Thursday, January 31, 2019

காலம்_வரும்_வரை_காத்து_இருப்போம்

காலம்_வரும்_வரை_காத்து_இருப்போம்

ஒரு காட்டில் #வாத்துக்_குடும்பம் ஒன்று இருந்தது. அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது.

பிறந்த #குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் #அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன.

ஆனால், அதில் ஒரு_குஞ்சு மட்டும் அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது.

உடன்பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக்குஞ்சைக் கண்டாலே பிடிக்கவில்லை. அதன்_தாய்_கூட அதை வெறுத்து, அதை மட்டும் ஒதுக்கிவிட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.

அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை_அடைந்தது.

'நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமாக பிறந்தேன்..? முட்டையிலேயே உடைஞ்சு போயிருக்கலாமே..!!' என்று வேதனையுடன் அழுது கதறியது. நாட்கள் ஓடின.

மற்ற வாத்துக் குஞ்சுகள் வளர வளர மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும் மேலும் நிறமற்றும் காணப்பட்டது. தலையில் வேறு குச்சிகள் போல ஓரிரு முடிகள் வளர்ந்து, அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று.

தினமும் #வேதனையும், #கண்ணீருமாகத் தனிமையில் வாழ்ந்து வந்தது.

சில வேளைகளில் #அன்பாய் அம்மாவையும், சகோதரர்களையும் நெருங்கும். ஆனால் சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டிவிடும். மேலும் கொஞ்ச நாள் சென்றது.

அசிங்கமாக_இருந்த_வாத்துக்_குஞ்சின் நிறமற்ற முடிகள், #பிரகாசிக்கும் வெண்மை நிறமானதாக மாற ஆரம்பித்தன.

தலையில் நீண்டிருந்த முடிகள், அழகான கொண்டையாக மாறிற்று. இறக்கைகள் பலமடைந்து நீளமாக மாறிவிட்டன.

இப்போது அந்த அசிங்கமான வாத்துக்குஞ்சு, கண்கொள்ளா_அழகுடன் காட்சியளித்தது.

அம்மா வாத்துக்கும், கூடப் பிறந்த மற்ற வாத்துக்களுக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போனது. அதன் அருகில் நெருங்கக்கூட கூச்சமடைந்து, வெட்கப்பட்டன.

நடந்தது என்னவென்றால்,

ஒரு #அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டில் முட்டையிட்டுச் சென்றுவிட்டது.

இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி அடைகாத்து, குஞ்சு பொறித்து விட்டது.

அதுதான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு.

ஒரு நாள் வந்தது.

அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றம் அளித்த அன்னப்பறவையின் சிறகில் ஒரு உந்துதல் தோன்றியது.

படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது. கேலி செய்தவர்கள் வெறுத்து, விரட்டியவர்கள் எல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள,

அன்னப்பறவை கம்பீரமாய் உயர_உயரப் பறந்து ஒரு புள்ளியாக மறைந்து போனது.

எவர்
கண்டார்..

உங்களைத் தூற்றுபவர்கள் யாவரும்
வாத்து கூட்டங்களாக கூட
இருக்கலாம்..

உங்கள் திறமையான #சிறகுகள் வளர்ந்து..

உங்கள் காலம் கனிந்து..
அன்ன பறவையாய்
மாறும் காலம் வரை
பொறுத்திருங்கள்..

ஒவ்வொரு #செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு_காரணம் இருக்கும்.

👍உங்களுக்கான #நேரம் வரும்...

அது வரை சற்று #நிதானமாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்..!

இதுவும் கடந்து போகும்

#ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்

ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது

தொடர்ந்து புத்தரை நோக்கி

“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்

ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை

இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது

எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது

அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக

அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்

தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்

நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும்

நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தை சொல்லுங்கள்

உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்”
என்றது அக்குரல்

மௌனமாக சிரித்த புத்தர்

“இதுவும் கடந்து போகும்”

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்

அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது

புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது

நன்றாகப் படித்திருந்தும்

பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு

தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை

“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால்

என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது

இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து

இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்”

என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்

“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும்

இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது

இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்”

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்

“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார்

இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்”

என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்

அடுத்து இருந்த அழகான பெண்

“என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்

கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது

“இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்

மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்

ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது

என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்

ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது

“இதுவும் கடந்து போகும்”
 
என்பதை நினைவில் கொள்ளுங்கள்

சோர்ந்துவிட மாட்டீர்கள்

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது

‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்

அவர்கள் இருக்கும்போது அவர்களை கொளரவிப்பீர்கள்

அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்

எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்

உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்

“இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள்

கண்டிப்பாக மாறிவிடும்

தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள்

அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்

வெற்றி நிச்சயம் 🌼

Tuesday, January 22, 2019

காலங்கள் திரும்ப கிடைக்காது

*காலங்கள் திரும்ப கிடைக்காது*

இரண்டு  நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்,. ஒருவர் சொன்னார், "கேரளாவில் ஒரு இடம் இருக்கிறது; அது ஒரு டீ எஸ்டேட்; அங்கு செல்போன் வேலை செய்யாது; நாம் அங்கே போய்விட்டால் வெளி உலகை விட்டு முற்றிலும் துண்டிக்க படுவோம்;
இங்கே இருக்கும் டென்ஷன் எல்லாம் குறைக்க, அங்கே போய் ஒரு மூன்று நாள் இருக்கலாம் போல இருக்கிறது". வெளி உலக தொடர்பே அற்று நிம்மதியாக இருக்கலாம் என்றார்.

ஒருவர் சொன்னார், "எனக்கு இது சரிப்பட்டு வராது; இதை நான் விரும்புவதும் இல்லை" என்றார்.

அதற்கான காரணத்தைச் சொல்கிறார்..

நம்மைச்சுற்றி இருப்பவர்கள் யார்? யார்?
முதலில் மனைவி.
பிறகு பிள்ளைகள்.
அடுத்து உறவுகள்.
பின், நண்பர்கள்.
பின்பு வேலையின் நிமித்தம் தொடர்பில் உள்ளவர்கள்.
அதன் பின் முற்றிலும் தெரியாதவர்கள். அதாவது, கடைவீதியில் நடப்பவர்கள் போல, அறிமுகம் இல்லாதவர்கள்.

இந்த உறவுகள் அற்புதமானவை. மனைவி என்ற ஒருத்தியோடு பேசிக் கொண்டே இருங்கள்;
இல்லாவிட்டால் ஏதாவது சண்டையாவது போடுங்கள். பின்பு சமாதானம் ஆகி உறவாடுங்கள்.
எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும். ஒருவேளை அவள் முந்தி மரணமடைந்தாள்?அப்போது தெரியும், பிரிவு என்றால் என்னவென்று.
ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை; வீணாக்க வேண்டாம். அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்.

அடுத்து, பிள்ளைகள்;
பள்ளி படிப்பு முடியும் வரைதான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள்.
அதன் பின் அவர்கள் உலகம் வேறு; அதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கவே மாட்டீர்கள். அப்போது நீங்கள்
அவர்களோடு தொலைபேசி மூலமாக பேசக்கூடநேரம் பார்க்க வேண்டும்.

இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள்.
வெளிநாட்டில் தனது சின்ன குழந்தைகளை பிரிந்து பணி செய்யும் தகப்பன்மார்களுக்கு இந்த வேதனை புரியும்.
இப்படி இல்லாமல், உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம். ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம். சும்மா அவர்களை பார்த்துக் கொண்டாவது இருங்கள்.

அடுத்து உறவுகளும், உடன் பணி செய்யும் தோழர்களும்.

இதைப்பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள் அடுத்த மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ இருந்தால்,
இது புரியும்.

வட நாட்டில் இருந்தால் அங்கு உள்ள சர்மாவும், பாண்டேயும், தூபேயும், நம்மோடு நட்பாக இருப்பார்கள். ஆனால் தோள் மேல் கைபோட்டு "வாடா மாப்பிளே" என்று கூற முடியாது. ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கும்.

எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே!
வாழ்கையை ருசியுங்கள்;
அனுபவியுங்கள்.
காலமே ஒரு நாள் நம்மை தனிமைப்படுத்த போகிறது.
அன்று யாரும் நம்மை வந்து பார்க்கப்போவது இல்லை.
நாம் நினைத்தால் கூட வெளியே போக முடியாது.

தனிமையே நம்மை கொல்லப்போகிறது.

அதுவரை, கடவுள் நமக்கு தந்த சினேகங்களோடு பேசுவோம்; சண்டையிடுவோம்; கொஞசி குலாவுவோம்; ஏதாவது செய்வோம். ஆனால் தனிமை வேண்டாம்;
அது மோசமானது. தற்கொலைக்குச் சமமானது.

*காலங்கள் திரும்ப கிடைக்காது..*
படித்ததில் பிடித்தது.

Sunday, January 20, 2019

கணவன் மனைவி இருவரும்

கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...

அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..

பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....

அதான்...
என்று இழுத்தாள்...

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..

அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

போடி லூசு.. அவன் சிரித்தான்.

ஆனால் அதில் உயிரில்லை.

மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு  அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட  நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா?
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

படித்ததில் உறைத்தது.
சகோதரியின் பதிவுடன்....

படித்ததில் பிடித்தது.

மன அழுத்தம் நீங்க.

நன்றி குங்குமம் டாக்டர்

ரீசார்ஜ்

நவீன வாழ்க்கையால் மன அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அதனை நீக்க பல்வேறு வழிமுறைகளையும் கண்டறிந்து வருகிறார்கள் விஞ்ஞானிகள். நம்முடைய இன்றைய மன அழுத்தத்துக்கு இடது பக்க மூளையை அதிகம் பயன்படுத்துவதே காரணம் என்றும், வலது பக்க மூளையினைப் பயன்படுத்தும்போது அமைதியுடன் ஆற்றலும் கிடைக்கும் என்றும் பரிந்துரைக்கிறார்கள்.

மன அழுத்தமாக இருக்கும் நேரங்களில், இடது மூளையின் அதிகபட்ச திறனை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்ற சமிக்ஞையை மூளை உங்களுக்கு சொல்லிவிடும். அதாவது நாம் 85 சதவீத நேரத்தை இடது மூளையின் பயன்பாட்டை செயல்படுத்துகிறோம்.

ஒரு விஷயத்தை புரிந்துகொள்வது, தொடர்ச்சியான சிந்தனையில் ஈடுபடுவது, மொழி மற்றும் அதன் பொருள் பாகுபாடு, தகவல்களை புரிந்துகொள்ள மற்றும் நம்மைச் சுற்றிலிருந்தும் கிடைக்கக்கூடிய புதுப்புது விஷயங்களை கிரகித்துக் கொள்ள என எல்லாவற்றுக்கும் இடது பக்க மூளையைத்தான் பயன்படுத்துகிறோம்.

இவையெல்லாம் வாழ்வியல் செயல்பாட்டுக்கு முக்கியம்தான். ஆனால், அதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது. வரம்பு மீறிய அழுத்தத்தை இடது மூளைக்கு கொடுக்கும்போது, அவ்வப்போது வலது மூளையை பயன்படுத்துங்கள் என்ற சமிக்ஞை மூளையிலிருந்து நமக்கு கிடைக்கிறது. ஆனால், நாம்தான் அதை பொருட்படுத்துவதில்லை.

மனிதன் மூளையில் வலது மற்றும் இடது அரைக்கோளங்கள் (Hemisphere) இருக்கின்றன. நமது மூளையின் இடது அரைக்கோளம் ஒரு தொடர்ச்சியான தகவல்களை பெறுதல் மற்றும் செயல்முறை செயல்பாடுகளுக்கும், வலது அரைக்கோளம் நமது கற்பனைத்திறன், தூக்கம் (கனவுகள்), நினைவாற்றல், உள்ளுணர்வு மற்றும் படைப்புத்திறன் செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்றுள்ளன. இடது அரைக்கோளத்தின் மூலம் உறிஞ்சப்படும் விஷயங்களை வைத்து, வலது அரைக்கோளத்தின் உதவியோடு உருவாக்குகிறோம்.

போட்டி மிகுந்த இன்றைய உலகில், தகவல்களை சேகரிப்பதும், அவற்றை புது படைப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்வதும் இன்றியமையாததாய் இருக்கும்போது நாம் அடிக்கடி மன அழுத்தம் என்ற அபாய புள்ளியை தொடவேண்டி இருக்கிறது. அப்போது மூளை, ‘போதும் இத்தோடு நிறுத்திக்கொள், இதற்கு மேல் சிந்தனை வேண்டாம், இதற்குமேல் தகவல் வேண்டாம், இதற்குமேல் விவாதம் வேண்டாம்’ என ‘ரெட் அலர்ட்’ சிக்னல் கொடுக்கும். அந்த சிக்னலை புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து சிந்தனையிலும், மூளையைக் கசக்கும் வேலையிலும் ஈடுபட்டால், அது அப்படியே மனக்குமுறலாகவோ, சோர்வாகவோ வெடித்துவிடும்.

மன அழுத்தமாக இருக்கும் நேரங்களில், சோர்வாகிவிடுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

கரெக்ட்… அந்த நேரத்தில் உடனே தூங்கிவிடுங்கள். இடது பக்க மூளையை ஸ்விட்ச் ஆஃப் செய்ய தூக்கத்தைத்தவிர வேறு சிறந்த தேர்வு இருக்க முடியாது. ஆனால், சிலநேரங்களில் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும்போது தூக்கம் வராது. ஏனெனில், அப்போது நம் உடலில் அட்ரினல் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதே காரணம்.

அதற்கு சிறந்த வழி, வலது பக்க மூளையின் உபயோகத்தை அதிகரிப்பதுதான். பிடித்த இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் பார்ப்பது, படம் வரைவது, நமக்குபிடித்த புத்தகம் படிப்பது இவை வலது மூளையை உபயோகிக்கும் வழிகள். இவையெல்லாம் எளிதில் செய்யக்கூடியவை. அப்படியே இடது பக்கத்திலிருந்து, வலது பக்கத்திற்கு மாற்றி ரிலாக்ஸாகலாம்.

வலது பக்க மூளையை உபயோகிக்கும்போது, மகிழ்ச்சிக்கு காரணமான எண்டார்பின் ரசாயனங்கள் வெளியாகின்றன. இந்த எண்டார்பின் ரசாயனங்கள் நோயை எதிர்த்து போராடுகின்றன, நம் நோயெதிர்ப்பு அமைப்புகளை வலிமைப்படுத்தவும், வலியை கையாளவும் உதவுகின்றன.
கிடைத்த இடத்தில், நினைத்த நிமிடத்தில் தூங்குபவர்களை நாம் பார்த்திருப்போம்.

அவர்கள் இரண்டு அரைக்கோளங்களையும் சமநிலையில் நிர்வகிக்கத் தெரிந்த கில்லாடிகள். யாரெல்லாம் தூங்குவதற்கு மிக கஷ்டப்படுகிறார்களோ? அவர்கள் மூளையின் இடது பக்கத்தை அதிகம் உபயோகிப்பவர்கள். எப்போதும் எதைப்பற்றியாவது கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.

மூளை ஒரு பேட்டரி போல செயல்படுகிறது. அதாவது வலதுபக்கம் சார்ஜ் ஏற்றப்படுகிறது. அந்த சக்தியை இடது பக்க மூளை ஆற்றலாக பயன்படுத்தி
லோ பேட்டரியாக்கி விடுகிறது. அதற்கு, எப்போதும் நம் மூளையை ஃபுல் சார்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும் இல்லையா?

அதெல்லாம் சரி… எப்படி வலப்பக்க மூளையை உபயோகிப்பது? இதோ டிப்ஸ்...

* கலையை ரசியுங்கள் - ஏதோவொரு ஓவியக்கண்காட்சி, கலைப்பொருள் கண்காட்சி போன்றவற்றுக்கு செல்லலாம். அல்லது டக்கென்று ஹெட்செட் மாட்டிக்கொண்டு ‘பாட்டு’ கேட்கலாம்.

* ஃபேவரைட் நடிகரின் படத்துக்கு போகலாம். டிவியில் நகைச்சுவை காட்சிகளை போட்டு பார்க்கலாம்.

* உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடலாம். கிரிக்கெட், டென்னிஸ் போன்று விளையாடும்போது உடலில் மகிழ்ச்சி ஹார்மோன் சுரந்து ஸ்ட்ரெஸ் ஓடிப் போய்விடும்.

* நண்பர்களோடு அல்லது உங்களுக்குப்பிடித்த நபர்களோடு வெளியே சென்றுவிட்டு வரலாம்.

* செல்லப் பிராணிகளோடு விளையாடி மகிழலாம். அதுவும் திரும்ப உங்களை கொஞ்சும்போது ஸ்ட்ரெஸ் போயே போச்சு…

* பிடித்தமான உணவை நீங்களே சமைக்க ஆரம்பிப்பதும் எளிமையான ஒரு வழி.

* ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கலாம். அது உங்களுக்குப்பிடித்த எழுத்தாளருடைய நாவலாக இருந்தால் இன்னும் சிறப்பு.

* சத்தமாக மியூசிக் போட்டுவிட்டு, ஆட ஆரம்பித்து விடுங்கள். இல்லை நீங்களே பாடிக்கொண்டும் ஆடலாம்.

* சந்தோஷமான எதிர்காலத்தை கற்பனை செய்து பாருங்கள். (இது ஒரு மேஜிக் மாதிரி பல மாயங்களை நிகழ்த்த வல்லது.) அப்படி கற்பனை செய்யும்போது வலது பக்க மூளையைத்தூண்டி, மூளையில் மகிழ்ச்சி ரசாயனங்கள் சுரக்க ஆரம்பிக்கும்.

* சட்டென்று வெளியே சென்று இயற்கையான சூழலை ரசிக்க ஆரம்பித்துவிடுங்கள்.

* குழந்தைகளோடு விளையாடுங்கள். நீங்களும் குழந்தை ஆகிவிடுவீர்கள்.

* வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு நீண்ட பயணம் செய்து விட்டு வந்தால் மனம் ரிலாக்ஸாகிவிடும்.

* இடது கையால் எழுத ஆரம்பியுங்கள். அது உங்கள் வலப்பக்க மூளை உபயோகத்தை தூண்டிவிடும்.

* விளையாட்டாக எதையாவது புது முயற்சி செய்யலாம்.எல்லாவற்றையும் விட, வலது, இடது மூளையை சமநிலையில் உபயோகிக்க வேண்டும் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டு, மேலே சொன்ன டிப்ஸ்களை தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்!

- இந்துமதி

...