Monday, November 27, 2023

படித்ததில் பிடித்த கவிதை

எல்லா வகுப்பறையிலும்
நான் நானென்று முந்திக் கொண்டு வரும் ஒரு குழந்தை இருக்கிறாள்.

அவளுடைய துருதுருப்பில்
ஒரு வண்டின் ரீங்காரம் இருக்கிறது.

கேட்டதை விட கூடுதலாக ஒரு சாக்பீஸ் எடுத்து வருகிறாள்.

வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழையும் போது வருகைப் பதிவேட்டைத் தவறாமல் ஒப்படைக்கிறாள்.

வேறு வேலையில் இருக்கும் ஆசிரியரிடம்
'இது உங்க பீரியட்' என்று நினைவூட்டுகிறாள்.

ஆசிரியரின் பீரோவில் 
எந்தப் பொருள் எங்கிருக்கும் என்பது 
அவளுக்கு அத்துபடி.

தேர்வு கால அட்டவணயை மற்றவர்கள் அழிக்காமல் பார்த்துக் கொள்கிறாள்.

ஆசிரியருக்குச் சாதகமாகவும்
சக மாணவர்களுக்குப் பாதகமில்லாமலும் நடக்கும் அவள் மீது 
எந்தப் புகாரும் இல்லை.

ஒருநாள் கூட
அவள் ஒற்றை ஜடையுடன் வந்ததில்லை.

அவள் வராத நாட்களில்
கரும்பலகையை யார் துடைப்பது என்ற கேள்வி எழுகிறது.

வீட்டிலிருந்தபடியே அவள் வகுப்பறையில் நடமாடிக் கொண்டிருக்கிறாள்.

அந்த சமயங்களில் அவளோடே திரியும்
அவள் வகுப்புத்தோழி
அவள் போல் 
நல்ல பெயரெடுக்க முயற்சிக்கிறாள்.

- மா. காளிதாஸ்

Saturday, November 25, 2023

கிடைத்திருப்பதை நினைத்து 
திருப்தி கொள்கிறது அறிவு

கிடைக்காமல் போனதை நினைத்து துன்பத்தில் உழல்கிறது மனது

இன்று உனக்கு கிடைத்திருப்பது பலருக்கு கிடைக்கவில்லை என்கிறது அறிவு 

சிலருக்கு கிடைத்திருப்பது 
எனக்கு கிடைக்கவில்லை என்கிறது மனது

நம்பிக்கை கயிற்றால்
நம்மை  முன்னிழுத்து செல்கிறது அறிவு

அவநம்பிக்கை சங்கிலியால் நம் காலை கட்டி பிணைத்திருக்கிறது மனசு

சில நேரம் அறிவின் பிடியில்
பல நேரம் மனதில் பிடியில்

கிடைத்ததில் மகிழ்ந்திரு கிடைக்காததற்காக உழைத்திடு.

-பூமி.சாமி.

Tuesday, November 14, 2023

பலர் வார்த்தைகளால்
அன்பை பொழிகின்றனர்

சிலர் அமைதியாக
தன் சிறு சிறு செயல்களால்
அன்பு செய்கின்றனர்

ஆனால் முதல் வகை
ஆட்களைத் தான்
இவ்வுலகு நம்புகிறது.

பூமி.சாமி.


Sunday, November 12, 2023

உன்னைப் புறக்கணித்துவிட்டதாக 
ஏன் கதறுகிறாய்.....? 
ஓஷோ.

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் 
உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன்மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து, நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்துக் கவலை கொள்கிறாய்.

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளே அன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில், நீ எத்தனை பேரைப் பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணிப் பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாகச் சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. 

அது போல் இயல்பாய் கடமையைச் செய்.

ஓஷோ....

Saturday, November 11, 2023

அனைவருக்கும்
இனிய தீப ஒளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.💐💐💐💥🧨🪔🪔🪔

பேராசிரியர். இரா.ரெங்கசாமி.

நன்றி இல்லாதவர்களால்
நாம் ஏன் நன்மை செய்வதை
விடவேண்டும்
அவர்கள் அவர்களாக இருக்கட்டும்
நாம் நாமாக இருப்போம்.

நன்றி.

பூமி.சாமி.


Thursday, November 9, 2023

ஒரு பொருளின்
தேவை குறையும்போது 
முதலில்
ஒதுக்கி ஓரமாய்
வைக்கிறோம்
தேவை முடிந்தபின் 
தூக்கி தூர எறிகிறோம்

இப்படித்தான்
மனிதர்களையும்
கையாள்கிறமோ
என்று
யோசிக்க நினைக்கிறது.

பூமி.சாமி.





Wednesday, November 8, 2023

எளிதில்
கிடைக்கும்
எதற்கும்
மதிப்பு
குறைவுதான்,

உன்
அன்பு உட்பட.

பூமி.சாமி.

Tuesday, November 7, 2023

மலரோடு ஒரு 
மௌன உரையாடல்
மனதை மணமாக்குகிறது.


ஆனால் மனித உரையாடல்
மனதை ரண............

பூமி.சாமி.


Wednesday, November 1, 2023

குடையின்
கீழ் நிற்பது
கொடுமை
மழை பெய்கையில்.