Thursday, May 14, 2020

ஊர் திருவிழா

எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை காக்கும் இரும்பு சங்கிலி,
எங்களையெல்லாம் தன் அருளால் காக்கும் தெய்வ சங்கொலி,
எங்கள் மனதில் இருக்கும் தங்க சங்கதி,
அருள்மிகு மலையேறியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா தள்ளிப்போயிருக்கிறது கொரானாவால். 

இந்த தருணத்தில் என் நினைவில் நடத்திக்கொள்கிறேன் அத்திருவிழாவை,

காப்பு கட்டுவதில் தொடங்கும் கொண்டாட்டம்,
வெளியூர்களில் வசிக்கும் கிராமவாசிகளால் நடத்தப்படும் மண்டகப்படிகள், பூஜைகள்  கலைநிகழ்ச்சிகள் ஊரை கோலாகலம் ஆக்கும்,

தேரில் பவனிவரும் தேவியால் தினம் தினம் கொண்டாட்டம்,
தேரில் பின் வரும் தேவதைகள் அதை காண வரும் தேவன்களின் கூட்டம்,

உறவினர்கள் நண்பர்களால் வீடுகள் பொங்கி வழியும்,
குழந்தைகளால் அல்லோலப்படும் தெருக்கள்,
அன்பாலும் அருளாலும் பொங்கி வழியும் கிராமம்,
உலகில் எங்கு இருந்தாலும் வந்து குவியும் ஊர்க்காரர்கள்,

இளைஞர் இளைஞிகளுக்கு இயல்பான வரன் பார்க்கும் படலம்,
எங்கு பார்த்தாலும் அன்னதானம்,

முத்தமிழில் மூன்றாம் தமிழை வாழ வைக்க நாடக இரவு,
எப்பதவியில் இருப்போரும் படித்தோரும் பாமரரும் தரையில் அமர்ந்து நாடகம் பார்க்கும் சமரசம்,

குழந்தைகள் அடிக்கும் கிட்டி சத்தம் வான் பிளக்கும்,
பெண்கள் போடும் மாவிளக்கு மற்றும் பஞ்சாமிர்தம் ஊரே மணக்கும்,
வாணவேடிக்கைகள், வண்ணவிளக்குகள் ஊரை வானவில்லாக்கும்,
சாலையில் போடப்படும் கோலங்கள் ஊரை வண்ண மயமாக்கும்,

மிட்டாய் கடைகள், பலூன் கடைகள், ராட்டினங்கள்  மேலும் பல விளையாட்டுகள் எல்லோரையும்  கட்டிப்போடும்,

உறவுகளை பேணிப் பாதுகாக்க பாக்கு வைக்கும் வைபவம்,
குழந்தைகளுக்கு உறவினர்கள் தரும் திருவிழா காசு சில நூறை எட்டியிருக்கும்,

பறை, மேளம் மற்றும் கொம்பின் ஓசை விண்ணை அதிரவைக்கும்,
விவசாயத்தில் விளைந்த பொருட்க்களைக் கொண்டு அம்மனுக்கு மதுக்காட்டும் படையல்,
பக்தர்களால் காவடியாட்டம் பால்குடம் முடியிரக்குதல் எவ்வளவோ அன்பின் பொருட்டு,

இந்த ஒரு வாரம் எங்கு பார்த்தாலும் மனித தலைகள் அன்பின் வெளிப்பாடுகள் விசாரிப்புகள் எல்லாம் இயல்பாய் நடக்கும்,
கடைசி நாளில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன்,
காப்பு களைதலில் முடியும் எல்லாம்,
அன்று எல்லோர் மனதிலும் வலி, ஏன் எல்லாம் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று,
சிறு பிள்ளையாருக்கையில் அந்த கடைசி நாளில் அழுதிருக்கிறேன் யாருக்கும் தெரியாமல்,

எனக்கு ஒரு பேராசை மட்டுமே உண்டு இறைவா என் வாழ்வில், அடுத்த பிறவி ஒன்று எனக்கு உண்டெனில் , நான் என் ஊரிலேயே திரும்ப பிறக்க வேண்டும் என்பதே அது.

சாமியின் நினைவலைகள்

2 comments:

  1. Sema sir.. ஊர் திருவிழா எப்போதும் special dan

    ReplyDelete