Saturday, October 28, 2023

படித்ததில் பிடித்தது

*வருமானம்* *இல்லா* *வாழ்க்கையை* *விட தன்மானம்* *இல்லா* *வாழ்க்கையே* *அவமானம்.* 
                 உங்களுக்கென ஒரு தன்மானம் எப்போதும் இருக்க வேண்டும்.

அது மற்றவர்களால் “திமிர்” என பார்க்கப்பட்டாலும் அந்த தன்மானத்தில் இருந்து எப்போதும் விலக்காதீர். 

வறுமை உங்களை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான மரியாதையை தேடி தரும்.

தன் மீது குப்பைகள் விழுவதை கடலால் தடுக்க முடியாது.

ஆனால். அவைகளை, தன் அலையின் சக்தியைக்கொண்டு, தூக்கி தூர கரையில் வீச முடியும்.

அதுபோலத்தான். நம்மீது விழுகின்ற, இழிசொல், பழிச் சொல் இவைகளை நம்மால் தடுக்க முடியாது.

ஆனால், அவைகளை, அலட்சியம் படுத்துவதின் மூலம், தூக்கி தூர வீச முடியும்.

எந்த ஒரு மனிதனும் தனக்குப் பிடித்த ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேசாத வரை அவனது கவலைகளும் கஷ்டங்களும் எந்தக் காலத்திலும் முடிவுக்கு வருவதில்லை.

பிடிவாதம் அதிகமானால் தன்னைச் சேர்ந்தவர்களை விட்டுத் தொடர்ச்சியாகப் பிரிந்து விட வேண்டியது தான்.

உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இடத்தில் சிரித்தாலும் அழுதாலும் ஒன்று தான்.

சோறு பொங்கும் போது தீயைக் கம்மிப் பண்ணுங்க. மனசு பொங்கும் போது வார்த்தைகளைக் கம்மிப் பண்ணுங்க.

அதுதான் வாழ்க்கைக்கு  அழகு.

Thursday, October 26, 2023

நம் வகுப்பறை

எவ்வளவு பாடங்களைக் கேட்டிருக்கும் எவ்வளவு பேரை பார்த்திருக்கும் எவ்வளவு அறிவுரைகள் கேட்டிருக்கும் எவ்வளவு பரீட்சைகளை பார்த்திருக்கும் எவ்வளவு கதைகளை கேட்டிருக்கும்
எவ்வளவு பேரின் வாழ்வை மாற்றியிருக்கும்

எவ்வளவு உரையாடல்களை உணர்ந்திருக்கும்
 எவ்வளவு சோகங்களை சுமந்திருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியை சந்தித்திருக்கும்

எவ்வளவு மகிழ்ச்சி சோகம் நம்பிக்கை
நட்பு  நன்றி மறத்தல்  நம்பிக்கை துரோகம்

 இவ்வளவு அறிந்த பின்னும்
 அனுபவம் பெற்ற பின்னும் 
இன்னும் அமைதியாகதான் இருக்கிறது 

" நம் வகுப்பறை".

பூமி.சாமி.

Wednesday, October 25, 2023

அடுத்தவரை அலட்சியம்
செய்து பார்ப்பதில் அலாதி பிரியம்
சிலருக்கு.

பூமி.சாமி‌

Monday, October 23, 2023

பேச விருப்பம் இருந்தால்
பேசுங்கள்,
நீங்கள் பேசுவது 
தாமரை இலையில்
தண்ணீர் போல்
இருக்கிறது.

பூமி.சாமி.

Sunday, October 22, 2023

எங்கள் ஊர்

உலகில் எங்கு சென்றாலும்
என் கரங்களை மட்டும் விடுவதே இல்லை கண்ணந்தங்குடி 

உன்னில் தான் பிறந்தேன் 
உன்னால் தான் வளர்ந்தேன் 
உன்னில் தான் மடியப் போகிறேன் 

எங்கு வேண்டுமானாலும் செல் 
எங்கு வேண்டுமானாலும் வாழ்
என்னை விட்டு நீங்காதே என்கிறது 
 கண்ணந்தங்குடி

எங்கு சென்றாலும் கண்ணை அயராமல் என்னை காக்கிறது கண்ணந்தங்குடி

எனக்கு வாழ கற்றுக் கொடுத்தது வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் வேறுபாட்டை கற்றுக் கொடுத்தது 
கண்ணந்தங்குடி

 கண்ணனுக்கு கண்ணாய்
உயிருக்கு உயிராய் 
என்னை காத்து நிற்கிறது கண்ணந்தங்குடி

 நான் ஒரு பொம்மலாட்டக் கலைஞன் என்னை கட்டுப்படுத்தும் கயிறு 
 கண்ணந்தங்குடி

 பழகுவதற்கும் 
பாசம் வைப்பதற்கு 
பற்றற்று இருப்பதற்கும் 
கற்றுக் கொடுத்தது  கண்ணந்தங்குடி

அது ஒரு கலாச்சார கடல்
அன்பின் பெருங்கூட்டம் 
அக்கறையில் தாய் 

மாமன் மச்சான் பங்காளி அத்தை அக்கா தங்கை அண்ணன் என ஒரு பாச பெருங்கடல்

 நாங்கள் வாழ்வதோ உலகெங்கும் ஆனால் எங்கள் உள்ளத்தில் என்றென்றும் உறங்குவது எங்கள் ஊர் 

ஊரை சுற்றி வந்தால் உலகை சுற்றிய திருப்தி 

அது பசுமை போர்த்திய நெற்குன்று
 நீரால் நிரம்பி வழியும் நீலக்கடல்

 தப்பு செய்த போது தட்டி வைத்தது சோகமாய் இருந்த போது தோள் கொடுத்தது 
சாதிக்க துணிகையில் நம்பிக்கை தந்தது
கையறு நிலையில் இருந்த போது கை கொடுத்தது

 கல்வியை எல்லோருக்கும் கண்ணாய் கொடுத்தது 
அதுதான் எங்களுக்கு உலகை சுற்றிவர கருவியாக அமைந்தது 

ஒற்றுமையாய் இருக்க மலையேறி அம்மனை கொடுத்தது
நாங்கள் ஒன்று கூட திருவிழாவை வைத்தது 

ஒருவர் கூட பசியோடு உறங்க விட்டதில்லை  கண்ணந்தங்குடி
எந்த வீட்டை தட்டினாலும் சோறும் நீரும் கிடைக்கும் 

மனிதன் மட்டுமல்ல எந்த உயிரும் பசியோடு உறங்க விட்டதில்லை எங்கள் ஊர் 

நான் கவலைப்படும்போதெல்லாம் என்னை நினைவுகளாலும் கனவுகளாலும் அணைத்துக் கொள்ளும் 
கண்ணந்தங்குடி

 என்னை எப்பொழுதும் தனி மரமாய் விட்டதில்லை எங்கள் ஊர்

 ஒவ்வொரு முறை செல்லும் போதும் என்னை பிடித்து வைத்துக் கொள்கிறது
 கண்ணந்தங்குடி
ஆனால் பிழைப்புத்தான் விடமாட்டேன்
என்கிறது.

பூமி.சாமி.


Wednesday, October 18, 2023

ஒரு மாணவி
தனது பட்டப்படிப்பு சான்றிதழை பெறுவதற்காக கல்லூரிக்கு வருகிறார் 
அதை அலுவலத்தில் பெறுகிறார்
அப்பொழுது அங்கு அவருக்கு பாடம் நடத்திய ஒரு  பேராசிரியரும் அங்கு இருக்கிறார்
அந்த மாணவி அவர் அங்கு இருப்பது தெரிந்தும்
கண்டுக் கொள்ளாமல்
சான்றிதழை பெற்று செல்கிறார்.

இதுதான் இன்றைய நிலை.
மிகுந்த வருத்தத்திற்குரியது.



Sunday, October 15, 2023

காலம் தன் மறதி
கரங்களால் உன்
நினைவுகளை 
என்னிடமிருந்து
திருட முயல்கிறது 

தினம் தினம்
அதை எடுத்து
துடைத்து
நினைத்து
மகிழ்ந்து
வேறு வேறு இடத்தில் 
மறைத்து வைக்கிறேன் நான்.

-பூமி.சாமி.