Sunday, January 22, 2023

80 களில் அணிந்த இலவச காக்கி கால் சட்டை

காக்கி கால் சட்டை
 இடுப்பிலும் நிற்காது 
பட்டணும் இருக்காது 
அருணா கயிறுக்கும் சிக்காது

 மதிய சத்துணவில் கொடுத்தது
 உலக மண்ணே ஒட்டினாலும் ஒன்னும் ஆகாது
 ஒரு கையை எப்பொழுதும் ஒதுக்கி விட வேண்டும்
 அதை விழாமல் பிடிப்பதற்கு

 இரு மஞ்சப்பை சாமான்கள் ஒரு பையில் கொள்ளும் 
விளையாட்டு சாமான்கள்,
பலுங்கி, பம்பரம், எல்லாம் அதன் உள்ளே ஐக்கியம் 

நெல்லிக்காய், இலந்தை, நாவல் பழம், விளாம்பழம், கடலை,  தீபாவளி முறுக்கு,  சீசனுக்கு ஏற்றார் போல் பையை நிரப்பிக் கொள்ளும் பாங்கான காக்கி கால் சட்டை

 அம்மா கடைக்கு அனுப்பும்போது வெங்காயம், தக்காளி, மளிகை, என நிரப்பி இருபிள்ளைதாட்சி  போல் 
காட்சி தரும் கால் சட்டை 

எத்தனையோ அழுக்கு, எண்ணெய் பசை எதனாலும் அதன் கலரை மாற்ற முடியாது
 அதற்கு ஆகாத ஒரு பொருள் உண்டென்றால் அது தண்ணீர் தான்

 அடுத்த முறை சத்துணவில் புதிய கால் சட்டை கொடுக்கும் வரை அதுதான் முழு நேர சட்டை எனக்கு

 முழுக்கால் சட்டை வித வித வண்ணத்தில் போட்ட பின்பும் இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது அந்த காக்கி கால் சட்டை

-சாமி.

Saturday, January 21, 2023

*🙏மனமே அமைதிகொள்🙏*

*_✍️ படைப்பு:_*
*════════*

*⚜️ ஒரு அரசன் தனது மந்திரியை அழைத்து:...*

*⚜️ இதோ பார் மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன்.*

எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. 

இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது.

 சலிப்பும், வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது. 

ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே, 

அவன் என்னை விட 
வாழ்வில்  மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகிறேன்.

 ஆனந்தத்தில் அவன் 
மிதக்கிறான். பார்க்க பொறாமையாக 
இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டான். 

உடனே அந்த மந்திரி, அரசே! அந்த 
சேவகனிடம் 99 ஆட்டத்தை  பரீட்சித்துப் 
பாருங்கள்' என்றான். 

அதற்கு அரசன்: அது என்ன 99 ஆட்டம்? 
புதுமையாக இருக்கிறதே!" என்றான். 

அதற்கு மந்திரி சொன்னான், 99 ஆட்டம் 
என்பது 99 பொற்காசுகளை எடுத்து 
ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு 
வாசலில் வைத்துவிடுங்கள். 

"100 பொற்காசுள் உங்களுக்கான 
அன்புப் பரிசு " என்று அதிலே எழுதி 
வைத்துவிட்டு வந்துவிடுங்கள். 

பின்பு என்ன நடக்கிறது என்று 
பொறுத்திருந்து பாருங்கள்!" என்றான். 

அப்படியே அரசனும் செய்துவிட்டு 
அவதானித்தான்.

பொற்காசுள் நிறைந்த 
பையைக்கண்ட சேவகன் ஆனந்தத்தில் 
மிதந்தான். 

பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது.

 கட்டாயம் ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்' என மனதில் நினைத்துக்கொண்டான். 

அதன்படி அவனும், அவனது மனைவி, பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர்.

 தேடித்தேடி இரவும் முடிந்து பொழுதும் விடிந்தது, 

தேடல் மாத்திரம் முடிந்தபாடில்லை. 

கோபமடைந்த சேவகன் அவர்கள் மீது 
எரிந்துவிழத் தொடங்கினான். அவன் 
மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது.

மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான். 

புன்முறுவல் பூத்திருந்த அவனது முகம் சிடுமூஞ்சாக மாறியிருந்தது. தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் ஓரமாக நின்று 
பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு 
99 ஆட்டம் என்றால் என்னவென்று புரிந்து போய்விட்டது.  

🙏அதுதான் நண்பர்களே!....
அந்த வல்ல இறைவன் நமக்கு 
வழங்கிய 99 வகையான 
செளபாக்கியங்களோடு இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். 

வாழ்வில் நமக்கு கிடைக்காத 
அந்த ஏதோ ஒரே ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு 
வாழ்ந்து வருகிறோம். ஏங்கித் தவிக்கிறோம்.  

*கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒன்றுக்காக மனக்கவலையோடு வாழ்துவருகிறோம்.*

*🙏மனமே அமைதிகொள்🙏🌹*

Saturday, January 14, 2023

என் கண்பட்டுவிடும் என எதையும் பகிர மறுக்கிறாய் நீ
உன் கண்ணில் எனதெல்லாம் படவேண்டும் என பகிர்ந்து விடுகிறேன் நான் 

-சாமி.

Tuesday, January 10, 2023

மலரே உன் மலர்மடியில் மகனாய்
பிறப்பாய் என நாங்கள் மகிழ்ந்திருக்க

தளிரே நீ இத்தரணியில் எங்கள் மகனாய் பிறக்காமல் ஏனடா கடவுளின் மகன் ஆனாய்

மறுபிறப்பாய் மறுவுறுவாய் மீண்டும்
மலர் மடியில் பிறப்பெடுப்பாயா மகனே நீ எங்களை மகிழ்விக்க.


-சாமி.



Friday, January 6, 2023

BUSY..........

இப்பொழுதெல்லாம் வேலையே இல்லையென்றாலும் busy என்றே சொல்லிக்கொள்கிறேன்

ஒவ்வொரு message க்கும் சில மணி நேரம் கழித்தே பதிலிடுகிறேன் 

வரும் அழைப்புகளுக்குக்கூட
அப்பறம் பேசுகிறேன் என்று பதிவிடுகிறேன்

நண்பர்கள் இன்று சந்திக்கலாமா என்று கேட்டால்க்கூட அப்பறம் பார்க்கலாம் என்கிறேன்

"U had breakfast?" என்று வரும் இடுகைக்கு
" I had dinner " என்ற பொழுதில் பதிலிடுகிறேன் 

இவ்வளவை செய்யும் நான்
என் இடுகைக்கு உடனே பதில்
வரவில்லை என காயப்படுகிறேன்

இப்பொழுதெல்லாம் வேலையே இல்லையென்றாலும் busy என்றே சொல்லிக்கொள்கிறேன்.

-சாமி.









பட்(ட)டு மரம்

எங்க ஊரில் பட்ட மரம் ஒன்னு ரோட்டோரத்தில் இருக்கு

பயணிகளுக்கு அது "பட்ட மர பஸ் ஸ்டாப்"

அதில் பச்சை கிளிக்கு
பக்குவமாய் ஒரு பொந்து வீடு

புதியவர்களுக்கு "பட்ட மரத்துக்கு பக்கத்து தெரு" வழிக்காட்ட உதவும்
லேண்ட் மார்க்

மரங்கொத்திக்கு தனது பட்டைக்குள் 
புழுவை ஓளித்து உணவிடும் அட்சய பாத்திரம்

எங்க ஊரு ஆசாரிக்கு அது ஒரு பீரோ 
இரண்டு பெஞ்சு

எங்க ஊரு மனிதர்களுக்கு முதுமையின்
கொடுமையை காட்டி நிற்கும் தத்துவம்

பல புயல் மழையை இலை கிளை துணை இல்லாமல் எதிர்த்து நின்று
வென்ற தனிமரம் 

இப்படி  வாழ்ந்து வழிகாட்டி நிற்கும்
அம்மரத்திற்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர் " பட்டமரம்".

-சாமி.

Wednesday, January 4, 2023

தலையில் வாங்கிய குட்டு

மைதானத்தில் நடந்த வாத்து நடை

கையில் வாங்கிய பிரம்பு அடி

தரையில் போட்ட முட்டிக்கால் 

வகுப்பறையின் வாசலில் நின்றது

பெஞ்சில ஏறி நின்றது

காதில் கிள்ளு வாங்கியது

பத்துமுறை எழுதியது

தோப்புக்கரணம் போட்டது

இவை ஏற்படுத்திய வலிகள் தான்

இன்னும் என்னை வழிநடத்துகிறது
ஒழுக்கமான வழிகளில்.


-சாமி.