Thursday, November 28, 2024

உனக்கு ஒரு பக்கத்தை 
தந்துவிட்ட பிறகேன் 
ஆராய்கிறாய் அன்பானவரின்
மறுப்பக்கத்தை.

பூமி.சாமி.

Sunday, November 24, 2024

விலகுபவர்களை விட்டுவிடுவதும்
இருப்பவர்களை இருக்கமற்று பற்றிக் கொள்ளுவதும்
பயணத்திற்கு நல்லது.

பூமி.சாமி.

Friday, November 22, 2024

எல்லாவற்றையும் எளிதில் மறந்து விடுகிறேன் நான்

என் அம்மாவின் ஈடு இணையற்ற தியாகத்தை
என் அப்பாவின் அளவிடா முடியா உழைப்பை
என் வாழ்க்கை இணையின் அளப்பரிய அன்பை
என் குழந்தைகளின் ப்ரியத்தை
கூடப்பிறந்தவர்களின் அக்கறையை
என் உறவினர்களின் பாசத்தை
என் நண்பர்களின் உற்ற நேர உதவியை
என் மாணவர்களின் மரியாதையை

எல்லாவற்றையும் எளிதாக மறந்து கடந்து விடுகிறேன்  நான்

ஆனால் 
அவர்கள் எதையும் மறக்க கூடாது என சண்டையிடுகிறேன் நான்.

பூமி.சாமி.



யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை,
பத்து நாட்களாக பாட்டு சத்தம் கேட்க வில்லை,
அதிகாலை எங்களை எழுப்புவதே அவர்களின் பாட்டுதான்,
குடும்பத்தை காலி செய்து விட்டு
எங்கோ சென்று விட்டனர்,
ஆம், அது எங்கள் வீட்டருகில் 
புங்கமரத்தில் வசித்த குயில் குடும்பம்,
வெற்று வீடாய் காட்சியளிக்கிறது
அந்த மரம்.

எப்படி சொல்வது என்று தெரியவில்லை
" WE MISS YOU LOT"

-பூமி.சாமி.
 



Monday, November 18, 2024

ஐம்பதாவது பிறந்தநாள்

பலநேரங்களில்
எண்களும் எண்ணிக்கைகளும்
கண்டுபிடிக்க படாமலேயே 
இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பூமி.சாமி.
நேர்த்தியாய் தொடுத்த சரம் போல் மனிதர்கள்,
மனம் என்னவோ உதிரி உதிரியாய்.

பூமி.சாமி.

Friday, November 15, 2024

நீ ஒரு அடி விலகியபோது
என்னை ஒராயிரம் அடி விலகச் சொன்னது என் அறிவு

நீ ஒராயிரம் சென்றப்பின்னும் 
உன்னருகில் ஒர் அடி தூரத்திலேயே 
நின்று கொண்டிருக்கிறது
என் பாழாய் போன மனது.

பூமி.சாமி.