Wednesday, June 29, 2022

தூரப் பராமரிப்பு

எனக்கும் உனக்கும்
கை கோர்க்கும் தூரம்தான் 

ஆனால்

உனக்கும் எனக்கும்
கண்ணுக்கு எட்டா 
தூரம் இருக்கிறது.

-சாமி.

Tuesday, June 28, 2022

ஏனென்றால் நீ மட்டுமே இருக்கிறாய் எனக்கு

"நீ எப்படி இருக்கிறாய்?"

"நீ சாப்பிட்டாயா?"

"நீ என்ன பண்ற?"

என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமலும்.

"ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு"

" ரொம்ப கவலையா இருக்கு"

"ரொம்ப கஷ்டமா இருக்கு"

 போன்றவை உணர்வுகளுக்கு
நீ எதையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும்,

நானாய், உனக்கு பதில்களையும் கேள்விகளையும் உணர்வுகளையும் குறுஞ்செய்தி மழையாய் பொழிகிறேன்.

-சாமி.





.....
....
இப்படி 


Sunday, June 26, 2022

மகிழ்ச்சி_என்பது_எதிர்காலம்_இல்லை_அது_நிகழ்காலம்

#மகிழ்ச்சி_என்பது_எதிர்காலம்_இல்லை_அது_நிகழ்காலம்.....

அழகான பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கருத்துரை வழங்கல் செய்பவரை காணச்சென்றாள்.

அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன்.

அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் மகிழ்ச்சிற்கு வழி சொல்லுங்கள் என்றாள்.

"கருத்துரை வழங்கல் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.

அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி *மகிழ்ச்சியை* வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..

"என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல. யாரிடமும் சிரிக்க முடியவில்லை.

என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது
ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று *மழை* பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன்.

மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன்.

அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக *வருடிக்* கொடுத்தது. கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்*..!

நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு உதவி என்னை *மகிழ்ச்சிக்கிறது* எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன்.

அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை *மகிழ* வைத்து நான் *மகிழ்ந்தேன்*.

இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் மகிழ நானும் பெரு *மகிழ்வுற்றேன்*.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.

*மகிழ்ச்சி* என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்.

"இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.

ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விடயம் *மகிழ்ச்சி,* அது அவளிடம்இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு *மகிழ்ச்சியாக* இருக்கிறீா்கள் என்பதில் இல்லை...

உங்களால் அடுத்தவர் எவ்வளவு *மகிழ்ச்சி* ஆகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது...

*மகிழ்ச்சி* என்பது போய் சேரும் இடம் அல்ல .

அது அற்புத ஒரு பயணம்...

*மகிழ்ச்சி* என்பது எதிர்காலம் இல்லை
அது நிகழ்காலம்...

*மகிழ்ச்சி* என்பது ஏற்றுக்கொள்வது அல்ல

அது ஒரு முடிவு...

நீங்கள் என்ன வைத்திருக்கிறீா்கள் என்பதில் இல்லை *மகிழ்ச்சி* நீங்கள் யார் என்பதில் தான் *மகிழ்ச்சி* !

"*மகிழ* வைத்து *மகிழுங்கள்* உலகமும் இறையும் உங்களை கண்டு *மகிழும்*..!

படித்ததில் பிடித்தது.

Saturday, June 25, 2022

அம்மா.........

இப்பொழுதும் பயணப்படுகிறேன்
உன்னுடைய வழி அனுப்புதல் இல்லாமல்.

இப்பொழுதும் பிறந்தநாள் திருமண நாள் கொண்டாடுகிறேன்
உன்னுடைய ஆசியும் நீ கொடுக்கும் பத்து ரூபாய் பணமும் இல்லாமல்.

இப்பொழுதும் திருவிழாக்கள் போகிறது
நீ எங்களுக்கு இடும் திருநீறு இல்லாமல்.

இப்பொழுதும் தவறு செய்கிறேன்
தலையில் உன்னிடம் குட்டு வாங்காமல்

இப்பொழுதும் தலை சீவுகிறேன்
" என்னடா சாமி தலை வழுக்காயிட்டு"
என்ற வார்த்தைகள் இல்லாமல்.

இப்பொழுது வலி மாத்திரைகள்
கேட்பார் அற்று கிடக்கின்றன.

இப்பொழுதெல்லாம் வீட்டில் தேநீர் மிஞ்சி கிடக்கிறது.

வீட்டை சுற்றி சருகுகள் உன் பெருக்களுக்காக காத்து கிடக்கின்றன.

வீட்டை சுற்றி உள்ள பாதை நடப்பார் அற்று கிடக்கின்றன.

வீட்டின் கொல்லை கதவுகள் நீ வந்து மூடக் காத்துக்கிடக்கின்றன.

வீட்டில் கோழி நீ வந்து கவுப்பாய் என்று 
வெளியில் உட்கார்ந்து இருக்கிறது.

வீட்டில் மாடு நீ வந்து அவில்பாய் என் கட்டியே இருக்கிறது.

வீட்டு நாய் உன் ஒரு உருண்டை சோறுக்காக காத்துக்கிடக்கிறது.

இங்கு எல்லோரும் காத்துக்கிடக்க 
நீ காலத்தோடும் கடவுளோடும் உறைந்து
போனதேன் அம்மா.

-சாமி.









Wednesday, June 22, 2022

எளிமையான வைகை புயலின் வாழ்வியல் பதம்.

நமக்கு வந்தா இரத்தம்
அடுத்தவருக்கு வந்தா தக்காளி சட்னி.



Monday, June 20, 2022

பிறரை இகழ நினைக்கிறேன்
ஒராயிரம் வார்த்தைகள் வரிசை
கட்டி நிற்கின்றன. அதைவிட
ஒன்றிரண்டு வார்த்தைகள்
கூடுதலாகவே உதிர்க்கிறேன்.

பிறரை புகழ நினைக்கிறேன்
ஒன்றிரண்டு வார்த்தைகளே வருகின்றன
அதையும் உதிர்க்க மனமில்லாமல்
ஒளித்து வைத்துக் கொள்கிறேன்.

-சாமி.

Friday, June 17, 2022

கடலளவு வார்த்தைகளை விட ஒரு துளி செயல் பெரிது.

 அன்பு அக்கறை பரிவு
சிறு துளியாக இருந்தாலும்
உங்களது உள்ளத்திலிருந்து உணர்விலிருந்து செயலிலிருந்து 
உண்மையாக வெளிப்படுத்துங்கள்,

வாயிலிருந்து வார்த்தைகளாக
வண்ண வண்ண நடிப்பை காட்டி  உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றி கொள்ளாதீர்கள்.

-சாமி.


Thursday, June 9, 2022

கிராம உண(ர்)வு

பழைய சாதம் சாப்பிடப்பின்
கடைசி ஒருப்பிடி காக்கைக்கு
மிஞ்சிய நீரகாரம் மாட்டுக்கு
கட்ட கடைசி அடி நீராகாரம் பூமிக்கும்
மண் வாழ் உயிரிக்கும்.
 
-சாமி.

Sunday, June 5, 2022

அம்மா...........


இன்னமும் உன் கைப்பற்றி நடப்பதால்தான் நான் ஒழுங்கான வழியில்.

நீ என்னை 'சாமி' என்று கூப்பிடும் குரல் தான் என் சாமியின் குரல்

ஓராயிரம் கோவிலில் இரக்க மூடியாத
என் மனபாரம் ஒரு நொடியில் உன் பாதம் தொட இறங்கி போகும்.

பத்து மாதங்கள் வயிற்றிலும் வாழ்க்கை முழுவதும் மனதிலும் எங்களை  சுமந்தவள் நீ
ஆனால் உன்னை வார்த்தையில் மட்டுமே சுமக்கிறேன் நான்.

ஒரிரு நாட்கள் நீ அணிந்த செயினும் வளையலும் ஓராயிரம் நாள் வங்கியில் இருந்து என்னை படிக்க வைத்தன.

வாழ்நாள் முழுவதும் எங்களை தாங்கி பிடித்த அன்பை நிறுத்தி கொண்டாய்.

மீத வாழ்நாள் முழுவதும் எங்களை தாங்கி பிடிக்க உன் நினைவுகளை விட்டு சென்றாய்

வலிமாத்திரை  போட்டு உன் வலியை போக்கி கொண்டாய்.

மாத்திரை போட்டாலும் தீராத வலியை 
எங்கள் வாழ்நாள் முழுவதும் தந்து சென்றாய்.

சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாகப்தம் ஆகி சாகா நினைவாக என்று என்றும் இருப்பாய் எங்கள் மனதில். 

உன் அன்பு மகன் சாமி.