Friday, August 16, 2019

பில் கேட்ஸ்*

என்னுடைய தேடலில் கிடைத்த
பொக்கிஷம் இது

#உலக_பணக்காரர்,
கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் *பில் கேட்ஸ்* இடம் ஒருவர் கேட்கிறார்.

"உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?"

*ஆம்.  ஒருவர் இருக்கிறார்*

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.
நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.
நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை.  எனவே, அதை விடுத்தேன். அப்போது,
ஒரு கருப்பினச் சிறுவன்,  என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.
என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை ,
இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.
மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான்.
ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.

*19 வருடங்கள் கழிந்தன.*
நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.
ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.
அவனைக் கேட்டேன்.

"என்னைத் தெரிகிறதா ?"

"தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த *பில்கேட்ஸ்*"

பல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன்.  தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.

*"உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது."* என்றான் அந்தக் கருப்பு இளைஞன்....

*""ஏன் ? "*என்றேன் நான்.

அந்த இளைஞன் *"நான் ஏழையாய் இருந்த போது* , *உங்களுக்குக் கொடுத்தேன்* *ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள்.*
*ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் ??? "* என்றான்...

*கருப்பு இளைஞன் தான் என்னை விடப்* *பணக்காரன் என்பதை* *உணர்ந்தேன்.""* *என்றார் பில்கேட்ஸ்.*

*கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்க* *வேண்டுமென்பதோ,பணக்காரன் ஆகும்* *வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது....*
*உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பது  கிடையாது*

மகிழ்வித்து மகிழ்வோம்...

Tuesday, August 6, 2019

மனச்சோர்வு

# மனச்சோர்வு...

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும்.

மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல் ஒரு வெறுமை உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு என்ற எதிரியை உள்ளே அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!

மனச்சோர்வு எதனால் வருகிறது… அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது?

நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை.

சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள்.

நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.

உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது?

உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பியபடியெல்லாம் தங்களை ஏன் மற்றவர்கள் ஏய்த்துக் கொள்ள வேண்டும்?

அகங்காரம் எங்கே இருந்தாலும், அதற்கு அடி விழத்தான் செய்யும். அப்போது, மனச்சோர்வு முளைத்து எழும். அது உங்களைப் பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.

வெளியே இருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக் கூட சரியாகக் கையாண்டால், சமாளித்துவிடலாம்.

மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கி அழித்துக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் அது!

எதை நினைத்தும் சும்மா வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், எந்தப் பலனும் இல்லை. வருத்தம் என்பதும், துக்கம் என்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவர் தீக்குச்சி பற்றவில்லை என்றாலே துக்கமாகிவிடுவார். இன்னொருவர் வீடே தீப்பற்றி எரிந்தாலும், அலட்டிக் கொள்ள மாட்டார்.

துக்கம் என்பதும், வருத்தம் என்பதும் ஒருவருக்கொருவர் மாறுபடும். மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வருத்தம் கூடும் அல்லது குறையும் என்றால், அவை வெளியிலிருந்தா வருகின்றன? இல்லை. உங்கள் மனதுக்கு உள்ளேயேதான் உற்பத்தியாகின்றன.

உங்கள் மனத்தைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதோ, சோர்வாக வைத்துக் கொள்வதோ உங்கள் கையில்தான் இருக்கிறது.

நீங்கள் நினைத்தபடி உலகம் நடக்க வேண்டும், மற்றவர்கள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அகங்காரம் வீண் சுமை.

அதைக் காலடியில் போட்டு நசுக்கி விட்டு மேலே தொடரவில்லை என்றால், நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் வலிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் அச்சம் வரும். நம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு எழும்.

மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகத்தின் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை மாற்றிக் கொள்ளக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது என்று உணருங்கள்.

வலிகளும், வேதனைகளும் நிரம்பிய அனுபவங்களையே வாழ்க்கைப் பாடங்களாக ஏற்று, உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட வரம் இது!

எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டதால்தான் ஏமாற்றங்கள் என்பதை உணருங்கள்... மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்கப் பழகுங்கள்... அவற்றையே உங்களுக்குச் சாதகமாக மாற்றக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள்.

கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்...

# வெற்றி_நிச்சயம்..

# வாழ்க_வளமுடன்.

Friday, July 19, 2019

சுயநலமற்ற அன்பு....!

🙏🙏🕉🕉🙏🙏🕉🕉🙏🙏
சுயநல அன்பு
சுயநலமற்ற அன்பு....!

ஒருநாள் ஜென் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள்.

சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்;

குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார். “குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன? எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்” என்றான்.

ஜென் குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக்கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.

குரு அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். “தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ?” என்றார். அவனும் “ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன்; உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்; குளத்தில் நிறைய மீன் கிடக்கிறது” என்றான்.

குருவோ, “எனக்கு வேண்டாம் தம்பி!” என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்துவிட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை ஜென் குரு பார்த்துவிட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதை தெரிந்து கொண்டார்.

அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன.

குரு அவரிடமும் பேச்சு கொடுத்தார். “என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ?” என்று சற்றுமுன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார்.

பெரியவரும், “ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன்” என்றார்.

அவரிடம் பேசிமுடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார். “பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் ‘மீனென்றால் உயிர்’ என்று கூறும்போதே தெரிந்திருக்கும்.

அந்த இளைஞன், மீன்களை ‘ருசி’ என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான்.

ஆனால் அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது, ஆனால் இருவரின்
நோக்கம் வேறு.

மொத்தத்தில், அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது” என்று குரு சீடனுக்கு புரியவைத்தார்....

அன்பு மட்டுமே நிரந்தரம் ... மருந்து மாத்திரை இல்லாமல் எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் சக்தி அன்புக்கு மட்டுமே உண்டு ....

Thursday, July 18, 2019

ஹவ் டு ப்ளான் அண்ட் எக்ஸிக்யூட்

சின்னஞ்சிறு புத்தகம் ஒன்று, உங்களது சிந்தனையையே மாற்றிவிடக்கூடுமா?

நிச்சயம் முடியும். அதுதான் வாலஸ் ஸ்டெட்டினிஸ் எழுதியிருக்கும் ‘ஹவ் டு ப்ளான் அண்ட் எக்ஸிக்யூட்’ புத்தகத்தின் தனிச் சிறப்பு. ஒரு பயணத்தில் தன்னந்தனியே உட்கார்ந்தால் அரை மணி நேரத்தில் வாசித்து முடித்துவிடக்கூடிய எளிய புத்தகம். ஆனால் அதற்குள் எத்தனையோ உண்மைகளும் உத்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றாகப் பயன்படுத்தினால் நமது திட்டமிடுதல் பலமடங்கு முன்னேறிவிடும்!

இந்தப் புத்தகத்தின் அடிப்படை, திட்டமிடுதலுக்கான 24 உத்திகள். இவற்றைச் சரியானபடி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட திட்டமும் உங்களுடைய விரல் நுனியில் சுருண்டு கிடக்கும் என்கிறார் வாலஸ் ஸ்டெட்டினிஸ். இவை அனைத்தும் எளிமையான, எவரும் பயன்படுத்தக்கூடிய உத்திகள் என்பது இன்னும் விசேஷம்!

அந்த இருபத்து நான்கு உத்திகளில் முக்கியமானவற்றைமட்டும் இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்:

1. உங்களுடைய துறை எது, களம் எது என்பதைத் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். அது புரியாமல் இறங்கினால் எந்தத் திட்டமும் ஒழுங்காக அமையாது

2. நீங்கள் செய்யவிருக்கும் வேலையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, என்னென்ன எதிர்ப்புகள் உள்ளன என்பதை நன்கு அலசிக்கொள்ளுங்கள். ஆழம் பார்க்காமல் காலை விடாதீர்கள்
3. இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது மிக அவசியம். அவை நம்பர்களாக (எளிதில் கணக்கிடக்கூடியவையால) அமைந்தால் இன்னும் நல்லது. உதாரணமாக ‘நான் பெரிய கிரிக்கெட் வீரனாவேன்’ என்பதைவிட ‘அடுத்த வருடம் ஐபிஎல்லில் நான் விளையாடுவேன்’ என்பது சுலபத்தில் உறுதி செய்யக்கூடிய இலக்கு

4. அடுத்து, இந்த இலக்குகள் எதார்த்தத்தில் சாத்தியமானவைதானா என்று அலசுங்கள். உணர்ச்சிவயப்படாதீர்கள். நேர்மையாக யோசித்து, நிச்சயம் முடியும் என்று நீங்கள் நினைக்கிற இலக்குகளைமட்டுமே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்

5. ஒவ்வோர் இலக்கையும் அடைவதற்கான பாதைகளைக் கணக்கிடுங்கள். அவற்றை சீர் தூக்கிப் பார்த்து ஒன்று அல்லது இரண்டைமட்டும் தேர்ந்தெடுங்கள்

6. இந்தப் பாதைகளில் பயணம் செய்வதற்கான திட்டங்களை வடிக்கத் தொடங்குங்கள். கவனம், பாஸிட்டிவ், நெகட்டிவ் இரண்டையும் யோசித்தபிறகே உங்கள் திட்டம் எழுதப்படவேண்டும்

7. ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்யவேண்டியிருந்தால், அவற்றில் எது முக்கியம் என்று யோசித்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களைத் துரத்தி இரண்டிலும் ஏமாந்து நிற்க நேர்ந்துவிடும்

8. உங்கள் திட்டத்தை எழுதிவையுங்கள். அது எப்போதும் கண்ணில் படும்படியான ஓர் இடத்தில் இருக்கட்டும். அவ்வப்போது அதை எடுத்துப் பார்த்துப் பரிசோதித்துக்கொண்டே இருங்கள். நாம் வழி மாறுவதுபோல் தோன்றினால் சரி செய்யுங்கள் - வழியை அல்லது திட்டத்தை

9. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உங்களுக்கு உதவக்கூடியவர்கள் சிலர் இருக்கலாம். அவர்களுக்கு இதைப்பற்றித் தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள். அவர்களது முழு ஒப்புதலைப் பெறுங்கள். அப்போதுதான் அவர்கள் மனம் உவந்து ஒத்துழைப்பார்கள், உங்கள் வேலைகள் சுலபத்தில் முடியும். அநாவசியத் தடைகளுக்கு இடம் அளித்துவிடாதீர்கள்

10. திட்டம் நிறைவேறுகிற கட்டத்தில் யார் என்ன செய்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்துவாருங்கள். ஏதேனும் பிழைகள் இருந்தால் அன்பாகச் சொல்லித் திருத்துங்கள். நீங்களே பிழை செய்தால் கடுமையாக விமர்சித்துக்கொள்ளுங்கள். பல நேரங்களில் பெரிய திட்டங்கள் சொதப்பி விழுவது சின்னஞ்சிறு தவறுகளால்தான்!

நம்மில் பலர் நினைப்பதுபோல், திட்டமிடுவது ‘மேனேஜர்’களின் வேலை இல்லை. அதற்கென்று ப்ளானிங் நிபுணர்களும் தேவையில்லை. நாம் ஒவ்வொருவரும் திட்டங்களைத் தீட்டமுடியும், சரியாகச் செயல்பட்டு ஜெயிக்கமுடியும், அதற்குத் தேவையான முழு நம்பிக்கையை இந்தப் புத்தகம் ஊட்டுகிறது.

புத்தகத்தின் பெயர்: ஹவ் டு ப்ளான் அண்ட் எக்ஸிக்யூட் (How To Plan And Execute)

ஆசிரியர் பெயர்: வாலஸ் ஸ்டெட்டினிஸ் (Wallace Stettinius)

புத்தகம் வெளியான ஆண்டு: 2005

இதுவரையிலான விற்பனை: பல லட்சம் பிரதிகள்

மொழிபெயர்ப்பு: சுமார் பத்து மொழிகளில்

நன்றி...🙏🏽
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨

Thursday, June 20, 2019

ஆசிரியர்களின் பணி

இந்த காலி இடத்தில் என்ன செய்ய போடுகிறீர்கள் என்று கார்க்கி கேட்டதும் செகாவ் உற்சாகமாகி இங்கே ஒரு சானிடோரியம் அமைக்க இருக்கிறேன் என்று சொன்னார்

      ஒரு நோயாளிகளுக்காக அப்படி ஒரு திட்டம் இருக்கக்கூடும் என்று நினைத்த கார்க்கி இது போன்ற கிராமப்பகுதி மக்களுக்கு நல்லதொரு மருத்துவ சிகிச்சை மையம் தேவை என்று பாராட்டினார்.

        உடனே செகாவ் 'நான் சிகிச்சை மையம் அமைக்க விரும்புவது நோயாளிகளுக்கு அல்ல ஆசிரியர்களுக்கு. உண்மையில் அது என்னுடைய கனவு. இந்த இடத்தில் நிறைய தங்குமிடங்கள் அமைத்து ரஷ்யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்க வைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத் தையும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

    இன்றுள்ள ஆசிரியர்களை ஒரு நோய் பற்றியிருக்கிறது. அது கல்வி குறித்த அலட்சியம். அது களைந்து எறியப்பட வேண்டிய நோய்.

    ஆகவே ஆசிரியர்கள் இங்கே தங்கிக் கொண்டு நிறைய படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். அத்துடன் இசை, ஓவியம், பாடல், இலக்கியம் என்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து நேரடி அனுபவம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

      ஒருவன் ஆசிரியராக பணியாற்றுவது என்றால் சகல விஷயங்களி லும் நேரடியான அனுபவம் உள்ள வன். அது குறித்து ஆழ்ந்து சிந்திப்பவன் என்றுதான் பொருள். ஆகவே ஆசிரியர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கென தனியான முகாம்கள் அமைக்கப்படுவது அவசியம்.

ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்க 'வண்டும். எப்படி ஒரு பாடகன் தன்னுடைய பாடும் திறனை தினமும் வளர்த்துக்கொள்வானோ அப்படி கற்றுத் தருவதை நுட்பமாக வளர்த்து எடுக்க வேண்டும்.

    பொதுமக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே ஒரு இளக்காரம், கேலியே உள்ளது. அது மாற வேண்டும். மக்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். ஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபி ளுக்கு கிடைக்கும் மரியாதை ஆசிரியருக்கு கிடைப்பதில்லை. போலீஸ் காரன் குற்றவாளிகளைப் பிடிக்க வருகிறான். அவனை நாம் வரவேற்று மரியாதை செய்கிறோம். ஆசிரியர் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்து எடுக்க முயற்சிக்கிறார். அவரை நாம் மதிப்பதேயில்லை. அது மாற வேண்டும். முதலில் ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு எதிராக எவரும் கை நீட்டிப் பேசவோ, பரிகாசம் செய்யவோ கூடாது.

     ஆசிரியர்களின் பணி என்பது ஒருவகையில் போர்வீரனை விடவும் சவால் நிறைந்தது. ஆகவே அவர்களின் அன்றாடத் தேவைகள். குறிப்பாக குடும்பத்திற்கான அடிப்படைத் தேவைகளை, அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கிறோம் என்று ஆசிரியர் உணரும் போது தான் கல்வி நலிவடையத் துவங்குகிறது. அது மாற்றப்பட வேண்டும்

     பிரெஞ்சு தேசம் உலகம் முழுவதும் பெயர் பெற்றிருப்பதற்கு காரணம் அங்குள்ள கல்வி முறையும் அதனால் உருவான கலாச்சார சூழலும்தான். அதை நாம் பெற்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போல இந்த சமூகம் நொறுங்கி விழுந்துவிடும்' என்று சொல்லிவிட்டு, செகாவ் இப்படி நானாக புலம்பிக்கொண்டிருக்கிறேன். இதை யார் எடுத்துக்கொள்ளப் போகி றார்கள். வாருங்கள் தேநீர் அருந்தலாம், என்று சொல்லி கார்க்கியை தன்னோடு அழைத்துக்கொண்டு செல்கிறார் செகாவ்.இந்த உரையாடல் நடைபெற்று நூறு வருடங்களுக்கும் மேலாகிறது.

Monday, June 17, 2019

கழுகு

காட்டிற்குப் போன #வேட்டைக்காரன் ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தான்.

அதை தன் வீட்டில் அடைக்காக்கும் #கோழிக்கூட்டில் வைத்தான். கொஞ்ச நாளில் குஞ்சிகள் வெளிவந்தன.

கழுகுமுட்டையும் குஞ்சானது. மற்ற கோழிக்குஞ்சுகளோடு இந்த கழுகு குஞ்சும் சேர்ந்து திரிந்தது. க்யா.. க்யா என கத்தியது. அவைகள் குப்பைகளைக் கிளறி புழுப் பூச்சிகளைப் பிடித்து தின்றதைப் போலவே இதுவும்தின்றது. வருடங்கள் ஓடின. எல்லாக் குஞ்சுகளும் வளர்ந்து பெரிதாயின.

#கழுகுகுஞ்சுகளும் வளர்ந்து கழுகு ஆனது. ஆனால் தன்னை கழுகு என்று நினைக்காமல் கோழி என்றே நினைத்தது.

ஒரு நாள் எல்லாக் கோழிகளும் குப்பைமேட்டில் மேய்ந்து கொண்டிருந்த்ன. மேகங்கள் இல்லாத நீல வானத்தில் வெகு உயரத்தில் ஒரு பறவை இறக்கைகளைலாவகமாக கன கம்பீரமாக தரையைப் பார்த்தபடி பறந்துக் கொண்டிருந்தது.

இதை கவனித்த இந்த கழுகுக்கோழி "அடடா...! என்ன அழகான கம்பீரமான பறவை..!மேலே பார் என்றது. பக்கத்தில் இருந்த கோழி, அதன் பெயர் #கழுகு! பறவைகளின் ராஜா..!

அது போல் பறக்க ஆசைப்படாதே!
ஒரு நாளும்பறக்க முடியாது... என்றது கேலியாகதான் யார் என்பதை உணராது தன் பிறவியையே மறந்து போன இந்த கழுகுகோழி கப்சிப் என பேசாமல் இருந்துக்கொண்டது.

பின் அது ரொம்பநாள் வரையிலும் மற்றக் கோழிகளை போலவே இருந்து கடைசியில் இறந்தது.

தன்னைப்பற்றி அது உணர்ந்து இருக்குமானால், அதுவும் மற்ற கழுகுகளைப் போல வானத்தில்,உயரத்தில் பறவைகளின் #ராஜாவாக பறந்திருக்கலாம்.

#மனிதர்களிலும் ரொம்ப பேர் இப்படித்தான் #தன்_திறமை_உணராது சாதாரண மனிதர்களாகவே வாழ்ந்து தனக்கும், மற்றவர்களுக்கும் #உபயோகமில்லாமல் வாழ்ந்து மறைகிறார்கள்...!

Sunday, June 9, 2019

பிரச்சினைகளை எளிதாக கடந்து செல்வது எப்படி?!

பிரச்சினைகளை எளிதாக கடந்து செல்வது எப்படி?!

வரும் பிரச்சினைகள் கண்டு ஓட வேண்டாம்.ஒளிய வேண்டாம்.

அது ஓடினால் துரத்திக் கொண்டே வரும்.ஓளிந்தால் உங்கள் மனதின் அடி ஆழத்தில் சென்று அது ஒளிந்து கொள்ளும்.

பிரச்சினைகளை எதிர் கொண்டு அதை வரவேற்று அதற்கு வாழ்த்து சொல்லுங்கள்.

அது உங்கள் விழிப்புணர்வை மேலும் கூர்மையாக்கும்.

பிரச்சினைகளின் வேர்களை விசாரியுங்கள்.அது விழுதுகள் விடுவதை தவிர்க்கும்.

பிரச்சினைகளின் உணர்வுகளை உள்வாங்கி அதை அசைபோட்டு நன்கு அனுபவியுங்கள்.

அந்த உணர்வுகளோடு உறவாடுங்கள்.அதனோடு கலந்து உறவாடி இரண்டறக் கரைந்து விடுங்கள்.

பிரச்சினைகளும் கரைந்து காணாமல் போய் விட்டதை உங்களால் உணர முடியும்!!!

#ஓஷோ