Sunday, February 26, 2023

படித்ததில் பிடித்தது -மன அழுத்தம் நீங்க

மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற‌ மனவியல் நிபுணர்கள் கூறும் 30 அற்புதமான வழிமுறைகள்....

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எச்செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும். வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் 
விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாதபோதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும் போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரிசெய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழி முறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலைதருவதுடன் அடுத்தபடி நிலை நோக்கி நகர்வதற்கும் கை கொடுக்கின்றன. மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக் கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது.

இனம் புரியாத காரணங்களால் மனச்சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட
காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது. மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சி முறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.

(1) ஆழ்ந்த சுவாசம்:
                    கீழை நாடுகள், மேலைநாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின்மூலம் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்பு நிலை அடைகின்றது. அடி வயிற்றில்கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வுநிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

(2) காட்சிப்படுத்துங்ள்:
                  பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ஷவரின்கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச்சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.

அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

(3) மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:
                 உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.

(4) புன்னகையின் சக்தி:
                  மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடை கிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார்கள். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

(5) கடைவாய் – ஒரு ரகசியம்:
                      மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

(6) மனம் சொல்லும் மந்திரம்:
                      நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக் கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. "எல்லாம் செய்யக்கூடும்", "நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

(7) அடுத்தது என்ன….?
                    மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். "எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே" என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல்திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன? என்ற அணுகுமுறையை கைக்கொள்கிறபோது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.

(8) எழுதிப்பாருங்கள்:
                   மனஅழுத்தத்தை தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும் போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற 
மன நிறைவை எளிதில் எட்ட முடிகிறது.

(9) தடாலடிகளை தள்ளிப்போடுங்கள்:
                   அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப்பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும் போது முடிவெடுப் பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக்குள்ளேயே எண்ணிவிட்டு, சிறிதுதூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்க பூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

(10) காபி குடிப்பதைக் குறையுங்கள்:
                     காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர். தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ
பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

(11) முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:
                  எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கி போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள்வட்டத்துக்குள் எரிந்து விழச்செய்கிறது. இக்கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்து விடும் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச்சொல்வதே நல்லது.

(12) நறுமணங்களின் நலம் பெறுங்கள்:
                      தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கி கொள்ளமுடியும்.

(13) உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவும்:
                   டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள்வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.

(14) மூன்று முக்கிய இடங்கள்:
                    பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.
1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.
2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.
3. கழுத்து சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.

அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்து சக்தியை மூளைக்கு வழங்கும்.

(15) கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:
                          மனதில் தோன்றும் கவலைகள் எல்லாநேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக் கொண்டால், அக்கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .

(16) நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்:
                      கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

(17) வைட்டமின் வேண்டும்:
                         வைட்டமின் பி, மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

(18) அடையாளம் என்ன?
                        மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத்தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக் கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.

(19) ஆகாயம் பாருங்கள்:
                        அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி
திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக்கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

(20) நடைப்பயிற்சி நலம் தரும்:
                      நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கி விட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

(21) வெந்நீர்க்குளியல்:
                        வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கை கால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.

(22) இசையால் வசமாகும் இதயம்:
                        எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசைகேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.

(23) செல்லப் பிராணிகள்:
                          நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்
கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.

(24) கவனம் குவியுங்கள்:
                        மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை
நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதனளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.

(25) நண்பர்களை அழையுங்கள்:
                      மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

(26) வஜ்ராசனத்தின் வல்லமை:
                        மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான்.

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின்மீது சிறிதுநேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம்.
மெல்லக் குனிந்து முன்நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.
(இதை இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் க‌டைப்பிடிக்கிறார்கள்)

(27) பிரார்த்தனை:
                 மனமுருகும் பிரார்த்தனை, 
மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.

(28) நிமிர்ந்து அமருங்கள்:
                சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத் தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

(29) தாவரங்களோடு சிறிது நேரம்:
                      பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவ சக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.

(30) எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்:
                
 
இங்கு கலங்குவதாலோ கவலைப்படுவதாலோ எதுவும்
 நடக்கப் போவதில்லை 

ஒருநாள் ஒருபடியேனும் உருப்படியாய் ஏறு 
ஒவ்வொரு நாளும் தவறாமல் ஏறு
சறுக்கிடும் வழுக்கிடும் கலங்காதே கவலைப்படாதே கற்றுக்கொள்
கரை சேர்வாய் 

இங்கு தோல்வி என்ற ஒன்று இல்லை எல்லாம் வெற்றிக்கான பட்டறிவு படிகள் தான் 

வெற்றியின் வாயில் காவலன் தோல்விதான் 
அவனை சந்திக்க நேர்ந்தால்
நீ வெற்றியின் வாயிலில் இருக்கிறாய் என்று உணர்ந்து கொள்

எல்லாம் உன்னுள் இருக்கிறது 
உன்னை நம்பு உழைத்திடு
உலகை உன்னதாய் ஆக்கிடு.

-சாமி.

Saturday, February 25, 2023

ஆசிரியர் -மாணவன்

நான் கற்பிக்கவும் இல்லை
 நீ கற்றுக் கொள்ளவும் இல்லை 
நம்மில் நடப்பது உரையாடல் தான்

 நான் வழி காட்டவும் இல்லை 
நீ வழி நடக்கவும் இல்லை 
சேர்ந்தே தான் நடக்கிறோம்

 நான் எதையும் கொடுக்கவும் இல்லை 
நீ எடுத்துக் கொள்ளவும் இல்லை சேர்ந்தே தான் தேடுகிறோம் 

நான் எதையும் சொல்லவுமில்லை
நீ கேட்கவுமில்லை
 சேர்ந்தே தான் சிந்திக்கிறோம் 

நான் ஒன்றும் வெளிச்சமும் இல்லை 
நீ இருளும் இல்லை
 நாம் இருவருமே சூரியன் தான் 

நான் பெரியவனும் இல்லை
 நீ சிறியவனும் இல்லை 
சகப் பயணியாய் தான் பயணிக்கிறோம்

 நான் ஆசிரியனும் இல்லை 
நீ மாணவனும் இல்லை 
இருவருமே தான் கற்கிறோம்.

-சாமி.

Friday, February 24, 2023

வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கை என்றால் என்ன?

 ஒவ்வொருத்தவரிடமும் ஒவ்வொரு பதில்

 இத்தருணத்தில் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

அடுத்தவருக்கு உதவிடுவதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்

அன்பு செய்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

 குடும்பத்திற்கு உழைப்பதே வாழ்க்கை என்பார் மற்றொருவர்

 பயமில்லாமல் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

நாட்டுக்காக வாழ்வது வாழ்க்கை என்பார் இன்னொருவர் 

நம் இயல்பாய் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

அடுத்தவரை மன்னிப்பதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்

 உயிரோடு இருப்பதே வாழ்க்கை என்பார் ஒருவர்

நோயற்று வாழ்வதே வாழ்க்கை என்பார் இன்னொருவர் 

நோக்கமுடன் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

 பதில் இல்லா கேள்விதான் 'வாழ்க்கை'  என்கிறார் ஓஷோ 

அப்பதிலை தேடுவது தான் வாழ்க்கை என்கிறேன் நான்.

-சாமி.

அர்த்தமுள்ள மௌனம்

என் பெரும்பாலான கேள்விக்கு உன் பதில் மௌனம் தான்,
உன்னை புரிந்ததனால்
உன் மௌனத்தின் அர்த்தமும்
நன்றாகவே புரிகிறது எனக்கு.

-சாமி.

Sunday, February 19, 2023

அக்கறை

இன்பமோ துன்பமோ என் விரல்கள் தொடுதிரையை தொட்டு உன்னைத்தான் அழைக்கிறது பகிர்ந்துக்கொள்ள

 நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் கற்பனையில் உன் விரல் பற்றியே நடக்கிறேன் 

ஆறுதல் தேவைப்படும்போதெல்லாம் உன் தோள்களை தான் தேடி அலைகிறேன் 

கனிவு தேவைப்படும் போதெல்லாம் உன் கண்களைத் தான் தேடுகிறேன்

 உன்னிடமிருந்து எனக்கு ஒன்றுமே வேண்டாம் உன் அக்கறையை மட்டும் தந்து விட்டுப் போ அது என்னை கரை சேர்க்கும்.

-சாமி.
நான் அடை மழையாய்
கொட்டும் வார்த்தைகளுக்கு
மௌன தூரலாய் வருகிறது உன் பதில்

தூரல்தான் அழகு என்பதை சொல்லிதான்
தெரிய வேண்டுமா என்ன.

சாமி.

Friday, February 17, 2023

படித்ததில் பிடித்த வரிகள்

நீ சொல்லவும் 
இல்லை...
நான் கேட்கவும்
இல்லை...
இத்தனை ஆண்டுகளாகியும்...
இன்னும்...
நீயும் ...
கேட்கவில்லை...
நானும்... 
சொல்லவில்லை...
நாம் பிரியவும் இல்லை... 
நாம் சேரவும் இல்லை....
இருந்தாலும்... 
நம் இதயத்தில்...
ஏதோ...
ஓர் ஓரமாய்...
ஓசையின்றியே... 
துடித்துக் கொண்டு தான் 
இருக்கிறது... 
'அக்கறை' என்ற பெயரில் 
என் மீது நீயும்...
உன் மீது நானும்...
பரிமாறிக் கொள்ளும்... 
நம் காதல்...💜

 ✨ கண்ணம்மா
*ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி :  "இந்து" நாளிதழ் பதிப்பு!!*

*உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.*
 இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.

*1. கதிரவனைப் போல்...*

காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.

*2. புன்னகை அவசியம், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம்...!*

உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.

*3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...*

பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

*4. பாடம் வேண்டாம்...*

 ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.

*5. கேள்வி கேளுங்கள்...!*

 பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.

*6 . கடைசி அய்ந்து நிமிடங்கள்...!* 

புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி அய்ந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.

*7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்...*

 மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.

*8. பாடப்புத்தகத்தை தாண்டி...!*

வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.

*9. உங்கள் பிள்ளை அவர்கள்...!*

 மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

*10. நம்பிக்கையைக் கொடுங்கள்...!*

 உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.

*நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்!...*
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

Thursday, February 16, 2023

படித்ததில் பிடித்தது

அவர்கள் எப்போதும் என்னோடே இருந்து விட மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் 

அவர்கள்  இடையில் எப்போதாவது என் கைகளை உதறிச் செல்வார்கள் என்பதும் எனக்குத் தெரியும்

அதற்காய் இப்போது என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் கைகளை என்னால் உதறித் தள்ளிட முடியாது 
என் இதயங்கள் அந்தளவு இரும்பாலானவை அல்ல 

அவர்களின் இதயங்கள் எப்போது அப்படி இரும்பாலான இதயங்கள் ஆகின்றனவோ அப்போது அவர்கள் என்  கைகளை உதறிச் செல்லட்டும் 

பரவாயில்லை அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை  

கடைசி வரை நான்  இப்படியே மழைக்கு ஒதுங்கி நிற்க இடம் கொடுக்கும் ஒரு மரமாய் அவர்களின் வாழ்க்கையில் இருந்து விட்டுப் போகிறேன் 

அதற்காய் நான் ஒரு போதும் அவர்களோடு கோபித்துக் கொள்ளப் போவதில்லை 
சண்டையிட்டுக் கொள்ளப் போவதுமில்லை இன்னும் அவர்களை எண்ணி கண்ணீர் வடிக்கப் போவதும் இல்லை துக்கம் கொண்டாடப் போவதுமில்லை

மழைக்காக தன்னிடம் ஒதுங்கிய மனிதர்கள் தன்னை விட்டுப் போவதை எண்ணி எந்த மரமும் கண்ணீர் வடிப்பதுமில்லை துக்கம் கொண்டாடுவதுமில்லை 

தன்னைத் தேடி வருபவர்களை மீண்டும் மீண்டும் அனைத்துக் கொள்கிறது அவ்வளவுதான். 

-அரூஸா ஜெவாஹிர்-✍️

Monday, February 13, 2023

அன்றும் இன்றும்

அன்று கிராமத்தில்

 தாய் மண்ணை கீரித்தான் கிட்டிப்பில்லு  விளையாடினோம்

 கட்டம் கட்டித் தான் சில்லுக்கோடு விளையாடினோம் 

குழி நோண்டித்தான் கோழி குண்டு விளையாடினோம்

 வட்டம் வரைந்து தான் பம்பரம் விளையாடினோம்

 கோட்டுக்குள் கபடி விளையாடி உடம்பெல்லாம் மண் ஆனோம் 

இன்று தாய் மண்ணில் 
சிறு கீரலுமில்லை கட்டமும் இல்லை  உடம்பில் மண்ணும் படுவதில்லை 

விளையாட வேண்டிய தளிர் கரங்கள் எல்லாம் தொடுதிரைகளை மட்டும் தொட்டுக் கொண்டிருக்கின்றன.


-சாமி.

Thursday, February 9, 2023

வித்தியாசம்

ஒரு ரோஜா விலையில்லா அழகாய்
தெரிகிறது எனக்கு 

ஆனால் உனக்கு ஐந்து
ரூபாயாய் தெரிகிறது.

-சாமி.

Monday, February 6, 2023

என்னை விட்டு விடுங்கள்.....

உஙகளை போல் நாடகம் போடவும் நலலா நடிக்கவும் எனக்கு தெரியாது

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

உங்களைப் போல் செய்நன்றி மறக்கவும் நாணயமின்றி நடக்கவும் என்னால் முடியாது

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

பொய்யான அன்பையும் போலியான பாசத்தையும் என்னால் காட்ட முடியாது
உள்ளொன்று வைத்து புறமோன்று பேசவும் தெரியாது 

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

தேவைப்பட்டால் பேசவும் தேவையில்லை எனில் மனிதரை மறக்கவும் என்னால் முடியாது

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

ஊழல் செய்தலும் உழைப்பின்றி ஊதியம் பெறுதலும் என்னால் முடியாது 

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

உங்களைப் போல் புறமுதுகில் குத்தவும் 
பொய்யாக புன்னகைக்கவும் எனக்கு தெரியாது 

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்.

-சாமி.

Saturday, February 4, 2023

மிதிவண்டி கற்றப்பொழுது
இருந்த மகிழ்ச்சி
ஏன் மகிழுந்து கற்கும் பொழுது இல்லை
என்பது  இன்றுவரை புரியவில்லை எனக்கு.

-சாமி.
நீ எப்பொழுதும் ' தாமரை இலை 
தண்ணீர்' போல்
இருந்து விடுகிறாய் 

நான்தான் 'செம்புலப் பெயல் நீர்' 
ஆகி புலம்பித் தவிக்கிறேன்.

-சாமி.