Wednesday, October 22, 2025

நான் ஒவ்வொரு முறை 
உங்களை விசாரிக்கும் போதும் 
'எனக்கு நிறைய நேரம் 
இருக்கிறது என்றோ
எனக்கு வேலை வெட்டி இல்லை' என்றோ 
உங்களுக்கும் தோன்றக்கூடும்

என் சக மனிதனுக்கு 
சிறிது நேரத்தை செலவிடுவதும்
என் அன்பானவர்களுக்கு கொஞ்சம் 
அக்கறையை காட்டுவதைவிடவும்
எனக்கு என்ன பெரிய வேலை இருந்துவிட போகிறது என் வாழ்வில்.

-பூமி.சாமி.

Tuesday, October 21, 2025

உன்னிடம் உரையாடும் போது
ஆயிரம் வார்த்தைகள்
வந்து வந்து போகிறது சொல்வதற்கு
ஆனாலும்  "இது உனக்கு தேவையில்லாத வேலை" என்று
அறிவுறுத்தி கொண்டே இருக்கிறது உன்னிடம் அடி வாங்கிய என் மனம்.

-பூமி.சாமி.
என்னுடைய அன்பு எளிமையானது
மிகச் சிறியது  தூய்மையானது உண்மையானது

ஆனால் நீ கொடுக்கும் எல்லாம் மிகப்பெரியது பிரமாண்டமானது ஒப்பனையானது பாசாங்கானது உண்மையுற்றது 

ஒரு வகையில்
 நான் ஒரு அன்பு முட்டாள்
 இதை புரிந்து கொள்ள எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டிருக்கிறது எனக்கு 

ஒரு நாளில் புரிந்து கொண்டேன் 
'ஒரு குழந்தையை மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல்' என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் என்பதை.

-பூமி.சாமி.
படித்துக் கொண்டிருக்கும் 
புத்தகப் பக்கங்களில் 
எறும்பு ஒன்று உலவிக் கொண்டிருக்கிறது

ஒருவேளை
இனிப்பான வார்த்தைகளை தேடுகிறது போலும் 

அந்தப் பக்கம் படித்து முடித்த பின்
எறும்பு இறங்கி செல்லும் என காத்திருக்கிறேன்

 நீண்ட தேடுதலுக்கு பின் இறங்கி செல்கிறது எறும்பு 

 நான் அடுத்த பக்கத்தில் தேடுதலை துவங்குகிறேன்.

-பூமி.சாமி.

Sunday, October 19, 2025

அனைவருக்கும் 
இனிய தீபாவளி திருநாள் 
நல்வாழ்த்துகள்.🧨💥🧨💐

Saturday, October 11, 2025

இந்த மலைக்கு 
வரும் எல்லோருக்கும் 
கொடுக்க எதோ ஒன்று
அதனிடம் இருந்து கொண்டே இருப்பதுதான் 
ஆச்சரியம்‌.

பூமி.சாமி.



Sunday, October 5, 2025

வார்த்தையில்
'வாவ் ' இருக்கும்வரை 
வாழ்கிறாய்.

-பூமி.சாமி.

Saturday, October 4, 2025

உங்கள் நடிப்போ நாடகத்தனமோ
தேவையில்லை எனக்கு 

உண்மையான 
ஒரு துளி அன்போ
அல்லது 
ஒரு துளி வெறுப்போ கூட போதும்.


-பூமி.சாமி.



Friday, October 3, 2025

இன்னும் கொஞ்சம்......


இன்னும் கொஞ்சம் நேரம் 
கடல் அலையில் 
கால் நனைத்து இருந்து இருக்கலாம் 

இன்னும் கொஞ்சம் நேரம் 
முழு நிலவு வெளிச்சத்தில் நனைந்து நடந்து இருக்கலாம்

அந்த மரத்தோடு 
இன்னும் கொஞ்சம் நேரம் செலவிட்டு இருக்கலாம்

அவர்களிடம் இன்னும் கொஞ்சம் அன்பாய் இருந்து இருக்கலாம் 

அந்த பயணத்தை இன்னும் ஒருநாள் நீடித்து இருக்கலாம்

அவர்களோடு இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம்

இப்படி பல 'இன்னும்' களோடு அலையும் மனசை

இக்கணத்தில் 'இன்னும்' கொஞ்சம் 
இருக்கலாம் என்று அழைக்கிறேன்

காதில் வாங்காமல் 
கடந்த காலத்திலேயே அலைகிறது மனசு.

-பூமி.சாமி.




உணரும் எல்லா உணர்வுகளுக்கும்
ஒரு பெயர் இருக்க வேண்டும் என்றோ
பழகும் எல்லா உறவுகளுக்கும்
ஒரு வகைப்படுத்தலில் 
அடங்க வேண்டும் 
என்றோ கட்டாயம் இல்லை.

-பூமி.சாமி.