடனே மறந்து விடுவது
உள்ளத்திற்கும் உணர்விற்கும்
நல்லது.

நமக்கு உதவியவரையும்
பெற்ற உதவியையும் 
உலகம் உள்ளவரை 
உள்ளத்தில் உணர்வோடு
வைப்பது உள்ளபடி நல்லது.

-பூமி.சாமி.


Sunday, August 3, 2025

நீ எனக்கு கொடுக்க நினைத்து
கொடுத்தால்
 நிறைய எதிர்பார்ப்பான்
என்று கொடுக்க மனமில்லாமல் போன
என் உடைமைகளின்
பட்டியல்  இதோ 

 பாராட்டுக்கள் 
கோபங்கள் 
புன்னகைகள்
கைகுலுக்கல்கள் 
கைகோர்ப்புகள் 
மெஸேஜ்கள்
அழைப்புகள்
அணைப்புகள்
முத்தங்கள் 
நன்றிகள் 
வாழ்த்துக்கள்
திட்டுகள்
மன்னிப்புகள்
அடிகள் 
இப்படி எத்தனையோ 

 நேரம் வரும்போது 
நினைவு வரும்போது 
அதற்கான தருணங்கள் வரும்போது
என்னிடம் சேர்ப்பித்து விடு சகி

இல்லை எனில் 
 அதுவே ஒரு நாள் உனக்கு பாரமாகும்

 பின்குறிப்பு :
பட்டியலில் இல்லாத 
சொல்லப்படாத பல என் உடைமைகள் உன்னிடம் இருக்க்கூடும்
அவைகளையும் கொடுத்துவிடு சகி.

நான் உனக்கு கொடுக்க நினைத்தவை எல்லாம் 
அந்த அந்த நேரத்தில் சற்று கூடுதலாகவே கொடுத்து இருக்கிறேன் சகி.
என்னிடம் உன்னுடையவை ஒன்றுமில்லை 
உன் நினைவுகளை தவிர.

- பூமி.சாமி
கதகதப்பை கொடுக்கும் 
நம்பிக்கை அளிக்கும்
நான் இருக்கிறேன் என்று உண்ர்த்தும்
துயரம் துடைக்கும் 
உன்னை விட்டு கொடுக்க மாட்டேன் என்று உறுதியளிக்கும்

இத்தனை செய்கிறது 
ஒரு அக்கறையானவரின் 
கைகோர்ப்பு.

-பூமி.சாமி.


Saturday, August 2, 2025

அன்பு

சில அன்பு புன்னகையுடன் முடிந்து விடுகிறது
சில அன்பு பார்வைகளுடன் பக்குவமாய் நின்று போகிறது 
சில அன்பு பயண முடிவில் இறங்கிக் கொள்கிறது 
சில அன்பு கல்வி சாலையுடன் நின்று விடுகிறது 
சில அன்புகள் தேவை தீர்ந்தபின் தீர்ந்து போகிறது 
சில கொடுக்கல் வாங்கலுடன் நீர்த்து போகிறது 

சில அன்பு சில அலுவல்களுடன் அஸ்தமனம் ஆகிகிறது

சில அன்பு இடம் மாறுதலில் முடிவுக்கு வருகிறது 

சில அன்பு காதலாய் சில வருடங்கள் வருகிறது
சில அன்பு நட்பாக பல வருடங்கள் நீள்கிறது

 சில காதலாக வாழ்வாக வாழ்வின் இறுதிவரை வருகிறது

சில அன்பு மாண்ட பின்னும் 
நம்மை நினைவில் கொள்கிறது 

சில கணங்களில் முடிந்தாலும்
காலம் முழுவதும் வந்தாலும் காலத்திற்குப் பின் நின்றாலும்
அன்பு அன்பு தான் 
அது ஒன்றுதான் 
வாழ்வதற்கான அச்சாணி.

-பூமி.சாமி.

Friday, August 1, 2025

யாரும்
எதுவும்
இல்லாமல் 
வாழ 
பழகி கொள்வது
மனதிற்கு நல்லது.

-பூமி.சாமி.

Tuesday, July 29, 2025

நீ வெடுக்கென்று எழுந்து 
சென்றது
என் மனதை சுருக்கென்று குத்தியது
காயத்தை ஆற்ற வந்து காயப்பட்டு போனேன் சகி.
உன்னுடன் கைக் கோர்த்துக் அமர்தல்
என் மனதிற்கு மருந்து அவ்வளவுதான் சகி.

-பூமி.சாமி

கை கோர்த்து அமர்ந்து 
மணிநேரம் மனம் விட்டு பேச
மனதின் மலை துயரங்களை
அகற்றும் மந்திரம் தெரிந்த
மாயாஜால மந்திரக்காரி நீ.

-பூமி.சாமி

Monday, July 28, 2025

அக்கறையின் மகள் நீ
அன்பில் தாய் நீ
அறிவில்  சூரியன் நீ
அழகில் சந்திரன் நீ
மனசில் மாசிலன் நீ
சிரிப்பில் வெகுளி   நீ
பேச்சில் வெள்ளந்தி  நீ
பாசாங்கில்லா பாசம் நீ
நட்பின் இலக்கணம் நீ
கனிவில் நேத்ரம் நீ
புன்னகை குழந்தை நீ
பாச மகளே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
வாழ்க வளமுடன்.

-அன்புடன் பெரியப்பா.



Saturday, July 26, 2025

ஆஸ்கார் அவசியம் 
அளிக்கப்பட வேண்டும் 
நம்மருகில் இருக்கும் சிலர்க்கு.

-பூமி.சாமி.

Friday, July 25, 2025

உன் அன்பு அக்கறை
அடை மழையில் நனைந்தவன் நான் 

ஏனோ இப்பொழுதெல்லாம் சாரலாய்
பெய்கிறாய் சகி

எவ்வளவு நாள் பெரும் மழையை குடையால் மறைக்க முடியும் 

உன் அக்கறை அடை மழை மீண்டும் 
பொழியும்  நாள் 
 கட்டாயம் வரும், காத்திருக்கிறேன் சகி.

-பூமி.சாமி.




Tuesday, July 22, 2025

 நான் எடுக்கும் புகைப்படங்கள் 
என்னுடைய எண்ணங்கள் 
என் சிந்தனைகள் 
நான் என்ன சாப்பிடுகிறேன் 
எப்பொழுது தூங்குகிறேன்
அன்றாடம் நடக்கும் அனைத்தையும்
பகிர்ந்து விடுகிறது உன்னிடம் 
என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை 
உன்னை தவிர.

-பூமி‌.சாமி.

Monday, July 21, 2025

உலகம் உன்னை என் சொன்னாலும் 
உன் உன்னதம் எனக்கு மட்டுமே தெரியும் 
ஆயிரம் புறங்கூறல்ககளை புறந்தள்ளி 
அகமாய் அணைத்து கொள்கிறேன் 
ஏனெனில் 
உன் அன்பும் அக்கறையும் அப்படி.

-பூமி.சாமி.


Saturday, July 19, 2025



அக்கறை தந்தாய்
 அளித்தாய் அளவற்ற அன்பை 
ஒவ்வொரு கணமும் விசாரிப்பு
காந்த சிரிப்பு 
புன்னகைக்கும் விழி
மந்திர குரல்
மலர்ந்த முகம் 
இவை எல்லாம் தந்த
நீ

ஒவ்வொன்றாய் நிறுத்தி கொண்டாய்
கரையில் போட்ட மீனை போல் துடிக்கின்றேன்.
ஒவ்வொன்றாய் தருவாயா மீண்டும் 
நீ(ர்) சேர்ந்து உயிர் பிழைக்க.

பூமி.சாமி.



Thursday, July 17, 2025


இணை
பிரிவதும் இல்லை
சேர்வதும் இல்லை 

ரயில் பாதை.

-பூமி.சாமி.

Monday, July 14, 2025

பயணத்தின் புகைப்படங்கள் 
அனுப்ப சொன்னேன்
இருநாட்டை இணைக்கும் ஒரு பாலத்தின் படம் அனுப்பியிருந்தாய்
நம் இருவரிடையே நம்பிக்கை பாலம்
எவ்வளவு சிதைந்து போய் கிடக்கிறது 
என்பதை 
நீ அனுப்பாத அவ்வளவு புகைப்படங்களும் உணர்த்தின எனக்கு.

-பூமி.சாமி.

காத்திருப்பின் வலி

இரவு உணவு கூட
முன்னமேயே எடுத்து விட்டேன் 
பிற அழைப்புகளை அந்த நேரம் தவிர்த்து விட்டேன் 
பிற வேலைகளையும் சற்று தள்ளி வைத்து விட்டேன்
காத்திருந்தேன் நீ சொல்லிய நேரத்தில் 
கடைசிவரை அழைக்கவில்லை நீ.

-பூமி.சாமி.

Saturday, July 12, 2025

சாமி படம் அனுப்பினேன் 
உடனே கும்பிடும் கை வந்ததது

நான் காலை அனுப்பிய 
செய்திக்கு இதுவரை 
வரவில்லை ''Reply'

ஏனெனில் சாமி என்றால் 
உன் கண்ணை குத்தி விடும்

எனக்கு Reply பண்ணவில்லை 
என்றால் என் நெஞ்சு குத்தப்படும்
என்று அறியாதவள் இல்லை நீ.

-பூமி.சாமி.

தேவதை

என் மனதின் தேவதை அவள்
என் பல குழப்பங்களை தெளிய வைப்பாள் 
ஆனால் தன்னை தானே குழப்பிக் கொள்வாள்
எல்லோர் மீதும் அக்கறை கொள்வாள் 
ஆனால் தன்மீது அக்கறை கொள்ளாள் 
அவள் ஒழித்து வைத்து கொடுக்கும் 
அன்பும் அக்கறையும் அவ்வளவு அழகு அவளை போலவே
நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம் அவள் சிரிப்பையும் 
கண்களையும் 
உண்மையில் தேவதை அவள்.

-பூமி.சாமி.


Thursday, July 10, 2025

வாள் என்ன வாள்
துப்பாக்கி என்ன பெரிய துப்பாக்கி 
அதை விட பெரிய ஆறாத காயத்தை ஏற்ப்படுத்த வேண்டுமா
பயன்படுத்தி பார் 
ஒரு காயப்படுத்தும்  'சொல்லை',
அவன் ஆயுலுக்கும் ஆறாது ரணம்.

-பூமி.சாமி.

Wednesday, July 9, 2025

மனம் மலராக
இருப்பவரை கவிதை 
தொந்தரவு செய்யும் 
மனம் முழுவதும் 'மணியாய்'
 இருப்பவரை
கவிதை 'ம....' கூட புடுங்காது.

-பூமி.சாமி.

Tuesday, July 8, 2025

பயணத்தின் போது 
எடுத்த புகைப்படங்கள் 
அனுப்பு என்றேன்
ஒரு பாலத்தின் படத்தை
அனுப்பினாய்
ஏதோ ஒன்றால் அடித்தது போல்
இருந்தது.

-பூமி.சாமி.


Monday, July 7, 2025

கடைசி வரை
சேராத தண்டவாளமாய்
இருப்போம்
காதல் இரயில் பயணிக்கட்டும்.
காதல் 
வெற்றி பெற்றால்
செத்துப் போகிறது 
தோல்வி அடைந்தால்
உயிர்ப்போடு இருக்கிறது.


அசிங்கப்படுத்தியும் 
ஆவமானங்களையும் தாண்டி 
உன் பின்னே நாய் போல் 
ஒரு அன்பு வந்து கொண்டு இருந்தால்
அதை இழந்து விடாதே.
அது உன்னைதான் உலகமாய்
நினைத்து கொண்டு இருக்கும்.

-பூமி.சாமி.
என்றோ ஒருநாள் 
என்னோடு கை கோர்த்து 
அமர்ந்து பேச வேண்டும் 
என்று உனக்கு தோன்றும் 

நான் அன்று 
இவ்வுலகில் இருக்க வேண்டும் 
என்று அவசியமில்லை 
உன் இடப்பக்கமாய்
இடது கையால் துலவிப்பார்
அங்கேதான் என் வலதுகை
உன் கை கோர்ப்புக்காக
எப்போதும் காத்துக் கிடக்கும்.

-பூமி.சாமி.


Sunday, July 6, 2025

Gap between 
'Reel life'
and  'Real life'
Makes the current generation stressful.


 

நம் வீட்டருகில்
கூவிக்கொண்டே இருக்கும்
 இந்த குயில்களுக்கு வாய் வலிக்காதா?
என்று கேட்கிறாள் சகி,
இந்த கேள்வி குயில்கள் 
பற்றியது இல்லை 
என்று தெரிந்தே  பதில் சொல்கிறேன் நான்.🤣

-பூமி.சாமி.
என் விரல்களின் இடைவெளியை
கனகச்சிதமாய் நிறைவாய் 
நிறப்பிடும் விரல்கள் 
உன்னுடுதாய் தான் இருக்கும் 
உன்னுடன் கோர்பதற்காக நீட்டப்பட்ட
என்னுடைய கரம் அப்படியே 
காத்து கிடக்கிறது 
என்றோ வந்து நிறைத்துடுவாய்
என்ற நம்பிக்கையில்.

பூமி.சாமி.

Friday, July 4, 2025

எவ்வளவோ முயன்றேன்
முடியவில்லை 
கடைசியில்தான்
தெரிந்தது
அது நாய்வால் என்று.

-பூமி.சாமி‌

Sunday, June 29, 2025

நமக்கு நிறைய பயன்படுவது
இரும்பு தான் 
ஆனால் அதன் மதிப்பு தெரிவதில்லை 
ஏனெனில் எளிதாக கிடைக்கிறது 

தங்கம் குறைவாக. பயன்படுகிறது ஆனால் மதிக்கப்படுகிறது 
ஏனெனில் அரிதானது.

நீங்கள் 
தங்கமாக போற்றப்பட்ட வேண்டுமா
இரும்பாக பயன்பட வேண்டுமா
என்பதை முடிவு செய்து
செயல்படுங்கள்.
காயப்படமாட்டீர்கள்.

பூமி.சாமி.




Saturday, June 28, 2025

எப்பொழுதும் 
வெற்றி 
பெற்றவர்களுடன்
நான் இருக்க
விரும்புவது இல்லை 
மேலும் 
அவர்களுக்கு நான் 
தேவையும் இல்லை 

வெற்றி தாமதமானவர்களுடன்
 தான் நிற்கிறேன் 
தாமதம் தடையும் இல்லை 
முடிவும் இல்லை 

எது தவறு என்று கண்டுபிடி
திருத்திடு திட்டமிடு
கற்றலை விரிவுப்படுத்து
நிலையான பயிற்சி செய்
மேலும் முயற்சி செய்
உலகால் முடியும் என்றால் 
உன்னாலும் முடியும் 
நான் உன்னோடு இருக்கிறேன்.

-பூமி.சாமி.

Thursday, June 26, 2025

அது ஒரு திங்கட்கிழமை 
என்னுடன் தனியாக இருந்ததால் 
அவசர அவசரமாய் அங்கிருந்து அகன்றாய்
நான் தனியாக இருக்கும் வரை
அவ்விடம் வரவில்லை 
ஆனால் என்மீது நம்பிக்கை 
இருப்பதாய் சொன்னாய்
நான் நம்பவில்லை 
அந்த தீராத காயம்
ஒருநாள் ஆறும்
நம்பிக்கை என்பது
சொல் அல்ல செயல் 
அக்கறையின் அன்னையே.

-பூமி.சாமி


Wednesday, June 25, 2025

இங்கு 
யாரும் உங்களை நிரூபிக்க 
சொல்லி கேட்பதில்லை,
நீங்களே உங்களை நிரூப்பிக்க முயல்கிறீர்கள்,
உங்கள் நிரூபித்தலை
யாரும் இங்கு கண்டுக் கொள்ள போவதில்லை
அப்படி கண்டுக்கொண்டாலும் 
நம்ப போவதில்லை,
உங்கள் வாழ்க்கையை
உங்களுக்காக வாழுங்கள்,
யாருக்கும் எதற்கும் உங்களை 
நிரூபிக்க வேண்டுய அவசியமில்லை.

-பூமி.சாமி.

Tuesday, June 24, 2025

மன்னிப்பு


என்னருகில் வந்து அமர தயக்கம் 
நான் இருக்கும் இடம் வர தயக்கம் 
என்னுடன் பயணப்பட தயக்கம் 
என் கண் பார்க்க தயக்கம் 
என்னிடம் பேச தயக்கம் 
இப்படி பல தயக்கங்களை காண்கிறேன் உன்னிடம் 
ஒவ்வொரு தயக்கமும்
என் மனதை நொருக்குகிறது
நான் உன் செக்க சிவந்த கரம் கோர்க்க நினைத்தது என்னவோ
என் துயரங்களின் வலிகளை கரைத்துக் கொள்ளத்தான் 
வேறு நோக்கம் ஒன்றும் இல்லை 
வேண்டும் எனில் மீண்டும் ஒரு மன்னிப்பை கண்ணீருடன்
உன் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.




Sunday, June 22, 2025

நீ நல்லவனா நடிக்க செய்யும்
முயற்சியில் 
பாதி செய்தாலே
நல்லவனா ஆகி விடலாம்
என்று சொன்னது அனுபவம்.

-பூமி.சாமி.

நம்பிக்கை சொல் அல்ல, செயல்

உன் மேல் நம்பிக்கை 
இருக்கிறதாய் சொன்னாய்
நம்பவில்லை,
என்னை நம்பி வந்தாய்
நம்பினேன்.

-பூமி.சாமி.


பிறருக்கு யோசனை சொல்வதையோ
ஏதோ உதவ முனைவதையோ
உனக்கு இது 'தேவை இல்லாத வேலை'
என்று சொல்லி தடுக்க முயற்சிக்கிறது 
மனசு.

-பூமி.சாமி.

Friday, June 20, 2025

இன்னிசையுடன் 
இளங்காலை பயணம் 
இதமான மருந்து 
மனதுக்கு.


பூமி.சாமி.
நமக்கே தெரியும் 
நாம் செய்யும் சில விஷயங்கள்
"தேவையில்லாத ஆணி" என்று 
அதுவும் வாழ்க்கைக்கு அழகு 
என்பது அப்புறம்தான் தெரியும்.

-பூமி.சாமி.

வாழ்க்கை

என்னிடம் எனக்கான களிமண் 
அதை என் விருப்பப்படி
எனக்கு பிடித்த மாதிரி 
ஒரு உருவம் செய்ய முயற்சி செய்கிறேன் 
இதில் உங்களை பார்த்து செய்ய
ஒன்றும் இல்லை 
இது அழகோ நகலோ இல்லை 
ஆனால் தனித்துவமானது
அது போதும் எனக்கு.

பூமி.சாமி.

Thursday, June 19, 2025

கேட்காத கேள்விக்கு பதில் 
அளிப்பதும்
கேட்காமல் அறிவுரை சொல்வதும்
மதிப்(பை)பெண் தராது.

பூமி.சாமி.

Wednesday, June 18, 2025

முதலில் 2.30 வருவதாய் சொன்னாய்
பின்பு 3 என்றாய்
அதன் பிறகு 3.30 என்றாய்
வந்ததோ 4 க்கு வந்தாய்
கேட்டால் ஒன்றரை மணி நேரம் தானே
என்கிறாய்
காத்திருக்கும் எனக்கோ அது ஒரு யுகம் என்று
எப்படி புரிய வைப்பது உனக்கு.

-பூமி.சாமி.

உலகின் விலை உயர்ந்தது
அரிதினும் அரிதானது
நேசத்திற்குரியோரின்
நேரம் தான்
அதன் விலை அதற்காக காத்து கிடப்போர்க்குதான் தெரியும்.

பூமி.சாமி.

Tuesday, June 17, 2025

முதிர்ச்சி

முன்பு காயப்படுத்துவேன்
இப்போது காயப்பட்டுக் கொள்கிறேன்.
கோபத்தில்.

-பூமி.சாமி.
முன்பு கோபம் வந்தால்
காயப்படுத்துவேன்
இப்போது 
அமைதியாகி
என்னை நானே காயப்படுத்திக் கொள்கிறேன்.

-பூமி.சாமி.
ஒரு மனிதன் 
இன்னொரு மனிதனை உணர்வுபூர்வமாக கேவலமாக
நடத்துவது
 அவனது சுயமரியாதையை அசிங்கப்படுத்துவது தான்.




Sunday, June 15, 2025

வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு... -பாலகுமாரன்

பாலகுமாரன் விகடனில் எழுதிய 'வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு.
இந்தியாவின் உயிர்நாடி இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் குடும்பம் என்கிற அமைப்பில்தான் இருக்கிறது.

குடும்பமற்று தனியே வாழும் மனிதரை அவர் துறவியாக இருந்தாலொழிய இந்திய மக்கள் பெரிதும் சிலாகிப்பதில்லை. குடும்பம் என்ற விஷயத்தின் பொறுப்புகளை ஏற்று, பொறுமையாகப் போராடி, வாழ்க்கையின் பாதிக்கு மேற்பட்ட வயதைத் தாண்டி, வெற்றிகரமாக நடந்திருக்கும் கிட்டத்தட்ட என் வயதிருக்கும் உங்களிடம் சில விஷயங்களை உரத்து சிந்திக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

வெகுநாள் கழித்து என்னைச் சந்தித்த நண்பர், ‘நான் எதுவும் உன்னைப்போல் சாதிக்கவில்லை. மூன்று பெண் குழந்தைகள். இருவருக்குத் திருமணம் செய்துவிட்டேன். மூன்றாவது பெண்ணுக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்’ என்றார்.

‘இது போதுமே, இதைவிட பெரிய சாதனை வேறு எது இருக்கிறது?’ என்று அவரை நோக்கி கைகூப்பினேன். அந்த நண்பரும் அவர் மனைவியும் அந்த மூன்று குழந்தைகளை ஓர் உயர்நிலைக்கு கொண்டுவர எத்தனை போராடியிருப்பார்கள் என்பது எனக்குத் தெளிவாகப் புரிகிறது.

எனக்கும் கிட்டத்தட்ட ஐம்பத்துநான்கு வயது ஆனதால், எனக்கும் வயதுக்கு வந்த குழந்தைகள் இருப்பதால் இந்த விஷயம் மிகப்பெரிய சாதனையாகவே தோன்றுகிறது. 

பெற்றோர்களின் தியாகங்கள் இல்லாமல் எந்தக் குழந்தையும் உயர்நிலைக்கு வந்துவிடுவதில்லை. வெறும் சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. பள்ளிக்கூட சம்பளமும் பாடப்புத்தகங்களும் மட்டுமே அவர்களுக்கு பலம் கொடுத்துவிடாது. நல்லன சொல்லிக் கொடுத்தும் அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்க செய்வதுமே குழந்தை வளர்ப்பின் முக்கியமான அங்கமாக இருக்கிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற குழந்தைகள் பிற்காலத்தில் சாதனை படைக்க பலமுள்ளவர்களாகிறார்கள்.

கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்வதின் வித்து அநேகமாக பெற்றோர்களிடமிருந்துதான் வருகிறது. அவர்களுடைய அடக்குமுறையும் அதிகார நடவடிக்கையும்தான் அவற்றுக்கு உரமாகின்றன.

என் மத்திம வயதில் சந்தித்த அந்த மனிதரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவரோடு வேலை நிமித்தம் நெருங்கிய பழக்கம் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. அவர் கணக்கில் புலி. மெல்லிய ஆங்கில மேதமை உடையவர். நிர்வாகத்திறன் உடையவர். கடுமையாக உழைப்பவர். புத்திசாலி. பேசிப் பேசி ஆட்களை எடைபோடும் சாமர்த்தியசாலி.

அந்தக் கெட்டிக்கார மனிதருக்கு ஒரு கெட்டிக்கார மனைவி துணையாக வாய்த்தாள். அவருடைய வளர்ச்சிக்கு அந்தப் பெண்மணி மிக முக்கியமான காரணமாக இருந்தாள்.

அவர்களுக்கு ஒரு மகனும் பிறகு ஒரு மகளும் பிறந்தார்கள். சிறப்பாக வாழ்ந்தார்கள். வாழ்க்கையின் வெற்றிப்படிகளில் கால் வைத்து எகிறி எகிறி போய்க்கொண்டிருந்த அந்த மனிதர் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தவர். கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்காதவர்.
அவர் குழந்தைகள் நன்கு படித்தார்கள். குறிப்பாக, அந்தப் பெண் குழந்தை அற்புதமாக படித்தாள். அவள் பள்ளிக்கூடத்தில் முதலாவதாக வருவதையும் படிப்பில் மிக கெட்டிக்காரியாக விளங்குவதையும் அவரால மற்றவரோடு பகிர்ந்துகொள்ளாமல் இருக்கமுடியாது. அவர் மகளையும் மகனையும் பாராட்டியே அவரிடம் கடன் வாங்கிக் கொண்டு போனவர்கள் அதிகம் பேர்.

குழந்தைகளின் பருவ வயதுக்கு முன்பு குமாஸ்தாவாக இருந்த அந்த நண்பர் குழந்தைகள் பருவமடைந்த கால கட்டத்தில் அதிகாரியாக மாறினார். பொறுப்புகள் அதிகரித்தன. வீட்டோடு செலவழிக்கும் நேரம் குறைந்தது. ஆனால் வருமானம் பல மடங்கு அதிகரித்தது. வீட்டோடு தன்னால் இருக்க முடியவில்லையோ என்ற ஏக்கத்தை அவர் வேறுவிதமாக ஈடுகட்ட விரும்பினார். காசை வீசியெறிந்து, பொருள்கள் வாங்கி வந்து குழந்தைகள் திகைத்து நிற்பதைக் கண்டு சந்தோசப்பட்டார்.

அதிகாரம் அதிகரித்துக் கொண்டே போக, காசு பலவழிகளில் வந்தது. ரூபாய் நோட்டுகளை எண்ணி கட்டுக்கட்டாய் வைக்க பிள்ளை ஆசைப்பட்டான். கற்றுக் கொள்ளட்டும் என்று அப்பாவும் அனுமதித்தார். காசின் திசை தெரிந்த பிள்ளைக்கு படிப்பு வேகமாக வரவில்லை. ஆனால் விலகியிருந்த பெண் படிப்பில் நல்லபடி தேறினாள்.

மகனும் மகளும் கல்லூரிக்கு வந்த நேரத்தில் அவர் இன்னும் உயர் பதவிக்குத் தாவினார். இன்னும் அதிகம் சம்பாதித்தார். வீடு அவரை தெய்வமென்று கொண்டாடியது.

ஒரு பெரிய தொழிற்சாலையே கட்டித் தூக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்ததால் குடும்பத்தைப் பற்றி அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. மனைவி பார்த்துக்கொள்வார் என்று முழுமனதாக நம்பினார்.

மனைவியோ குழந்தைகளே தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணிக்கொண்டாள். குழந்தைகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டார்கள். பெண் பக்கத்துவீட்டுப் பையனைக் காதலித்து ஓடிப் போனாள். பையன் குடிப்பதற்கும் சூதாடுவதற்கும் கற்றுக்கொண்டான்.

வளர்ந்துகொண்டே போன அவரது வாழ்க்கை குழந்தைகளால் அடிபட்டது. அவர் மனைவியைக் குற்றம் சாட்டினார். மனைவி அவரைக் குற்றம் சாட்டினார். இன்று வரையிலும் அந்த விஷயம் சரியாகவில்லை. அந்தக் குழந்தைகள் அவரவர் போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டபோதிலும் என்னுடைய நண்பருக்கு தன்னுடைய வாழ்க்கை மிகப்பெரிய தோல்வி என்பதாகவே இன்னமும் ஓர் உணர்வு இருக்கிறது.

குழந்தைகளோடு அந்நியப்படுதல் கூடாது என்பதை இந்த நண்பரின் வாழ்க்கை எனக்கு சொல்லிக் கொடுத்த்து. காசு சம்பாதிப்பதில் தன்னை இழந்து, தன்னை இழந்ததன் மூலம் தன் குடும்பத்தையும் இழந்த பல கதைகள் இங்கே இடைவிடாது நடைபெறுகின்றன. ஆயினும் காசு வேட்டை குறைந்ததாகச் சரித்திரம் இல்லை. குழந்தைகளோடு பேசிச் சிரிக்கிற சந்தோஷத்தைக் காசு வேட்டையிலுள்ள எந்த பெற்றோராலும் கவனித்து நடத்த முடியவில்லை. குழந்தைகளோடு பேசுவது முக்கியம் என்பது குழந்தைகள் உதறி விலகிய பின்னர்தான் பல பெற்றோர்களுக்குப் புரிகிறது.

வயிறு நிறைய சோறும் உடம்பு நிறைய நகையும் பீரோ நிறைய துணிமணிகளும் சந்தோஷமாகாது.

‘இது யார்? உன்னுடைய நண்பனா? அவனை இங்கே கூப்பிடு. நண்பா…உன் பெயரென்ன? உன் தந்தை என்ன செய்கிறார்? உன் வாழ்க்கையில் என்ன லட்சியம் வைத்திருக்கிறாய்? உன்னுடைய பழக்கவழக்கங்கள் எப்படி? ‘ என்று மகனையும் வைத்துக்கொண்டு மகனின் நண்பனிடம் பேச எந்தத் தந்தைக்கு வாய்ப்பிருக்கிறதோ, அவரே குழந்தையின் நலத்தில் அக்கறை உடையவர் ஆகிறார்.

மகள் டி.வியில் தனக்குப் பிடித்த நடிகரைப் பார்த்து குதித்து கும்மாளமிடும்போது வாய்விட்டுச் சிரித்த தாய் அந்த டி.வி நிகழ்ச்சி முடிந்த பிறகு மெள்ள கூப்பிட்டு, ‘இது நம் வீடு. நாம் எப்படி வேண்டுமானாலும் சிரித்து ஆனந்தப்படலாம். ஆனால், இதே விதமாக வேறு வீட்டில் ஏற்படப்போகிறது. கவனமாக இரு. அவர்கள் இதை ரசிக்கமாட்டார்கள் மாறாக உன்னை கேலி செய்வார்கள். எனவே நடிகர்களை ரசிக்கிற விதத்தை சற்று நிதானமாக்கிக்கொள்’ என்று காதோரம் சொன்னால் அந்தத் தோழமை மகளைப் பலப்படுத்தும்.

நிறைய சம்பாதிக்கும்போது நீங்கள் உயர்ந்த நிலைக்கு நிச்சயம் போகிறீர்கள். போகிறபோது உங்கள் குழந்தைகளையும் தோள்களில் தூக்கிக் கொண்டு போவதுதான் நல்லது. விட்டுவிட்டுப் போனால் குழந்தைகள் உயரத்திலிருந்து தடுமாறி விழுந்துவிட வாய்ப்பிருக்கிறது.

‘குளித்தால் போதாதா? எதற்குப் பல் தேய்க்கவேண்டும்’ என்று யாராவது கேட்பார்களா? அதேபோல சம்பாதித்தால் போதாதா, எதற்கு குழந்தைகளைப் பேண வேண்டும் என்று கேட்க முடியாது. இரண்டும் மிக மிக அவசியமாய் செய்யவேண்டிய விஷயங்கள்.

குழந்தைகளைப் பேணுதல் என்பது குழந்தைகளைப் பயமுறுத்தல் அல்ல. அடக்கிவைத்தல் அல்ல. அவர்கள் தக்க மரியாதைகளோடும் பிரியத்தோடும் பெற்றோர்களைப் பார்ப்பது…பார்க்கும் படி வைத்தலே குழந்தைகளைப் பேணுதல்.
குழந்தைகள் பயமின்றி இருக்கவேண்டும் என்றால் மனைவி கணவனிடம் பயமின்றி இருக்க வேண்டும். மனைவியிடம் கணவன் பிரியமுடன் இருக்கவேண்டும்.

‘சரி…மனைவியிடம் பிரியமாக இருத்தல் என்பது என்ன?’

மனைவியிடம் உண்மையாக இருப்பது…மனைவியிடம் உண்மையாய் இருத்தல் என்பது என்ன?’

தன் மனைவியைத் தவிர, வேறு எந்தப் பெண்ணுக்கும் முதன்மை ஸ்தானம் கொடுக்காமல் இருத்தல். எனவே, மிக சூட்சுமமாக உற்றுப் பார்த்தால், குடும்பம் என்பது ஒழுக்கத்தின் விஷயமாக இருக்கிறது.

பெற்றோர்களின் ஒழுக்கத்துக்கு இன்னொரு பெயர்தான் குடும்பப் பொறுப்பு. இந்தக் குடும்பப் பொறுப்பு அல்லது ஒழுக்கம் பெற்றோர்களிடம் பிசிறுகிறபோது குழந்தைகள் மிக ஆர்வமாக அதைக் கவனிக்கிறார்கள். அதைக் கவனிக்கிற வயதில் அவர்கள் தாங்களும் கோணலாகி நடக்கலாமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. எனவே, ஒழுக்கக் கேட்டிற்கு வாய்ப்புகள் ஏற்பட்டாலும், ‘வேண்டாம் இது என்னையும் என் மனைவியையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் பாதிக்கும். என் வம்சத்தைப் பாதிக்கும். எனவே, இவர்கள் சொல்கின்ற இந்த தீய விஷயங்களிலிருந்து நான் விலகி நிற்கிறேன்’ என்று கை கூப்பி தனக்குள்ளே ஆழ்ந்து அடங்கி, கெட்ட விஷயங்களுக்குப் போகாமல் இருக்க ஒரு தந்தை, தாய் முயற்சி செய்து விட்டாலே குடும்பம் உருப்பட்டுவிடும். குழந்தை வளர்ப்பு நல்ல நிலைக்குப் பலமாக வந்துவிடும்.

இப்போதும், பிரச்னை முடிந்துவிடுவதில்லை. நீங்கள் மட்டும் ஒழுக்கமாக இருப்பதாலேயே உங்கள் குழந்தைகள் சீரும் சிறப்புமாக வளர்ந்துவிட முடியாது. குழந்தைகள் நீங்கள் இல்லாத நேரத்தில் பல பேரால் வளர்க்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடத்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கிற மாணவன், எதிர் வீட்டுப் பெண், வீட்டு வேலைக்காரர்கள், சுற்றியுள்ள உறவினர்கள், அவர்கள் வாழ்க்கை முறைகள், அந்த தெருவின் தன்மை, அந்த நகரத்தின் குணம்,அந்த மாநிலத்தின் இயல்பு என்றெல்லாம் பல விஷயங்கள் குழந்தைகளைப் பாதிக்கின்றன. கலை, அரசியல் விஷயங்களும் அவர்களைத் தீண்டி திகைக்க வைக்கின்றன...     வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் அவர்கள் தாங்களே கவனித்துக் கொள்வார்கள். நல்லவற்றுக்கும் கெட்டவற்றுக்கும் போய் நின்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். பிறகு, வீட்டுக்கு வருவார்கள். வீட்டுக்கு வர, அந்தக் குழந்தைகளிடம் தாயும் தந்தையும் பேச வேண்டும்.

‘என்ன கேள்வியாக இருந்தாலும், எதைப் பற்றிய கேள்வியாக இருந்தாலும் எந்தவிதமான சந்தேகமாக இருந்தாலும் அஞ்சவேண்டாம். உனக்கு சொல்லிக் கொடுப்பதற்கே நான் இருக்கிறேன். உன்னை வழி நடத்தவே தாய் இருக்கிறாள். நாங்கள் இருவரும் உட்கார்ந்து உலக விஷயங்கள் பேசும்போது எங்களுக்கு அருகே உட்கார்ந்து நீங்களும் பேசுங்கள்’ என்ற விஷயத்தைக் கைக்கொள்ள வேண்டியிருக்கும்.

‘அப்பா எனக்கு ஒரு காதல் கடிதம் வந்திருக்கிறது’ என்று ஒரு ஆண்குழந்தை அருகே வந்து சொல்லக் கூடிய தைரியத்தை அந்தக் குழந்தைக்குத் தர வேண்டும். ‘கொண்டா…யாரது?’ என்று அமைதியாக வாங்கிப் பிரித்துப் படித்துவிட்டு எவனோ உளறியிருக்கிறான். பாவம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். உனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. நீ வெற்றிகொள்ள வேண்டிய விஷயங்கள் பலநூறு இருக்கின்றன. இவற்றில் கவனம் செலுத்தாதே’ என்று சொல்லித்தர வேண்டும்.

கணக்குப் பாடம் போடும்போது, பென்சிலை வாயில் சிகரெட் போல வைத்து உருட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையில் அருகே போய், மெள்ள பென்சிலை எடுத்துக் கீழே வைத்துவிட்டு, ‘உதடு மீது இப்படி பென்சிலை உருட்டினால், உனக்கு உள்ளுக்குள்ளே சிகரெட் பிடிக்கிற ஆசை இருக்கிறதென்று அர்த்தம். எனவே, உற்று உன்னைக் கவனித்து, சிகரெட் பிடிக்கிற ஆசையிலிருந்து தயவுசெய்து வெளியே வந்துவிடு’ என்று மகனுக்குத் தந்தை போதிக்கவேண்டும். ‘சிகரெட் மிகப்பெரிய தவறு. அநேகமாக அதற்குப் பெயர் கொலைக்குற்றம். உன்னை நீயே கொலை செய்ய முயற்சிக்கிறாய் என்று அர்த்தம். உன் மனதைச் சோர்வாக்கி, உன்னை வாழ்க்கையின் இடைநிலைக்கு சிகரெட் கொண்டுபோய்விடும். தயவுசெய்து இப்போதே, இந்தக் கணமே, இதிலிருந்து விடுபடு’ என்று தந்தை அவசரமாக உபதேசிக்க வேண்டும். உபதேசிக்கிற மனநிலை, உபதேசிக்கிற நேரம் தந்தைக்கு இருக்க வேண்டும். இந்த உபதேசத்தை அம்மா தொடர்ந்து அமல்படுத்த வேண்டும்.

அப்பா, அம்மாவிடம் பிரியமாக இருக்கிறார். அம்மா, அப்பாவிடம் அதிக பிரியத்துடன் இருக்கிறார் என்று தெரிந்தாலே வீட்டிலுள்ள குழந்தைகள் பெற்றோர் மீது பிரியத்துடன் இருப்பார்கள். பிரியம் என்பதற்கு அர்த்தமே பயமின்மை. பயமின்றிப் பெற்றோர்களுக்கு அருகே இருந்து பேசத் தெரிந்துவிட்டால், அந்தக் குழந்தைகளை ஜெயிப்பதற்கு இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை. காசு கொடுக்கிற பலத்தைவிட, அன்பு கொடுக்கிற ஆரோக்கியம் மிகப் பெரியது. அன்பு என்பது ஒருமுகப்பட்ட அக்கறை. அக்கறையின் வெளிப்பாடுதான் அன்பு. அக்கறை என்பது குழந்தைகள் மீது, குடும்பத்தின் மீது இருந்து விட்டால் அவர்களோடு செலவிட நேரம் நிச்சயம் கிடைக்கும்.

வீடு சரியாக இருந்துவிட்டாலே, வெளியுலகத்தின் ‘சோதனைகளை எதிர்கொள்ள குழந்தைகள் தயாராகிவிடுவார்கள்.

அடிதடிகளும், ரகளைகளும் கோபங்களும் கேலிகளும் அவமானங்களும் ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் வெளியுலகத்தில் சந்தித்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அங்கே காயப்பட்டால் ஓர் இளைஞன் எங்கே வந்து அழுவான்? அங்கே அவமானப்படுத்தப்பட்டால் ஒரு யுவதி யாரிடம் போய்ச் சொல்வாள்? சொல்வதற்கு இதமாக வீட்டுச் சூழ்நிலை அமைய வேண்டும்.

‘ராகிங்’ என்று தரையில் நீச்சலடிக்க வைத்தார்கள் அம்மா’ என்று பெண் சொன்னால் இரவு அந்தப் பெண் பக்கத்திலேயே தாய் படுத்துக் கொண்டு அவள் தலையைக் கோதி, ‘எல்லாம் சரியாகப் போய்விடும். மறுமுறை அவர்களைச் சந்திக்கிறபோது இறைவன் பெயரைச் சொல். அவர்கள் உற்றுப் பார்த்து விலகிவிடுவார்கள்!’ என்று ஆறுதல் சொன்னால் போதும்…அந்தக் குழந்தை அடுத்த நாள் காலேஜூக்கு மிகுந்த நம்பிக்கையோடு போகும். சோதனைகள் அதிகமானாலும் இறைவன் பெயரைச் சொல்லி ஆறுதல் படுத்தவேண்டும்.

‘கடக்கக் கூடாத இடத்தில் தெருவைக் கடந்தேன் என்று போலீஸார் என்னைப் பிடித்துவிட்டார்கள். நான் இந்த ஸ்டேஷனில் இருந்து பேசுகிறேன். தயவுசெய்து இருநூறு ரூபாய் அபராத பணத்தோடு வாருங்கள்’ என்று மகன் தந்தைக்கு போன் செய்ய அடுத்த பத்து நிமிடத்தில் தந்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து அபராதம் கட்டி பையனை மீட்டுக்கொண்டு போனது மட்டுமல்லாமல், ‘இனி, சற்று கவனமாக தெருவில் போ…இதை மறந்துவிடு.

இது பெரிய அவமானம் ஒன்றுமில்லை. இதுமாதிரி பலபேருக்கு நிகழ்ந்திருக்கிறது. இனி இன்னொருமுறை இம்மாதிரி செய்யக்கூடாது என்பதற்குதான் அபராதம் விதித்திருக்கிறார்களே தவிர, உன்னை அவமானப்படுத்துவதற்கு இல்லை. துடைத்துவிட்டு உன் வேலையைப் பார்’ என்று ஆறுதலாகத் தகப்பன் சொன்னால் போதும். கற்றுக்கொண்டு அதைத் திறம்பட நடத்த பிள்ளைக்குத் தெரிந்துவிடும்.

இம்மாதிரி சாதாரண சோதனைகள்தானா குழந்தைகளை தொந்தரவு செய்கின்றன? இல்லை. பத்திரிக்கையில் வரும் கள்ளக்காதலும் திரைப்படத்தில் வரும் நெஞ்சை அள்ளும் காதலும் கதைகளில் வரும் இறுக்கமான கதாபாத்திரங்களும் அவர்களை கலைத்துப்போட வாய்ப்பிருக்கிது. பாட்டுக்கள் கிறங்க அடிக்க, தொலைக்காட்சிப் பெட்டியில் காணும் ஆணும் பெண்ணும் கவர்ந்து இழுக்க, அவர்கள் காதலிக்கின்ற இடம் கண்ணைக் கவர, உடைகள் வியப்பில் ஆழ்த்த, கவிதை வரிகள் ‘சுருக்’கென்று தைக்க, தானும் இதில் ஈடுபட்டால் என்ன என்று தோன்றும்.

உடம்பின் பசி அதை உந்தித் தள்ளும். மனசு ஏக்கம் காதலை இழுத்து கொண்டு வரும். கண்ணில் பார்த்த எல்லா பொருட்களும் காதல் சம்பந்தப்பட்டதாகக் காட்சி அளிக்க, அந்த இளைஞனோ யுவதியோ கால் இடறி அந்தகுளத்தில் விழுவது நிச்சயம்.

இந்தக்குழந்தையை எப்படி காப்பாற்றுவது?

காதலிப்பது தவறே இல்லை. ஆனால் காதல் என்பது குடும்ப கௌரவத்தை பலி போட்டு வருவதாக இருக்க்கூடாது. குடும்ப கௌரவம் என்பது உனது படிப்பு வெற்றியிலும் திருமண நிகழ்ச்சியிலும் இருக்கிறது. எனவே, நீ உன் துணையை தேர்ந்தெடுப்பதைவிட அதிக அக்கறையாக நான் உனக்குத் தேர்ந்தெடுப்பேன். கவலையே வேண்டாம்’ என்று மகளுக்கோ மகனுக்கோ வார்த்தை கொடுத்தால் போதும்…அவர்கள் வீட்டைக் காதலிக்கத் துவங்குவார்கள்.

குழந்தைகளோடு பேசினால் கெட்டுப்போக மாட்டார்களா? நான் என் குழந்தைகளோடு தினம் கொஞ்சினேன் அய்யா. ஆயினும் அவன் கெட்டுத்தான் போனான் என்று என்னிடம் சொன்னவரும் உண்டு. இந்த விஷயத்தில் நான் ஒரு மோசமான முன்னுதாரணம். என் அம்மா என்னோடு தயக்கமற பேசுபவள். என்னை அணைத்து பல விஷயங்கள் சொல்லிக் கொடுத்தவள்.

நான் அவளைக் கதற அடித்திருக்கிறேன். அவளை வேதனைப்படுத்தி இருக்கிறேன். தவறான இடங்களிலும் கால் வைத்து அவளைக் கலவரப்படுத்தி இருக்கிறேன். இடைவிடாது சிகரெட் குடித்து அவளை வெதும்பச் செய்திருக்கிறேன். ஆத்திரமும் கோபமுமாக நடந்து அவளைப் பயமுறுத்தி இருக்கிறேன். ஆனால் அந்தப் பெண்மணி எனக்காக இறைவனிடம் இடைவிடாது பிரார்த்தனை செய்து என்னைப் பல மோசமான விஷயங்களிலிருந்து மீட்டு வந்தாள். அம்மாவின் பிரார்த்தனையால் நான் நன்கு எழுத முடிந்த்து. அம்மாவின் பிரார்த்தனையால்தான் என் கெட்ட பழக்கங்கள் பலதும் என்னைவிட்டுப் போயின. அம்மாவின் பிரார்த்தனைதான் எனக்கு பிரார்த்தனை செய்யவும் சொல்லிக் கொடுத்த்து. அம்மாவின் பிரார்த்தனைதான் எனக்கு குரு என்பவரை அறிமுகப்படுத்தியது. அவரை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள அம்மாவின் பிரார்த்தனை உதவி செய்த்து.

நம் குழந்தைகளைக் காப்பாற்ற, நமது குழந்தைகளை நல்ல வழியில் திசை திருப்ப, நமக்குத் திராணி இல்லாமல் போகலாம். சக்தி குறைந்திருக்கலாம். அதற்கு உண்டான சாமர்த்தியம் இல்லாது போயிருக்கலாம். நாம் மனதார பிரார்த்தனை செய்தால் நம் குழந்தைக்கு அவனுக்கு ஏற்ற குரு கிடைத்துவிடுவார்.

உங்கள் குழந்தைக்கு செல்வம் சேர்த்துவைப்பதைவிட, உங்கள் குழந்தைக்கு படிப்பு கொடுப்பதைவிட, உங்கள் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுப்பதைவிட, மிக முக்கியமான விஷயம். அவனுக்கு ஒரு நல்ல குருவை அறிமுகப்படுத்துதல். தாய், தந்தையர் தன் மகனுக்கு தான் மட்டும் ஆதரவாக இல்லாமல் தன் குடும்பத்துக்கு ஒரு குருவை தேடிக் கொண்டார்கள் என்றால் ஒரு சத்துள்ள மனிதரை ஆதாரமாகப் பிடித்துக்கொண்டார்கள் என்றால் அவரிடம் சரணடைந்து அவரின் ஆலோசனை கேட்டு நடந்தார்கள் என்றால், அந்தக் குழந்தைகள் இன்னும் சீரும் சிறப்புமாக வலம் வருகிறார்கள்.

தகப்பனிடம் கேட்க முடியாததையும் தாயாரைக் கேட்க முடியாததையும் குரு மூலம் தெளிவாகக் கற்றுக் கொள்கிறார்கள். ஆழ்ந்த இறைநம்பிக்கை வைக்கப் பழக்கப்படுகிறார்கள். அமைதியாக இருக்க அவர்களுக்கு வழிகாட்டப்படுகிறது.

எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஒரு குருவைத் தேடிக்கொடுக்கவும் நீங்கள் முயற்சி செய்யலாம். அப்போது மொத்த குடும்பமுமே மிக சந்தோசமாக, நிம்மதியாக, பரவசமான ஓர் இடத்துக்கு வந்து நிற்பதை நீங்கள் உணர்வீர்கள். நல்ல நேரங்களிலும் கெட்ட நேரங்களிலும் குருவின் அண்மை உங்களைக் காப்பாற்றும். உங்கள் குழந்தைகளைக் கவனமாக அவருடைய சூட்சுமப் பார்வை பதிந்து மேலேற்றும்.

இவையெல்லாம் தாண்டியும் வாழ்க்கை சோதனைகள் நம்முகத்தை வந்து தாக்குவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. பெற்றோர்கள் அந்தச் சோதனைகளை ஏற்றுக் கொள்கிற பக்குவத்தைப் பார்த்து, குழந்தைகளும் அதே விதமான பக்குவத்தைப் பெறுகிறார்கள்.

மனித நாகரிகம் மெள்ள மெள்ள வளர்ந்த்து குடும்பம் என்கிற விஷயத்தின் மூலம்தான். அற்புதமான விஞ்ஞானிகளையும் உயர்தரமான கலைஞர்களையும் எதற்கும் அஞ்சாத வீரர்களையும் உலகுக்குக் கொடுத்தது ஒரு தாயும் தந்தையும்தான்.

எனவே, தாயும் தந்தையும் அஸ்திவாரமாக இருக்கின்ற குடும்பம் என்ற அந்தக் கோயிலை நாம் பேணிப்பாதுகாத்துவிட்டால் போதும்…நம் குழந்தைகள் அந்தக் கோவிலுக்குள் குடியிருக்கும் தேவதைகளாக விளங்குவார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.

அன்புடன் பாலகுமாரன்
உடம்பு நல்லா இருக்க
சத்து சத்துதாய்
பார்த்து பார்த்து 
தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறோம்

மனதிற்கு?

-பூமி.சாமி.

Saturday, June 14, 2025

பிறரை 
உன் தேவைகளுக்கு 
 பயன்படுத்தி கொள்வதில்
நீ ஒரு பல்கலைக்கழகம்.

Friday, June 13, 2025

சில இடங்களில் 
நம் இருப்பு
உதவியாக? 
தொந்தரவா?
என்பதே குழப்பமாய் 
இருக்கிறது.

-பூமி.சாமி.

Tuesday, June 10, 2025

சோற்றுக் கணக்கு

அன்னகரண்டிகள் பானை அடித்தட்டி
சத்தம் எழுப்பலாம் 

'வாங்க' என்ற வார்த்தையை
வாய் மறந்து போகலாம் 

பேசினால்தானே இருப்பாய் 
எனவே பேசுவதை தவிர்க்கலாம்

 பாயும் தலையணையும்
திண்ணையின் ஒரத்தில் போடப்படலாம்

எனவே 
"போ" என்பதை 
வார்த்தைகளில்
சொல்ல வேண்டிய 
அவசியம் இல்லை.

பூமி.சாமி.


Monday, June 9, 2025

ஒருத்தர் மீது பிரசுரிக்கப்படும் 
ஆகப் பெரிய வன்முறை 
என்பது 
பேசாமல் 
புறக்கணிக்கப்படுவது தான்.

பூமி.சாமி.
அன்னகரண்டிகள் பானை அடித்தட்டி
சத்தம் எழுப்பலாம் 

'வாங்க' என்ற வார்த்தையை
வாய் மறந்து போகலாம் 

ரசம் என்பதே தினம் மெனு ஆகலாம் 

பேசினால்தானே இருப்பாய் 
எனவே பேசுவதை தவிர்க்கலாம்

முட்டை என்பதே நான் வெஜ் ஆகலாம் 

ஒரு பாயும் தலையணையும்
ஒரத்தில் போடப்படலாம்

தண்ணீர் சோறு வரும்முன் 
தப்பித்து போ

எனவே 
"போ" என்பதை கூட
வார்த்தைகளில்
சொல்ல வேண்டிய 
அவசியம் இல்லை.

பூமி.சாமி.


விருந்தோம்பல்

"சாப்பிட்டாயா" என்று
உன் வீட்டிலேயே உன்னேயே கேட்டேன் 
"சாப்பிட்டேன்" என்று மட்டும் சொன்னாய்.

பூமி.சாமி.

Sunday, June 8, 2025

சற்று நடிப்பை குறைத்து
உண்மையை கூட்டினால் 
நகர்ந்து விடும் 
பல உறவுகள்,
அது தற்போதைய உலகம்.

பூமி.சாமி.

Friday, June 6, 2025

நீ கை உதறி நடந்தாலும் 
 உன் மனதின் கைப்பற்றியே நடக்கிறேன் நான் 
ஏனெனில் 
உன் கரம் துன்பங்களில்
என்னை கரை சேர்க்கும் கலங்கரை விளக்கம்.

பூமி.சாமி.

Thursday, June 5, 2025

அன்றாட தேவைகளுக்கு 
அரிதாரம் பூசி பூசி
அசல் மறந்து 
அரிதாரம் அசலாகிப் போனது.

பூமி.சாமி.

Monday, June 2, 2025

ஆயிரம் வார்த்தைகள் தராத
ஆறுதல் ஆசுவாசங்களை தந்துவிடும் ஒரு செயல்
அழுகை.

பூமி.சாமி.

Sunday, June 1, 2025

வெள்ளந்திகள்
கடவுளின் குழந்தைகள் 
வெள்ளந்திகளின் கணவன்
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன்
நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.
இனிய திருமணநாள் சகி.
அனைத்திற்கும் நன்றி.

-பூமி.சாமி.

Saturday, May 31, 2025

ஒரு கரம்.

தோல்வியடைந்தவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியது

வீழ்ந்தவர்களை கைக் கொடுத்து தூக்கியது

துயரத்தில் கண்ணீர் துடைத்தது

பயத்தில் கை கோர்த்து தைரியம் தந்தது 

ஒருநாள் அந்த கரம்
துயரத்தில் மூழ்கி கிடந்தது 
எதாவது ஒரு கரம் வரும் நம்பிக்கை 
கொண்டது 
ஆனால் 
உலகின் உண்மையை உணர்ந்தது
தன்னை கை ஊன்றி கொஞ்ச கொஞ்சமாய் 
மீண்டு வந்தது.

பூமி.சாமி.

Friday, May 30, 2025

அரிதாரம் பூசிய வலம் வரும்
ஆயிரம் வெற்று வார்த்தைகளை விட 
ஒரு சிறு அன்பு செய்தல் மேலானது.

பூமி.சாமி.
சில வார்த்தைகள் உதட்டோடு நின்றுவிடுகிறது 

சில வார்த்தைகள் மனதோடு புதைந்து போகிறது 

சில வார்த்தைகளை பேசியபின்
வாபஸ் வாங்குகிறேன் 

சில வார்த்தைகளை பேசியதற்கு
மன்னிப்பு கோருகிறேன் 

இவைகளை தாண்டி சிற்சில வார்த்தைகளை மட்டுமே பேசுகிறேன்
 
அவைகளும் தேவையா என தற்போது யோசிக்க தொடங்கி விட்டேன் நான்.

பூமி.சாமி.

Sunday, May 25, 2025

முட்களையும்
சக்கையையும் மட்டுமே 
பார்ப்பவனால்
கடைசிவரை 
பலாச்சுளையை சுவைக்க இயலாது.

பூமி.சாமி.
உங்களது சின்ன சின்ன விசயங்கள் தான் 
பெரிதாய் பார்க்கப்படுகிறது 
சிறியதில் பெரிதாய் கவனமாய் இருங்கள்.

பூமி.சாமி.

Saturday, May 24, 2025

எளிதாக கிடைக்கும் எதுவும்
மலிவாக பார்க்கப்படும் 
அன்பு உட்பட.

பூமி.சாமி.

Wednesday, May 21, 2025

வெத்து சொற்களால் 
நிரம்பி கிடக்கிறது 
உலகம்‌.

பூமி.சாமி.

Thursday, May 8, 2025

என் நிம்மதிக்கு நல்லது

சில நேரங்களில் உங்களை பற்றி 
நினைக்கும்போது 

உங்களுக்காக அவ்வளவு உழைத்து 
இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது
 
உங்கள் மேல் அவ்வளவு அக்கறையை
காட்டி இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது 

உங்களுக்காக என்னை வருத்தி இவ்வளவு மெனக்கெட்டு இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது 

என் செய்வது நான் அப்படித்தான் 

ஆனால் உங்களுக்காக என்னை மாற்றி கொண்டால்
ஒவ்வொருத்தருக்காகவும் என்னை மாற்றி கொள்ள வேண்டும் 

உங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை 
எதிர்க்கவும் இல்லை 
அப்படியே கடந்து செல்கிறேன் 
அதுதான் என் நிம்மதிக்கு நல்லது.

-பூமி.சாமி.

Sunday, May 4, 2025

இப்போது 
உன் உதவிகள் ஏதும் தேவைப்படுவதில்லை

என்னை ஊக்கப்படுத்தும் 
உன் வார்த்தைகளுக்கு கூட வேலையில்லை

துன்பங்களில் கண்ணீர் துடைக்கும் 
உன் கரங்கள் கூட தேவைப்படுவதில்லை

காலமும் தூரமும் கொஞ்சம் நஞ்சம் 
இருந்த உன் நினைவுகளைக்கூட  பிடுங்கிக் கொண்டன

ஏதும் தேவையில்லாத போது 
நீ எதற்கு என்று
ஞாபகமாய் மறந்து விட்டேன் உன்னை.

-பூமி.சாமி.

Thursday, May 1, 2025

எதிர்பார்ப்பு

கதிரவனிடமிருந்து குளிர்ச்சியையோ
நிலவிடுமிருந்து வெம்மையையோ
எதிர்பார்க்க வில்லை  நான் 

நான் எதிர்பார்ப்பது எல்லாம் 
மேகத்திடம் இருந்து மழையையும்
மரத்திடமிருந்து நிழலையும் தான்.

பூமி.சாமி.


Wednesday, April 30, 2025

நாற்றத்தின் உதடுகளில்
நறுமண வார்த்தைகள்.
ஜாக்கிரதை.

பூமி.சாமி.

Sunday, April 27, 2025

என் வகுப்பறை

முதல் நாள் நுழைகையில் அன்னியமாய் தெரிந்தது 
இப்போது அன்னியோன்யமாய் ஆனது

அன்பை தந்தது 
நல்ல அரவணைப்பை தந்தது 
இணை பிரியா நட்பை தந்தது எதிர்பார்ப்பில்லா நேசத்தை தந்தது

எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை தந்தது 
களங்கமில்லா கல்வியை தந்தது வெற்றியின் சூத்திரத்தை தந்தது தோல்வியை தாங்கும் மனவலிமையை தந்தது 

எல்லாம் மாறும் என்ற உண்மையை சொன்னது
என்னின் திறமையை எனக்குக் காட்டியது 
உன்னால் முடியும் என்று உரக்கச் சொன்னது 
இதுதான் உலகம் என்ற உண்மையை சொன்னது 
உலகால் முடியும் என்றால் 
உன்னாலும் முடியும் என்று உரக்கச் சொன்னது 

எங்களை பாதுகாத்து அரவணைத்து நின்றது 

எல்லாம் தந்த பின்
இந்த உலகை வெல்ல 
என்னை பிரசவிக்கிறது 
கல்வியின் கருவறையாம்
என் வகுப்பறை.

பூமி.சாமி.
முதிர்ச்சி 
முதிர்வு
என்பதும் 
வேறு வேறு,

முதிர்ந்தவர்கள் எல்லாம் 
முதிர்ச்சி பெற்றவர்கள் 
என்று நினைத்தால்
அது உன் அறியாமை.

-பூமி.சாமி.

Thursday, April 24, 2025

செல்களிடையே சுவர் உள்ளது
என்று சொன்னது உயிரியல் 

செல்களினால் மனித உள்ளங்கள் இடையே கடின சுவர் எழுந்து நிற்கிறது என்று சொல்கிறது இன்றைய உ(ள்)ளவியல்.

-பூமி.சாமி.

Sunday, April 20, 2025

எவ்வளவு நமக்கு நாமே 
சமாதானம் சொல்லிக் கொண்டாலும் 
எவ்வளவு முதிர்ச்சியுடன் யோசித்தாலும் 
பிரியமானவர்களின் பிரிவு
வலிக்கத்தான் செய்கிறது.

-பூமி.சாமி.

Friday, April 18, 2025

நம்மின் நலன் விரும்பிகள் 
நம்மின் நலன் பொருட்டு நமக்காக 
சில அறிவுரைகள் கூறுவார்கள் 
ஆனால் அது நம் காதில் ஏறாது 

அதன் விளைவுகளை 
காலமும் வாழ்க்கையும் 
பாடம் புகட்டும் 
கத்துவோம் கதறுவோம் 
காலம் கருணை காட்டாது
எல்லாம் காலம் கடந்து போய் இருக்கும் 

இது என் வாழ்வின் படிப்பினை

முடிந்தால் புரிந்து உணர்ந்து 
நடந்து கொள்ளுங்கள் 
காலம் ஒருபோதும் கருணை காட்டாது

நினைவில் கொள்ளுங்கள்.

Sunday, April 13, 2025

இனிய 
தமிழ் புத்தாண்டு
 நல்வாழ்த்துக்கள்.

Sunday, March 16, 2025

மூடிய ஜன்னலின் முன் 
கால் கொடுக்க நின்றுக் கொண்டிருக்கிறது தென்றல்,
பல நாட்களாய்

ஒருநாள் 
தென்றலுக்காக
திறக்கிறது ஜன்னல்,
தென்றல் அங்கில்லை 

அது வேறொரு மூடிய
ஜன்னலின் முன் 
கால் கொடுக்க
நின்று கொண்டிருக்க கூடும்.


பூமி.சாமி.

Thursday, March 13, 2025

உன்னை தெரிந்துகொள்ள 
ஒராண்டானது 

உன்னை ஓரளவுக்கு புரிந்துகொள்ள 
இரண்டாண்டானது

சிறிது சிநேகம் கொள்ள
மூன்றாண்டானது

நம்பிக்கை வந்து நட்பாகி
எல்லாம் பகிர் நேரம் வருகையில்
முடிந்துவிட்டது படிப்பு
 பிரித்துவிட்டது வகுப்பு.

-பூமி.சாமி.

Monday, March 3, 2025

பக்கத்தில் தானே இருக்கிறார் 
எங்கே போய் விட போகிறார் 
என்று நினைக்கும் தருணத்தில் 
மனதளவில் எங்கோ போய்விடுகிறார் அவர்.

-பூமி.சாமி.

Thursday, February 27, 2025

நாம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக 
இறந்து கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் இருந்தால் தான், நாம் வாழ முடியும்.

-எங்கோ படித்தது.

Monday, February 24, 2025

நீங்கள் உங்களிடமே
எதிர்பார்த்தால், ஏற்றம்

அடுத்தவரிடம் 
எதிர்பார்த்தால், ஏமாற்றம்.

Sunday, February 23, 2025

கேட்டபின் 
யானோ தானோ என்று
 ஏதோ ஒன்று கிடைக்கையில் 
 கேட்க்காமலே இருந்திருக்கலாம் 
என்று தோன்றுகிறது 
சில நேரங்களில்.

பூமி.சாமி.


Saturday, February 22, 2025

மெல்லியதோ
வல்லியதோ 
ஏதோ ஒரு கோடு
தேவைப்படுகிறது 
எல்லா அன்புக்கு 
இடையிலும்.

-பூமி.சாமி.

Friday, February 21, 2025

கொஞ்சம் ஒளித்து வைக்கும்
எண்ணம் வந்தபின் 
இருவருக்குள் 
உடைந்து போகிறது உறவு.

-பூமி.சாமி.

Sunday, February 16, 2025

இன்னும் கொஞ்சம் 
பேசியிருக்கலாம்

இன்னும் கொஞ்சம் 
பழகியிருக்கலாம்

இன்னும் கொஞ்சம் 
உள்ளன்போடு இருந்து இருக்கலாம் 

இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்து இருக்கலாம் 

இன்னும் கொஞ்சம் உண்மையோடு
இருந்து இருக்கலாம் 

என்று ஒவ்வொரு 
பிரிவின் போதும் தோன்றுகிறது.

-பூமி.சாமி.



Thursday, February 13, 2025

பாசம் 
நேசம் 
வேசம்
விஷம் 
வித்தியாசம் 
தெரியாமல் 
சிக்கி கொள்கிறோம்
சில இடங்களில்.

பூமி.சாமி.



Sunday, February 2, 2025

பிச்சை கேட்பதும்
கொடுக்க மறுத்து
அடுத்த வீட்டையோ அடுத்தவரையோ
கேட்க சொல்வதும் இயல்பானதுதான்

யாசிப்பது அன்பாயிருந்தால்
என்ன செய்வது.

-பூமி.சாமி.

Wednesday, January 29, 2025

பயணிகளை
இறக்கிவிட்ட பின்னும்
பயணிகளின்
நினைவில் செல்கிறது இரயில்.

பூமி.சாமி.
நாவில் தேனீர் சுவை
தீர்ந்த பின்னும்
மனதில் தேன் நீராய் தங்கி
விடுகிறது
தேனீர் அருந்திய இடமும் 
உடன் வந்த மனிதர்களும்‌.

பூமி.சாமி.
கூட்டத்தின் இடையே 
என் புஜங்களை மிருதுவாக 
பற்றுகின்றன இரு கரங்கள் 
அது தந்தையையோ
சகோதரனையோ
நண்பணையோ
இழந்த கரங்களாக இருக்கக்கூடும்
என
அதை உதர மனமில்லாமல் 
கடந்துவிடுகிறேன் நான்.

பூமி.சாமி.
கரைகள் அலைகளை
தொந்தரவாக நினைக்கக் கூடும் 
கரைகளின் அழுக்குகளை 
களைந்து அழகை கூட்டுவதும்
மனிதனின் மனதின் வேதனைகளை கழுவுவதும் என்னவோ 
அந்த அலைகள் தான் 

அது, அலைகளை இழந்த
கரைகளுக்கு தான் தெரியும் 

உங்கள் அருகில் கூட அலைகளை 
போல தொண தொணக்கும் மனிதர்கள் 
இருக்கக்கூடும் இழந்து விடாதீர்கள் 
அவர்களை‌‌.

பூமி.சாமி.

Tuesday, January 21, 2025

படித்ததில் பிடித்தது

இதை படித்துகொண்டிக்கும் நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்... உங்கள் இருவருக்குமானது இது...

தவறான நபரை நேசித்தல்.

இன்று பலர் உறவுகளில் சிக்கி துன்பப்படுகிறார்கள், காரணம் அவர்கள் தற்போது உறவில் இருக்கும் நபரை விட்டு வெளியேற மறுக்கிறார்கள்.

சரியான உறவில் நாம் இல்லை, என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனால் அந்த நபரை மாற்ற முடியும் என்று அவர்கள் நினைப்பதால் அவர்கள் அந்த உறவில் இருந்து வெளியேற மறுக்கிறார்கள்.

மிகவும் கடினமான விஷயம் என்னவென்றால், அந்த நபர் மாற வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும், அவர் மாறுவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

நீங்கள் இப்போது ஒரு உறவில் இருந்தால், அந்த நபர் உங்களுக்கு மகிழ்ச்சியை விட அதிக துக்கத்தை ஏற்படுத்துகிறார் என்றால், அவர்களை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது.

விஷயங்கள் சரிவரவில்லை என்பதை ஏற்றுக்கொள்வது இந்த வகையான உறவில் அதிகம் காயப்படுவதைத் தவிர்க்க சிறந்த அணுகுமுறையாகும்.

உறவு சீர்குலைந்துள்ளது, இதை சரி செய்வது கடினம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வது மிகவும் முக்கியம்.

தற்போதைய உறவுகளில் அதன் உண்மையான இயல்பின் யதார்த்தத்தை எதிர்கொள்ள மறுப்பதால் பலர் துன்பப்படுகிறார்கள் என்பதை நான் காண்கிறேன்.

உங்கள் தற்போதைய உறவு வேலை செய்யவில்லை என்றால்,  அதை கட்டாயப்படுத்தாதீர்கள், நீங்கள் அதை எவ்வளவு அதிகமாக கட்டாயப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்வீர்கள்.

உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் அழிக்க விரும்பவில்லை என்றால் யாராலும் அதை அழிக்க முடியாது. உங்கள் மகிழ்ச்சி உங்கள் கைகளில் உள்ளது; உங்கள் மகிழ்ச்சி உங்களைச் சார்ந்தது.

மற்றவர்கள் உங்களைத் தொடர்ந்து தவறாக நடத்துவதை நீங்கள் விரும்பவில்லை என்றால்......அவர்களைத் தடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது.

மரியாதை உங்களுக்கு வழங்கப்படாதபோது, ​​என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, அவர்களை விட்டு வெளியேற தைரியத்தை கொண்டு வாருங்கள். சரியான, உங்களுக்கான முடிவெடுங்கள். 

உங்கள் மூன்றாம் தெலைமுறைக்கு உங்கள் பெயர் தெரியப்போவதில்லை. ஆகவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். தன்மானத்தோடு....

வாழ்த்துக்கள் நண்பர்களே.
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..


Saturday, January 18, 2025

ஒரு சிறு துளி அன்பால்
சிறு பாராட்டால் 
ஒரு புன்னகையால்
ஒரு செல்ஃபியால்
நாலு வார்த்தை குறுஞ்செய்தியால்
ஒரு கருணை பார்வையால்
எவ்வளவு எளிதாக 
ஏமாற்றிவிட முடிகிறது 
என்னை.

-பூமி.சாமி.

Monday, January 13, 2025

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

- இரா.ரெங்கசாமி.

Wednesday, January 1, 2025

Relationship Formula.

Give (DEPOSIT) them more
expect less (WITHDRAW)
Maintain a good balance in your Emotional account.

2025

ஒவ்வொரு தருணங்களையும்
அமைதியுடன் தைரியமாக கடக்க வேண்டும் 

அர்ப்புதமான வாழ்க்கை இது
அர்த்தமுள்ள அன்பான வாழ்க்கை இது
அன்பானவர்களுக்கு நிறைய நேரத்தை கொடுக்க வேண்டும் 
செல்பேசியுடனான நேரத்தை குறைக்க வேண்டும் 

குடும்பத்திற்கு நிறைய நேரத்தை செலவிட வேண்டும்