நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும்போது நெல் சேமித்து வைக்க வீட்டில் பத்தாயம், குதிர் என்று இருக்கும். பத்தாயம் மரத்தால் செய்யப்பட்டது சற்று பெரிதாக இருக்கும், பெரும்பாலும் சதுர அல்லது செவ்வக வடிவில் இருக்கும், மரப்பலகையில் பெட்டி பெட்டியாக செய்து ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி செய்யப்பட்டிருக்கும்.
நெல்லை உள்ளே கொட்டுவதற்கு மேல் பெரிதாக ஒரு துவாரமும், கீழே நெல்லை வேண்டும்போது சிறிது சிறிதாக எடுக்க சிறிதாக ஒரு துவாரமும் இருக்கும், சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை அதாவது 50 அல்லது 60 மூட்டை போடும் அளவிற்கு கூட இருக்கும், மூட்டை என்பது 24 மரக்கால் நெல் ஆகும்,
நெல் அறுவடை செய்து அதனை நன்றாக தூற்றி காய வைத்தபின், அதனை பத்தாயத்தில் சேமித்து தேவையான போது எடுத்து அரைத்து அரிசியாக மாற்றி கொள்வோம். பெரும்பாலும் அறுவடை நேரங்களில் நெல்லின் விலை குறைவாக இருக்கும் அதனால் சேமித்து பின் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு விற்றால் வேல் நல்ல விலை போகும் அதுவே பத்தாயத்தின் பெரும் பயன். கிராமத்தில் தொழிலாளர்களுக்கும் கூலி நெல்லாகவே கொடுக்கப்படும்.
நெல்லை உள்ளே கொட்டுவது என்பது மிக மகிழ்ச்சியான ஒரு வேலையாகும், எங்கள் வீட்டில் அது பெரும்பாலும் அதிகாலை 5 மணிக்கு நடக்கும், காலை 5 மணிக்கு எல்லோரையும் எழுப்பி விடுவார்கள் பெரும்பாலும் நான் மேல் உட்கார்ந்து கொள்வேன், அதன் உயரம் ஒரு 10 அடி இருக்கும், ஏறக்குறைய ஓட்டு வீட்டின் உத்தரத்தை இடிக்கும் அளவிற்கு இருக்கும், கீழிருந்து என் சகோதர சகோதரிகள் நெல் மூட்டைகளைப் பிரித்து நெல்லை கூடையில் கொட்டி எடுத்து தருவார்கள், மேலிருந்து அந்த நெல் மணிகளை உள்ளே கொட்டும்போது நெல்லிருந்து வரும் நறுமணம் நாசியை துளைக்கும்.
நெல் போடுவதற்கு முதல் நாள் அந்த பத்தாயத்தை சுத்தம் செய்யவேண்டும், அதாவது கொஞ்சம் பழைய நெல் அடியில் இருக்கும், அதைக் கூட்டி அள்ள உள்ளே இறங்க வேண்டும், இறங்க இரும்பு கம்பியும் பலகை ஓரத்தில் சக்கையும் அடிக்கப்பட்டிருக்கும், சுத்தமாக கூட்டி தள்ளிவிட்டு பிறகு நொச்சி இலை வேப்ப இலை போட்டு கீழ் நெல்லை எடுக்கும் துளையை அடைத்து வெளியில் பூட்டு போட்டு விடுவோம், பூட்டு போடவில்லை என்றால் சிறு பிள்ளைகள் அதை விளையாட்டாக திறந்து விட வாய்ப்பு இருக்கிறது.
எங்கள் வீட்டில் மூன்று பத்தாயங்கள் இருந்தன, அவை பெரும்பாலும் குடும்ப உறுப்பினர் போலவே நடு வீட்டில் அடைத்து உட்கார்ந்து கொண்டிருக்கும். எப்பொழுதெல்லாம் வீட்டில் பணம் இல்லையோ அப்பொழுதெல்லாம் பத்தாயத்தை திறந்து சில மூட்டைகளை எடுத்து விற்று பணம் பெறுவோம், பத்தாயம் ஆபத்தில் அவசரத்தில் உதவும் நண்பன் போலவே நம்மோடு இருக்கும், சில பொருட்கள் பண்டமாற்று முறையில் வாங்குவதற்கும் சில நேரங்களில் கொஞ்சமாய் நெல் எடுப்போம் உதாரணமாக உப்பு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவை வாங்க நெல் எடுப்போம் .
அப்பாவிடம் பணம் கேட்க முடியாத நேரங்களில் அம்மா அப்பாவிற்கு தெரியாமல் நெல் எடுத்து என்னிடம் கொடுத்து விற்க சொல்லும், அது பெரும்பாலும் பாத்திரம் வாங்குவதற்காகவே இருக்கும்.
சுவற்றுக்கும் பத்தாயத்திற்கும் ஒரு சந்து இருக்கும் அதுதான் பெரும்பாலும் நாங்கள் ஒளிந்து விளையாடுவதற்கான இடமாக இருக்கும், அதே போல் பத்தாயத்தின் கீழ் நல்ல இடைவெளி இருக்கும் அங்குதான் அருவா, மண்வெட்டி, கடப்பாரை இதுபோல இரும்பு சாமான்கள் போடுவதற்கு பயன்படுத்திக் கொள்வோம். நான் அந்த இடைவெளியில் கொஞ்சநாள் முயல் வளர்த்தேன்.
கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு மூன்று பத்தாயங்கள் இருக்கும், தன்னுள் நெல்லை நிரப்பி எங்களின் மனதை, வயிற்றை நிறைத்த பத்தாயங்கள் இன்று ஒரு வீட்டில் கூட இல்லை என்பது தான் மிகுந்த வருத்தத்திற்குரியது செய்தி.
கஷ்ட காலங்களை அள்ளி அள்ளி எடுத்துக் கொள்ள இருந்த அட்சய பாத்திரங்கள் காலத்தால் அழிந்து விட்டன. பத்தாயத்தில் நெல் வெளிவந்து கொட்டும் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
குதிர் என்பது சிறிய அளவில் மண்ணால் செய்யப்பட்ட வட்ட வடிவ உறையால் செய்யப்பட்டிருக்கும், அது மாட்டு சாணத்தால் மொழுகப்பட்டிருக்கும் அது பெரும்பாலும் விதை நெல் பதப்படுத்தி வைக்க பயன்படும் அதுவும் பயன்பாட்டில் இருந்து அகன்றுவிட்டது.
தன்னுள் நெல்லை நிறைத்து எங்களின் மனதை நிறைத்துக் கொண்டிருந்த பத்தாயம், குதிர் ஆகியவைகளை இனிவரும் சந்ததிகள் google இமேஜில் மட்டுமே பார்க்க முடியும் என்பது தான் வருத்தமான உண்மை.
நன்றி.
-பூமி.சாமி.
Wonderfully picturised the true age old practice ..I can feel the beauty of dropping of grains after sundry ..I too experienced these during 94-95 while at Tanjore working for a FAO sponsored project ,visiting almost all villages ..only few families had it in right usage ..others had placed it outside and was using other than storage of grains ..
ReplyDeleteThe importance of locking is well appreciated ... many ancestral families have said about losing of one member accidentally in pathyam. Keep writing sir .Very soothing narration.God bless .