Tuesday, July 28, 2020

பிரிவு

சில மரங்கள்
அதன் வேர்களை
மனதில்
ஊன்றி விடுகின்றன.

அன்பு

அன்பு என்பதும் ஒரு சிறைதான்,
ஆனால் இங்கு வெளியே அனுப்பும்போது தான்
தண்டனை தொடங்குகிறது.

சாமியின் சிந்தனை.

அன்பு

அன்பை காட்டி ஏமாற்றுபவர்களுக்கு
அரசியல் சாசனத்தில் ஒரு பிரிவு இருந்து இருக்கலாம் 
அன்பால் தண்டனை வழங்க.

சாமியின் சிந்தனை.

Thursday, July 23, 2020

உலகில் வேதனையான விடயம்.

ஒருவர் மேல் உள்ள அளப்பரிய அன்பினால் அவரை பற்றி எழுதுகிறோம் அல்லது பேசுகிறோம்,
அதற்கு அவரிடம் இருந்தே அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், உலகில் அதைவிட மனதிற்கு மிக வேதனை தரக்கூடிய விடயம் இல்லை.

Tuesday, July 21, 2020

வாழ்க்கையை எப்படி வாழ்வது!!!!

#ஜென்தத்துவம்!!!

#வாழ்க்கையை எப்படி வாழ்வது!!!!

இளைஞன் ஒருவன் " வாழ்க்கை வாழ்வது எப்படி" என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென்குருவை தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான்.

ஜென்குருவை சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான்.

ஆஸ்ரமத்துக்கு வந்ததும் அங்கு ஒரு இளம் துறவி இருந்தார். 

அவரிடம் " வணக்கம் ஐயா வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக குருவைப் பார்க்க வந்திருக்கிறேன் " என்றான்.

" ஓ..... அப்படியா குரு தியானத்தில் இருக்கிறார் . முன் அறையில் அமருங்கள் வருவார். " என்றவர் ஒரு கோப்பை நிறைய சூடான தேனீரை ஊற்றிக் கொடுத்தார் அந்த இளைஞகனுக்கு .

இயற்கை எழில் கொஞ்சும் மலையையும் , குளிர்ந்த காற்றையும் ,சில்வண்டுகளின் சத்தத்தில் குயிலோசையையும் மடாலயத்தின் மௌனத்தையும்,ரசித்துக் கொண்டிருந்ததில் சூடான தேனீரை குடிக்க மறந்தே போய்விட்டான் . தேனீர் ஆறிபோய்விட்டது.

சிறிது நேரத்தில் குரு அவனை நோக்கி வந்தார் . அவன் எழுந்து வணங்கினான் .
குருவின் கண்களில் கனிவும் மென்மையும் தெரிந்தது.

"வாழ்க்கையை எப்படி வாழ்வது? என்ற கேள்விக்கு விடை கேட்டு வந்தேன்" என்றான் .

குரு லேசாக புன்னகை செய்தார் .பின்னர், " உன் கோப்பையில் உள்ள தேனீர் ஆறிப்போய் இருக்கிறதே!. அதை வெளியில் கொட்டிவிடு " என்றார். 

அவன் அப்படியே செய்தான். பின்னர் குரு அந்த கோப்பையில் சூடான தேனீரை ஊற்றி நிரப்பினார்.

அவன் அதை குடிக்க ஆரம்பிப்பதற்குள் குரு விடை கூறாமல் மீண்டும் தியானம் செய்ய சென்றுவிட்டார் .

அவன் மிகுந்த ஏமாற்றத்துடன் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான். அப்போது மீண்டும் அந்த இளம் துறவியை பார்த்தான்.

"உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா?" என்று கேட்ட துறவியிடம் நடந்ததை கூறினான்.

அதற்கு அந்த துறவி "குரு உங்கள் கேள்விக்கு சரியான பதிலை கூறிவிட்டாரே"!! என்றார்.

"ஜென் என்றால் அந்தந்த நொடியில் வாழ்வது என்று பொருள். மனம் என்னும் கோப்பையில் பழைய ஆறிப் போன எண்ணங்களை கொண்டு வாழாமல் , இந்த அப்பொழுதில் சுடச்சுட வாழ்வதுதான் வாழ்க்கையை வாழும் முறை . இதைத்தான் குரு உனக்கு செய்து காட்டி இருக்கிறார்."

வாழ்க்கையை எப்படி வாழ்வது என்னும் முறையை புரிந்து கொண்டான் . அந்த நொடியில் வாழத்தொடங்கினான் மகிழ்ச்சியுடன் ... !!!

கோபம் உறவை கொல்லும்

அடித்தால் அடிப்பட்டவனுக்குதானே வலிக்கவேண்டும்,
ஆனால் கோபத்தில் திட்டினேன் 
இருவருக்குமே வலிக்கிறது இங்கு.

சாமியின் சிந்தனை.

Sunday, July 19, 2020

மழைக்கு பின்

பெரும்மழையில்,
சிறு மழைத்தேக்கி,
என்மேல் பொழிந்தது 
மரம்.

சாமியின் சிந்தனை.