Sunday, January 16, 2022

கடினமான சூழ்நிலையில் கற்றுக் கொண்டவைகள்

1. உன்னை யாரோடும் எதற்கும் ஒப்பிட்டு மன அழுத்தம் அடையாதே.
2. எவ்வித இக்கட்டிலும் தவறை செய்ய ஒப்புக் கொள்ளாதே.
3.செல்போன் கையில் வைத்துக் கொண்டு அலையாதே. இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை பார்த்தால் போதும்.
4. எதற்கும் எப்பொழுதும் அஞ்சாதே. பயம்தான் மரணம்.
5.செய்வதை திருத்த செய் இல்லையெனில் செய்யாதே.
6. யாரையும் முழுமையாக  நம்பாதே.
7. ஃபோனில் தேவையில்லாமல் பேசாதே
குறுஞ்செய்தி அனுப்பாதே.
8.முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்.
9. பேராசை கொண்டு அலையாதே.
10.எதையும் உன்னால் சமாளிக்க முடியும் என்பதை நம்பு.
11. கடவுளையும் பிரபஞ்சத்தையும் முழுமையாக நம்பு.

Thursday, January 13, 2022

இனிய பொங்கல் திருநாள்  நல்வாழ்த்துக்கள்.

நன்றி.
இரா.ரெங்கசாமி

Friday, January 7, 2022

தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

பாரதி.

Friday, December 31, 2021

HAPPY NEW YEAR- 2022

WISH
         YOU 
                 A
                       HAPPY  NEW YEAR-2022.

                                                  By Samy & Family.

Friday, December 24, 2021

படித்ததில் பிடித்தது

'குழந்தைகளைத் திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்..

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்..

பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள்..

தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம். அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள்..

அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை.

'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்விக்கு குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி அவர்களின் பதில்...

********************************

ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்?

பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதற்கு சமம்.

இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

அதைவிடுத்து, 'நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது' என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா?

சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், 'அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்' என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா?

சிறு வயதிலிருந்து 'ஏய்' என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று 'பிள்ளை கைமீறிப் போகிறதே' என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள்.

மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல்,

பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக் கொள்வார்கள்.

தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.

குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள்.

ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது..

அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது..
தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது..
மற்றவர்களை மன்னிப்பது..
தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது..

போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் வளர்ப்பது அவசியம்.

இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் புத்திசாலித்தனம். பிள்ளைகள் மரமான பிறகு வேலியைக் கட்டுவது சுலபமில்லை.

எனவே, 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்.

********************************

என்று பதில் கூறினார்.  எனவே பெற்றோர்களே இதனை மனதில் கொண்டு குழந்தைகளை கண்டித்து வளர்க்கப் பாருங்கள். அளவிற்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது. 

இதுபோன்ற உளவியல் செய்திகளால் சிறிதாவது மாற்றம் நிகழட்டும். பகிருங்கள்.

Friday, December 17, 2021

வாடிக்கையாக வாங்கும் 
கீரைக்கார பாட்டியை
ஒரு வாரமாய் வழக்கமான இடத்தில் காணவில்லை எனும் போது
பதை பதைக்கிறது மனது.

-சாமி.

Monday, December 13, 2021

ஓஷோவின் 22 கட்டளைகள் .





ஓஷோவின் 22 கட்டளைகள் ....

1.இது அப்படி ஒரு சிறிய வாழ்வு.ஆபத்துகளை தேர்ந்தெடுங்கள்,சூதாடுபவனாக இருங்கள்.நீங்கள் எதை இழக்க முடியும்?நாம் வெறுங்கையுடன் வந்தோம்,நாம் வெறுங்கையுடன் போகிறோம்.கொஞ்ச நேரம் விளையாட்டாய் இருக்க, ஒர் அழகான பாடலை பாட,அவ்வளவுதான் முடிந்துவிடும் காலம்.ஆகவே ஒவ்வொரு கணமும் மிகவும் மதிப்பு மிக்கது.

2.உலகத்தை துறந்து விடுங்கள் என்று எல்லா மதங்களும் கற்பிக்கின்றன.உலகத்தை மாற்றுங்கள் என்று நான் கற்பிக்கிறேன்.

3.உங்களது பிரச்சனை இந்த உலகமல்ல, உங்களது பிரச்சனை உங்களின் விழிப்புணர்வுயின்மையே. உங்களின் விழிப்புணர்வுயின்மையை துறந்து விடுங்கள்,உலகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்

4.உங்களது வாழ்விலுள்ள சகல நஞ்சுகளுக்கும் தியானமே நச்சு முறிவு.அதுவே உங்களது ஆதார இயல்பை வளமாக்கும் சத்துமாகும்.

5.மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த பூசாரிகள் கண்டுபிடித்த மிக பழமையான ஒரு தந்திரமே குற்றவுணர்வு. அவர்கள் குற்றவுணர்வை உங்களிடம் ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் மடத்தனமான நீங்கள் நிறைவேற்ற முடியாத கருத்துகளை உங்களுக்கு கொடுக்கிறார்கள்.அதனால் அதன்பின் குற்றவுணர்வு எழுகிறது.ஒரு முறை குற்றவுணர்வு எழுந்ததும், நீங்கள் பொறியில் சிக்கியவர்கள் ஆகிவிடுகிறீர்கள். குற்றவுணர்வே-மதம் என்று கூறி கொள்ளும் நிறுவனங்களின் வியாபார ரகசியமாகும்.

6.மகிழ்ச்சியடையுங்கள்,பாடுங்கள்,ஆடுங்கள். உங்களது ஆணவங்கள் உருகி மறைந்து போகுமளவு முழுமையாக ஆடுங்கள்.ஆடுபவன் அங்கு இல்லாமல் போய்விடுமளவு முழுமையாக ஆடுங்கள். வெறும் ஆடல் மட்டுமே எஞ்சியிருக்கட்டும்.அப்போது நீங்கள் எங்கிருந்தாலும் என்னை காண்பீர்கள்.

7.எல்லா சரியானவையும் ஒருவித ஆழமான ஆணவ பயணங்களே.உங்களை பற்றி மிகவும் சரியானவராகவும்,கொள்கை கோட்பாடு கொண்டவராகவும் நினைத்து கொள்வது என்பது உங்களின் ஆணவத்தை முடிந்த மட்டும் அலங்கரித்து கொள்வதல்லாமல் வேறொன்றுமில்லை.வாழ்க்கை மிக சரியாக அமைந்தது அல்ல என்பதை அடக்கமானவன் ஏற்று கொள்கிறான்.

8.நான் பாலுணர்வுக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில் பாலுணர்வுக்கு எதிரானவர்கள் எப்போதும் பாலுணர்விலேயே இருப்பார்கள். நான் பாலுணர்வுக்கு ஆதரவானவன்,ஏனெனில் அதில் நீங்கள் ஆழமாக சென்றால் விரைவிலேயே நீங்கள் அதை விட்டு வெளியே வந்து விடுவீர்கள். எவ்வளவு அதிக பிரக்ஜையோடு போகிறீர்களோ,அவ்வளவு விரைவில் நீங்கள் அதிலிருந்து வெளியே வந்து விடுவீர்கள்.ஒருவன் பாலுணர்விலிருந்து முழுமையாக வெளியே வந்து விடும் நாள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும்.

9.கலவி இன்பத்தில் காலம் மறைகிறது, ஆணவம் மறைகிறது, மனம் மறைகிறது. ஒரு கண நேரம் முழு உலகமும் நின்று போகிறது. இதுவேதான் ஆன்மவுணர்வு இன்பத்தில் மிகப்பெரிய அளவில் நிகழ்கிறது. கலவி கணப்பொழுதானது. ஆன்மவுணர்வு நிரந்தரமானது. ஆனாலும் கலவி ஆன்மவுணர்வின் ஒரு பொறியை உங்களுக்கு கொடுக்கிறது.

10.கடவுள் ஒரு நபர் அல்ல. நீங்கள் கடவுளை வழிபட முடியாது. நீங்கள் தெய்வ நிலையில் வாழலாம், ஆனால் நீங்கள் தெய்வத்தை வழிபட முடியாது. வழிபடுவதற்கு ஒருவரும் அங்கில்லை. உங்கள் எல்லா வழிபாடுகளும் வெறும் மடத்தனம். உங்கள் எல்லா கடவுளின் உருவங்களும் உங்களுடைய படைப்பே. அந்த வகையில் தெய்வம் கிடையாது. ஆனால் கண்டிப்பாக தெய்வீகம் உண்டு-பூக்களில், பறவைகளில், விண்மீன்களில், மக்களின் கண்களில், இதயத்தில், ஒரு பாடல் எழும்போது, கவிதை உங்களை சூழ்ந்து கொள்ளும் போது..... இவையெல்லாம் கடவுளே.

11.எல்லா ஒழுக்கங்களும் ஒழுக்கம் அல்ல. ஒரு நாட்டில் ஒழுக்கமாக இருக்கும் ஒன்று மற்றொரு நாட்டில் ஒழுக்கமற்றதாக இருக்கிறது. ஒரு மதத்தில் ஒழுக்கமாக இருக்கும் ஒன்று மற்றொரு மதத்தில் ஒழுக்கமல்ல. இன்று ஒழுக்கமாக இருக்கும் ஒன்று நேற்று ஒழுக்கமில்லை. ஒழுக்கங்கள் மாறும். ஒழுக்கங்கள் வெறும் மேம்போக்கானவை. ஆனால் பிரக்ஜை நிரந்தரமானது. அது ஒரு போதும் மாறாது. அது பரிபூரணம்-சத்தியம்.

12.தந்த்ரா, கிழக்கத்திய மிகப்பெரிய தத்துவம். அது பாலுணர்வை புனிதம் என்று அழைக்கிறது. மிகமிக முக்கியமான வாழ்வு சக்தி என்று அழைக்கிறது. ஏனெனில் எல்லா உயர் மாற்றங்களும் அந்த சக்தியின் மூலமே நிகழ போகிறது. அதை பழிக்காதீர்கள்.

13.அன்பு ஒரு மாறும் உறவு. அது நிலையானதன்று. ஆகவேதான் திருமணம் ஏற்பட்டது. திருமணம் காதலின் மரணம். ஆமாம் நீங்கள் ஒரு அழகான சமாதியை, பளிங்கு சமாதியை, ஒரு அழகான நினைவாலயத்தை எழுப்புகிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன சொல்லி அழைத்தாலும் அது புதைக்குழிதான்.

14.தியானமில்லாத வாழ்வு வெறும் தீனி தின்று கொண்டு இருத்தலே. நீங்கள் வெவ்வேறுவிதமான தீனிப்பிண்டங்களாயிருக்கலாம், யாராவது முட்டைகோஸ், யாராவது காளிபிளவர்.....ஒரு காளிபிளவர் என்பது காலேஜ் படித்த முட்டைகோஸ்தான், பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.

15.உண்மையான நபர்களுக்கு மட்டுமே உண்மையான நிகழ்வுகள் நிகழ முடியும். குருட்ஜிப் எப்போதும் சொல்வார்: உண்மையை தேடாதே-உண்மையாக மாறு. ஏனெனில் உண்மை உண்மையான நபர்களுக்கு மட்டுமே நிகழ்கிறது. உண்மையாய் இல்லாத நபர்களுக்கு உண்மையல்லாதவையே நிகழும்.

16.ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன.ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை. தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை. இயற்கையில் எல்லாமே மிக அழகாக ஒருங்கிணைந்து செல்கின்றன. ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி போடுவதில்லை. எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை. எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன.

சற்றே இதை கவனியுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். மேலும் நீங்கள் என்ன செய்தாலும் வேறுவிதமாக ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லா முயற்சிகளும் பயனற்றவையே. நீங்கள் நீங்களாக இருக்க மட்டுமே முடியும்.

17.நேசம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. உண்மையான உறவும் ஒரு கண்ணாடியே. அதில் இரண்டு காதலர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அதன் மூலம் கடவுளை அடையாளம் தெரிந்து கொள்கின்றனர். இது கடவுளை சென்றடையும் ஒரு பாதையே.

18.நேசத்தில் ஒன்றும் ஒன்றும் சேர்ந்து ஒன்றுதான், இரண்டல்ல, ஆழமான அன்பில் இருமைத்தன்மை மறைகிறது. கணக்கு கடந்து செல்லப்படுகிறது, அது அர்த்தமற்று போகிறது. ஆழமான அன்பில் இரண்டு நபர்கள் இரண்டு நபர்களாக இருப்பதில்லை. அவர்கள் ஒன்றாகிவிடுகின்றனர். அவர்கள் உணர்வில், செயலில், ஒரே ஒருவராக, ஒரே உயிராக, ஒரே பேரானந்தமாக செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.

19.தியானத்திற்கு சட்டங்களில்லை. அது ஒரு ஜன்னலோ, கதவோ அல்ல. தியானம் என்பது ஒருமுகப்படுத்துவது அல்ல. அது வெளி கவனிப்பு அல்ல. தியானம் என்பது விழிப்புணர்வு.

20.நீங்கள் பயந்தால், அடுத்தவருக்கு உங்களை பயமுறுத்த நீங்களே சக்தியளிப்பவர் ஆகிறீர்கள் என்பது வாழ்வின் அடிப்படையான ஒரு விதி. பயத்தை பற்றிய உங்கள் எண்ணமே போதும், அடுத்தவருக்கு உங்கள்மேல் துணிச்சலை தோற்றுவித்து விடும்.

21.ஒவ்வொரு கணத்தையும் இதுவே கடைசி கணம் என்பதை போல வாழுங்கள். யாருக்கும் தெரியாது- இதுவே கடைசியாகவும் இருக்கலாம்.

22.புரிதல் இல்லாத நிலையே யோசனை. உங்களுக்கு புரியாததால்தான் நீங்கள் யோசிக்கிறீர்கள். புரிதல் எழும்போது யோசனை மறைந்துவிடும் - ப.அறிவொளி