Tuesday, December 7, 2021

நல்லவைகளை எடை போடுவோம்

சிலரை பிடிக்கவில்லை என்று ஒதுக்கினேன் 

சிலரை நம்பிக்கையற்றவர்கள் என்று ஒதுக்கினேன் 

சிலரை நன்றியற்றவர்கள் என்று ஒதுக்கினேன் 

சிலரை நாணயம் அற்றவர்கள் என்றும் சிலரை நேர்மையற்றவர்கள் என்றும் ஒதுக்கினேன்

 சிலரை அக்கறையற்றவர்கள் என்றும் சிலரை  நாகரிகமற்றவர்கள் என்றும் ஒதுக்கினேன்

காடு தோப்பானது

இப்பொழுதும் சிலரை எடை போட்டுக் கொண்டே இருக்கிறேன்

 தோப்பு மரம் ஆகலாம்

கடைசியில் என்னை நானே எடைபோட முயன்றால் இவையெல்லாம் என்னுள்ளும் இருப்பதால் என்னை என்னால் ஒதுக்க முடியுமா.

-சாமி.

Saturday, December 4, 2021

ஆறறிவு - ஐந்தறிவு

எனக்கு புன்னகையை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு பன்னீர் ரோசா

அன்பை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு அன்றில் பறவை

நன்றியை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு நாய் 

பகிர்தலை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு காகம்

காத்திருத்தலை  கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு கொக்கு 

பொறுமையை கற்றுக்கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு ஆமை

இவையாவும் கற்றுக்கொள்ள முடியாத நான், நானே சொல்லிக் கொள்கிறேன் நான் ஆறறிவு என்றும் அவைகள் ஐந்தறிவு என்றும்.

-சாமி.

Friday, December 3, 2021

வாய்ஜாலத்தின் மூலம் உங்களது பிம்பங்களை கட்டமைக்க முயலாதீர்கள்
அது நீர்க்குமிழி போல்தான்.

-சாமி.

Thursday, December 2, 2021

அம்மா அப்பா என்ற சொல் அகராதி(Dictionary)

இவ்வகராதியில் இல்லாத வார்த்தை "எதிர்பார்ப்பு"

பார்க்கும் இடமெல்லாம் காணும் வார்த்தை "தியாகம் "

தேடினாலும் கிடைக்காத வார்த்தை "தன்னலம்"

திரும்பத் திரும்ப வரும் வார்த்தை "அன்பு"

 எப்ப பார்த்தாலும் சொல்லும் வார்த்தை "தன் பிள்ளைகள்"

எல்லா பக்கங்களிலும் உள்ள வார்த்தை "குடும்பம்"

கடின வார்த்தைகளை இலகு வாக்குவது "சொல் அகராதி"

கடின வாழ்க்கையை இலகுவாக்குவது பெற்றோர் என்ற இவ்அன்பு அகராதி.

-சாமி.

Monday, November 29, 2021

இருள்

உலகின் மறைக்கமுடியாத உண்மை நீ
உலகில் உள்ளவைகளை மறைக்க முடிந்தவனும் நீ
இரைச்சல்களை விழுங்கி அமைதியை உமிழ்வாய்
கண் மறைத்து மனதை திறப்பாய்
பகல் பிரச்சினைகளை பேசி தீர்ப்பாய்
இன்பங்களில் சிரிக்க வைத்து ஒலி நிறைப்பாய்
துன்பங்களில் கண்ணீர் மறைப்பாய்
தூக்கம் நிறைப்பாய்
துக்கம் குறைப்பாய்
வலி குறைப்பாய்
மீண்டும் போரிட வல்லமை கொடுப்பாய்

காலையில் எங்கும் நீங்கிடும் நீ
 சிலர் மனங்களில் மட்டும் ஏன் நிரந்தரமானாய்.


-சாமி.

Friday, November 26, 2021

தேன்

அழகை எடுத்து செல்கிறதா
அல்லது கொடுத்து செல்கிறதா.
வண்ணத்துப்பூச்சி மலரை முத்தமிடும் தருணம்.

-சாமி.

Thursday, November 18, 2021

நகர வாழ்க்கை.

 அடுக்கக சன்னலில்,
எவ்வளவோ கை நீட்டி பார்க்கிறேன்
ஒருதுளி மழைத்துளி கூட என் கைத்தொட மறுக்கிறது.


-சாமி.