Wednesday, April 24, 2019

தேவையில்லாத வெட்கம்

மீண்டும் ஒரு கதை .. படித்ததில் ரகசியத்தை உணர்ந்தேன். 🦅 🦅 🌺🌸

குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது.

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது.

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது.

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது.

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது. ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.

தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது.

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள்.

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார்.

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை.

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார்.

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது.

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். ராஜாவிடம் சொல்லிவிடுவேன். நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான்.

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும்.

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள்.

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது. உழைப்போம் . . . .
உயா்வோம் . . . . 🦅 💐

Monday, April 22, 2019

அறிவோம்...* *தெளிவோம்...!*

*மாடுகள்  எப்போது உறங்கும்?*

"பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன்...

பல பிரச்சனைகள்...

வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில்,  வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது...
தூங்கமுடியவில்லை...

எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி"

என்றவாறே  அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.

அப்போது மாலை நேரம்.

முனிவர் அவனிடம்  "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார்.

சென்றவன் திரும்பி வந்து... "100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.

"நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்... 100 மாடுகளும் படுக்கணும்... அதுதான் முக்கியம். சரியா? இந்த வேலைய முடிச்சுட்டு காலையில் திரும்பி வா..." என்றார்.

"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு...  கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன்  திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை ..." என்றான்.

"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்...

"100 மாடுகளையும் படுக்க வைக்க படாதபாடுகள் பட்டும் முடியவில்லை...

சில மாடுகள் தானாகவே தரையில் படுத்துவிட்டன...

சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்...

ஆனால் அனைத்து மாட்டையும் படுக்கவைக்க முடியவில்லை.

சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..

அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை... சாமி!

அதனால நான் தூங்குவதற்கு  போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை!" என்றான்.

முனிவர் சிரித்தபடியே...
*"இதுதான் வாழ்க்கை.! வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...!*

சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்... சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்... ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...

*அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது...*

பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே...

தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் அல்லது காலத்தின் ஓட்டத்தில் ஒப்படைத்துவிட்டு...

உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்!" என்றார்.

முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம்  "சில மாடுகள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்.

*வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு மாடுகள் போன்றது...*

அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே.

ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...

அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது.. 

ஆகவே சிலவற்றை இறைவனை பிரார்த்தித்து... அவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.

வாழ்வு பிரச்சனையாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மனம்தான் காரணம்...
சூட்சுமத்தை புரிந்து கொண்டால் சுகமாய் வாழலாம்...

*அறிவோம்...*
*தெளிவோம்...!*

வாழ்க வளமுடன்...

படித்ததில் பிடித்தது.

Sunday, April 21, 2019

ஆதிக்கம்தான் என் எதிரி

ஒரு பெரிய நாடு இன்னொரு சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினால் நான் சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன்.

அந்த சிறிய நாட்டில் ஒரு பெரிய மதம் இருந்து மற்ற சிறுபான்மை மதத்தை ஒடுக்கினால் நான் சிறுபான்மை மதத்தின் பக்கமே நிற்பேன்.

அந்த சிறுபான்மை மதத்தில் சாதி இருந்து,இன்னொரு சாதியின் மீது தாக்குதல் நடத்தினால் நான்  தாக்குதலுக்குள்ளான அந்த சாதியின் பக்கமே நிற்பேன்.

அந்த ஒடுக்கப்பட்ட சாதியிலிருக்கும் ஒரு முதலாளி இன்னொரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் தொழிலாளியின் பக்கமே நிற்பேன்.

அந்த  தொழிலாளி வீட்டிற்கு போய் அவன் மனைவியிடம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த பெண்ணிற்க்காக நான் நிற்பேன்.

மொத்தத்தில் ஆதிக்கம்தான் என் எதிரி.

-பெரியார்

Friday, April 19, 2019

மறை நீர் (Virtual water)

மறை நீர் (Virtual water)

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

நன்றி !
படித்ததில் பிடித்தது.

Sunday, April 7, 2019

DieEmpty

*“DIE EMPTY”*🦋😌👍

One of the most beautiful  book to read is "Die Empty" by Todd Henry.

The author was inspired and got this idea of writing ​​this book while attending a business meeting.

When the director asked the audience: "Where is the richest land in the world?"

One of the audience answered: "Oil-rich Gulf states."

Another added: "Diamond mines in Africa."
Then the director said: "No it is the cemetery. Yes, it is the richest land in the world, because millions of people have departed, "they have died" and they carried many valuable ideas that did not come to light and benefited others. It is all in the cemetery where they are buried."

Inspired by this answer, Todd Henry wrote his book "Die empty." Where he did his best to motivate people to pour out their ideas and potential energies in their communities and turn them into something useful before it is too late.

The most beautiful of what he said in his book is: "Do not go to your grave and carry inside you the best that you have. “Always choose to die empty”.

The TRUE meaning of this  expression, is to die empty of all the goodness that is within you. Deliver it to the world, before you leave

If you have an idea perform it.
If you have a knowledge give it out.
If you have a goal achieve it.
Love, share and distribute, do not keep it inside.

Shall we begin to give and remove and spread every atom of goodness inside us.

Start the race....

#DieEmpty 🦋😌👍

Friday, April 5, 2019

மன அழூத்தம்

மன அழூத்தம்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு நாள் தங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.

திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் 'வெள்ளி, பீங்கான்', போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் 'கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்' போன்ற சாதாரண கோப்பைகள் வரை பல வகைகள் இருந்தன.

அனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துகொண்டு நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும் அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்

இப்போது பேராசிரியர் பேசலானார், "உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள் .கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான் மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை.விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.

வாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும் வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.

மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை.

*"எளிமையாய் வாழுங்கள்!*

*கருணையுடன் பேசுங்கள்*

*எல்லோரையும் நேசியுங்கள்!*

*வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்"*

என்றார் பேராசிரியர்

உண்மைதானே!

படித்ததில் பிடித்தது.