Friday, February 24, 2023

வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கை என்றால் என்ன?

 ஒவ்வொருத்தவரிடமும் ஒவ்வொரு பதில்

 இத்தருணத்தில் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

அடுத்தவருக்கு உதவிடுவதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்

அன்பு செய்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

 குடும்பத்திற்கு உழைப்பதே வாழ்க்கை என்பார் மற்றொருவர்

 பயமில்லாமல் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

நாட்டுக்காக வாழ்வது வாழ்க்கை என்பார் இன்னொருவர் 

நம் இயல்பாய் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

அடுத்தவரை மன்னிப்பதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்

 உயிரோடு இருப்பதே வாழ்க்கை என்பார் ஒருவர்

நோயற்று வாழ்வதே வாழ்க்கை என்பார் இன்னொருவர் 

நோக்கமுடன் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

 பதில் இல்லா கேள்விதான் 'வாழ்க்கை'  என்கிறார் ஓஷோ 

அப்பதிலை தேடுவது தான் வாழ்க்கை என்கிறேன் நான்.

-சாமி.

அர்த்தமுள்ள மௌனம்

என் பெரும்பாலான கேள்விக்கு உன் பதில் மௌனம் தான்,
உன்னை புரிந்ததனால்
உன் மௌனத்தின் அர்த்தமும்
நன்றாகவே புரிகிறது எனக்கு.

-சாமி.

Sunday, February 19, 2023

அக்கறை

இன்பமோ துன்பமோ என் விரல்கள் தொடுதிரையை தொட்டு உன்னைத்தான் அழைக்கிறது பகிர்ந்துக்கொள்ள

 நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் கற்பனையில் உன் விரல் பற்றியே நடக்கிறேன் 

ஆறுதல் தேவைப்படும்போதெல்லாம் உன் தோள்களை தான் தேடி அலைகிறேன் 

கனிவு தேவைப்படும் போதெல்லாம் உன் கண்களைத் தான் தேடுகிறேன்

 உன்னிடமிருந்து எனக்கு ஒன்றுமே வேண்டாம் உன் அக்கறையை மட்டும் தந்து விட்டுப் போ அது என்னை கரை சேர்க்கும்.

-சாமி.
நான் அடை மழையாய்
கொட்டும் வார்த்தைகளுக்கு
மௌன தூரலாய் வருகிறது உன் பதில்

தூரல்தான் அழகு என்பதை சொல்லிதான்
தெரிய வேண்டுமா என்ன.

சாமி.

Friday, February 17, 2023

படித்ததில் பிடித்த வரிகள்

நீ சொல்லவும் 
இல்லை...
நான் கேட்கவும்
இல்லை...
இத்தனை ஆண்டுகளாகியும்...
இன்னும்...
நீயும் ...
கேட்கவில்லை...
நானும்... 
சொல்லவில்லை...
நாம் பிரியவும் இல்லை... 
நாம் சேரவும் இல்லை....
இருந்தாலும்... 
நம் இதயத்தில்...
ஏதோ...
ஓர் ஓரமாய்...
ஓசையின்றியே... 
துடித்துக் கொண்டு தான் 
இருக்கிறது... 
'அக்கறை' என்ற பெயரில் 
என் மீது நீயும்...
உன் மீது நானும்...
பரிமாறிக் கொள்ளும்... 
நம் காதல்...💜

 ✨ கண்ணம்மா
*ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி :  "இந்து" நாளிதழ் பதிப்பு!!*

*உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.*
 இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.

*1. கதிரவனைப் போல்...*

காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.

*2. புன்னகை அவசியம், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம்...!*

உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.

*3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...*

பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

*4. பாடம் வேண்டாம்...*

 ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.

*5. கேள்வி கேளுங்கள்...!*

 பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.

*6 . கடைசி அய்ந்து நிமிடங்கள்...!* 

புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி அய்ந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.

*7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்...*

 மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.

*8. பாடப்புத்தகத்தை தாண்டி...!*

வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.

*9. உங்கள் பிள்ளை அவர்கள்...!*

 மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

*10. நம்பிக்கையைக் கொடுங்கள்...!*

 உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.

*நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்!...*
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

Thursday, February 16, 2023

படித்ததில் பிடித்தது

அவர்கள் எப்போதும் என்னோடே இருந்து விட மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் 

அவர்கள்  இடையில் எப்போதாவது என் கைகளை உதறிச் செல்வார்கள் என்பதும் எனக்குத் தெரியும்

அதற்காய் இப்போது என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் கைகளை என்னால் உதறித் தள்ளிட முடியாது 
என் இதயங்கள் அந்தளவு இரும்பாலானவை அல்ல 

அவர்களின் இதயங்கள் எப்போது அப்படி இரும்பாலான இதயங்கள் ஆகின்றனவோ அப்போது அவர்கள் என்  கைகளை உதறிச் செல்லட்டும் 

பரவாயில்லை அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை  

கடைசி வரை நான்  இப்படியே மழைக்கு ஒதுங்கி நிற்க இடம் கொடுக்கும் ஒரு மரமாய் அவர்களின் வாழ்க்கையில் இருந்து விட்டுப் போகிறேன் 

அதற்காய் நான் ஒரு போதும் அவர்களோடு கோபித்துக் கொள்ளப் போவதில்லை 
சண்டையிட்டுக் கொள்ளப் போவதுமில்லை இன்னும் அவர்களை எண்ணி கண்ணீர் வடிக்கப் போவதும் இல்லை துக்கம் கொண்டாடப் போவதுமில்லை

மழைக்காக தன்னிடம் ஒதுங்கிய மனிதர்கள் தன்னை விட்டுப் போவதை எண்ணி எந்த மரமும் கண்ணீர் வடிப்பதுமில்லை துக்கம் கொண்டாடுவதுமில்லை 

தன்னைத் தேடி வருபவர்களை மீண்டும் மீண்டும் அனைத்துக் கொள்கிறது அவ்வளவுதான். 

-அரூஸா ஜெவாஹிர்-✍️