Saturday, June 25, 2022

அம்மா.........

இப்பொழுதும் பயணப்படுகிறேன்
உன்னுடைய வழி அனுப்புதல் இல்லாமல்.

இப்பொழுதும் பிறந்தநாள் திருமண நாள் கொண்டாடுகிறேன்
உன்னுடைய ஆசியும் நீ கொடுக்கும் பத்து ரூபாய் பணமும் இல்லாமல்.

இப்பொழுதும் திருவிழாக்கள் போகிறது
நீ எங்களுக்கு இடும் திருநீறு இல்லாமல்.

இப்பொழுதும் தவறு செய்கிறேன்
தலையில் உன்னிடம் குட்டு வாங்காமல்

இப்பொழுதும் தலை சீவுகிறேன்
" என்னடா சாமி தலை வழுக்காயிட்டு"
என்ற வார்த்தைகள் இல்லாமல்.

இப்பொழுது வலி மாத்திரைகள்
கேட்பார் அற்று கிடக்கின்றன.

இப்பொழுதெல்லாம் வீட்டில் தேநீர் மிஞ்சி கிடக்கிறது.

வீட்டை சுற்றி சருகுகள் உன் பெருக்களுக்காக காத்து கிடக்கின்றன.

வீட்டை சுற்றி உள்ள பாதை நடப்பார் அற்று கிடக்கின்றன.

வீட்டின் கொல்லை கதவுகள் நீ வந்து மூடக் காத்துக்கிடக்கின்றன.

வீட்டில் கோழி நீ வந்து கவுப்பாய் என்று 
வெளியில் உட்கார்ந்து இருக்கிறது.

வீட்டில் மாடு நீ வந்து அவில்பாய் என் கட்டியே இருக்கிறது.

வீட்டு நாய் உன் ஒரு உருண்டை சோறுக்காக காத்துக்கிடக்கிறது.

இங்கு எல்லோரும் காத்துக்கிடக்க 
நீ காலத்தோடும் கடவுளோடும் உறைந்து
போனதேன் அம்மா.

-சாமி.









Wednesday, June 22, 2022

எளிமையான வைகை புயலின் வாழ்வியல் பதம்.

நமக்கு வந்தா இரத்தம்
அடுத்தவருக்கு வந்தா தக்காளி சட்னி.



Monday, June 20, 2022

பிறரை இகழ நினைக்கிறேன்
ஒராயிரம் வார்த்தைகள் வரிசை
கட்டி நிற்கின்றன. அதைவிட
ஒன்றிரண்டு வார்த்தைகள்
கூடுதலாகவே உதிர்க்கிறேன்.

பிறரை புகழ நினைக்கிறேன்
ஒன்றிரண்டு வார்த்தைகளே வருகின்றன
அதையும் உதிர்க்க மனமில்லாமல்
ஒளித்து வைத்துக் கொள்கிறேன்.

-சாமி.

Friday, June 17, 2022

கடலளவு வார்த்தைகளை விட ஒரு துளி செயல் பெரிது.

 அன்பு அக்கறை பரிவு
சிறு துளியாக இருந்தாலும்
உங்களது உள்ளத்திலிருந்து உணர்விலிருந்து செயலிலிருந்து 
உண்மையாக வெளிப்படுத்துங்கள்,

வாயிலிருந்து வார்த்தைகளாக
வண்ண வண்ண நடிப்பை காட்டி  உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றி கொள்ளாதீர்கள்.

-சாமி.


Thursday, June 9, 2022

கிராம உண(ர்)வு

பழைய சாதம் சாப்பிடப்பின்
கடைசி ஒருப்பிடி காக்கைக்கு
மிஞ்சிய நீரகாரம் மாட்டுக்கு
கட்ட கடைசி அடி நீராகாரம் பூமிக்கும்
மண் வாழ் உயிரிக்கும்.
 
-சாமி.

Sunday, June 5, 2022

அம்மா...........


இன்னமும் உன் கைப்பற்றி நடப்பதால்தான் நான் ஒழுங்கான வழியில்.

நீ என்னை 'சாமி' என்று கூப்பிடும் குரல் தான் என் சாமியின் குரல்

ஓராயிரம் கோவிலில் இரக்க மூடியாத
என் மனபாரம் ஒரு நொடியில் உன் பாதம் தொட இறங்கி போகும்.

பத்து மாதங்கள் வயிற்றிலும் வாழ்க்கை முழுவதும் மனதிலும் எங்களை  சுமந்தவள் நீ
ஆனால் உன்னை வார்த்தையில் மட்டுமே சுமக்கிறேன் நான்.

ஒரிரு நாட்கள் நீ அணிந்த செயினும் வளையலும் ஓராயிரம் நாள் வங்கியில் இருந்து என்னை படிக்க வைத்தன.

வாழ்நாள் முழுவதும் எங்களை தாங்கி பிடித்த அன்பை நிறுத்தி கொண்டாய்.

மீத வாழ்நாள் முழுவதும் எங்களை தாங்கி பிடிக்க உன் நினைவுகளை விட்டு சென்றாய்

வலிமாத்திரை  போட்டு உன் வலியை போக்கி கொண்டாய்.

மாத்திரை போட்டாலும் தீராத வலியை 
எங்கள் வாழ்நாள் முழுவதும் தந்து சென்றாய்.

சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாகப்தம் ஆகி சாகா நினைவாக என்று என்றும் இருப்பாய் எங்கள் மனதில். 

உன் அன்பு மகன் சாமி.









Saturday, May 28, 2022

எளிமையாய் வாழுங்கள்!கருணையுடன் பேசுங்கள்எல்லோரையும் நேசியுங்கள்!

தங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.

திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் ‘வெள்ளி, பீங்கான்’, போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் ‘கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்’ போன்ற சாதாரண கோப்பைகள் வரை பல வகைகள் இருந்தன.

அனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துகொண்டு நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும் அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்.

இப்போது பேராசிரியர் பேசலானார் , “உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள். கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான் மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை. விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.

வாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும் வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.

மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை.

“எளிமையாய் வாழுங்கள்!
கருணையுடன் பேசுங்கள்
எல்லோரையும் நேசியுங்கள்!
வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்” என்றார் பேராசிரியர்.

படித்ததில் பிடித்தது.