Sunday, September 1, 2019

காது கொடுத்து கேளுங்கள்

💜❤💙💚❤💜💙இன்றைய சிந்தனை.. ( 01.09.2019)..
……………………………………

'' காது கொடுத்து கேளுங்கள்..''..
.....................................

உங்களிடம் வந்து யாராவது தனக்கொரு பிரச்னை என்று வந்தால்.,அவர்களைப் பேசவிட்டு அவர்கள் பேசுவதை கொஞ்சம் காது கொடுத்து கவனமாகக் கேளுங்கள்.

மற்றவர்களின் துன்ப துயரங்களில் ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

ஆம்.,அதுமாதிரியான நிகழ்வுகள் நமக்கும் வரலாம்.அடுத்த முறை நம்முடையதாகவும் கூட இருக்கலாம்.

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.வளையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் பண்ணையாளரும். அவரது மனைவியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டு இருந்தார்கள்.ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப் பொறி.அதைப் பார்த்ததும எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது.,"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது..

அதற்கு அந்த கோழி,'' உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய செய்திதான்..''..நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது.,

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே செய்தியை போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு ."நான் எலிப்பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே செய்தியை சொல்லியது.
ஆடும் அதேபதிலைச் சொல்லியது.. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை..,"எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு விட்டுக்காராரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானி அம்மாளைக் கடித்து விட்டது. எஜமானி அம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.

விஷத்தை முறிக்க ஊசி போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு காய்ச்சல் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி.," பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு கோழி ரசம் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது ஆப்பு... கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் காய்ச்சல் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் அந்த அம்மவின் உடல் நலம் தேறியது.பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது..

பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்கு காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.எலி தப்பித்து விட்டது..

ஆம்..,நண்பர்களே..,

மற்றவர்களின் குறைகளை, அக்கறையுடன் கேளுங்கள்; ஆறுதல் சொல்லுங்கள்;

நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாலு வார்த்தை ஆதரவாக பேசுங்கள்..இன்பத்தை விட, துன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு...🌺🌹💐

Thursday, August 22, 2019

இந்த உலகில் விலை மதிப்பிட முடியாத ஒரே ஒரு விஷயம் அன்பு மட்டும்தான்

" தொழிலாளி ஒருவர் இருந்தார்"!அவர் புத்தர் மீது பேரன்பு கொண்டவர்.

திடீரென்று, இரண்டு நாட்களாக அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

அவர் குடும்பம் பட்டினி கிடந்தது.என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

அவரை நம்பி கடன் கொடுப்பவர்களும் யாரும் இல்லை.

மன வருத்தத்துடனும், சிந்தனையுடனும் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அருகிலிருந்த குளத்தில் ஒரு தாமரை மலர்ந்திருப்பது அவர் பார்வையில் பட்டது.

அந்த மலர், வழக்கமான தாமரை மலராக இல்லை.அபூர்வமான அழகுடன் இருந்தது.

அடர் சிவப்பு நிறத்தில் சூரிய ஒளியில் தகதகவென்று மின்னிப் பிரகாசித்தது.

அவர் குளத்தில் இறங்கி அந்த மலரைப் பறித்தெடுத்தார்.

அந்த அபூர்வ மலரை யாருக்காவது விற்றால், ஏதாவது பணம் கிடைக்கும் என்று நினைத்தார் அவர்.

அந்த வழியாக வந்த வியாபாரி ஒருவர் தொழிலாளியின் கையில் மிக அழகான பூ இருப்பதைப் பார்த்தார்.

அவர் கேட்டார்: "அந்த மலரை என்னிடம் விற்றுவிடுகிறாயா...???
நான் அதற்கு நூறு ரூபாய் தருகிறேன்''

சற்று நேரம் கழித்து அந்த வழியாக செல்வந்தர் ஒருவர் வந்தார்.அவரும் கேட்டார்:
"இந்த மலரை என்னிடம் விற்றுவிடுகிறாயா...???
நான் இதற்கு இருநூறு ரூபாய் தருகிறேன்...!!!''

இவ்வளவு அதிகமான விலைக்கு இந்த மலரைக் கேட்கிறார்களே, என்று
தொழிலாளிக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

சற்று நேரத்திற்குப் பிறகு
அதே வழியில் அந்த நாட்டு ராஜா வந்தார்.

தாமரை மலரைப் பார்த்து மகிழ்ந்து அவரும் கேட்டார்:
"இந்த மலரை என்னிடம் கொடுத்துவிடுகிறாயா...???
இதற்கு நான் என்ன விலை வேண்டுமானாலும் தருகிறேன்....!!!''

தொழிலாளி, ராஜாவிடம் பணிவுடன் கேட்டார்:
"வணக்கத்திற்குரிய ராஜாவே...!!!
அப்படி இந்த மலரில் என்னதான் இருக்கிறது....???

ஏன் இதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறீர்கள்......???''

ராஜா சொன்னார்:
"இந்த மலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அபூர்வமாகவும் இருக்கிறது.

இந்த நகரத்திற்குப் புத்தர் வந்திருக்கிறார்.
அவர் காலில் வைத்து வணங்குவதற்காகத்தான் இதைக் கேட்கிறேன்......!!!''

புத்தரைக் காண வேண்டும் என்று வெகுகாலமாக ஏங்கிக் கொண்டிருந்த தொழிலாளி சொன்னார்:

"அப்படியென்றால் ராஜாவே, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.....!!!
இந்த மலரை நானே அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்''

அந்தத் தொழிலாளி ஓடிச் சென்றார்.அரிய தாமரை மலரை புத்தரின் காலடியில் வைத்து வணங்கி நின்றார்.ண

அப்போது புத்தர் கனிவாக அவரிடம் கேட்டார்:
"சகோதரா இந்த மலரை நீ ராஜாவிற்கு விற்றிருந்தாயானால்,நீ மட்டுமின்றி உன் பல தலைமுறைகளும் வளமாக வாழ்வதற்கான செல்வம் உனக்குக் கிடைத்திருக்குமே...!!!

நீ ஏன் அப்படிச் செய்யவில்லை...???''

தொழிலாளி கண்கலங்கிச் சொன்னார்: "ஐயா... உலகின் ஞானியே,நான் இந்த மலரைப் பறித்தபோது இது ஒரு தாமரை மலராக மட்டுமாகத்தான் இருந்தது.

ஆனால்,நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்தபோது,இந்த மலர் என் இதயத்தின் அன்பாக மாறிவிட்டது.

என் இதயத்தைச் சமர்ப்பிப்பதற்கு ஏற்ற இடம் உங்கள் காலடிகளைத் தவிர வேறு இல்லையே....!!!''

புத்தர் எழுந்து அவரைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சொன்னார்:

"இனிய சகோதரா...
வறுமையில் இருந்தாலும்
இந்த உலகத்தின் அரசன் நீதான்.நிம்மதியாகப் போ
உன் வாழ்க்கை வளமாகும்''

தூய அன்பிற்கு முன்னால் பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை!!!

இந்த உலகில் விலை மதிப்பிட முடியாத ஒரே ஒரு விஷயம் அன்பு மட்டும்தான்!!!

Saturday, August 17, 2019

*Just Loved these lines*_ _" When I got enough confidence, the stage was gone….. When I was sure of Losing, I won……. When I needed People the most, they Left me……. When I learnt to dry my Tears, I found a shoulder to Cry on…… When I mastered the Skill of Hating, Someone started Loving me from the core of the Heart…… And, while waiting for Light for Hours when I fell asleep, the Sun came out….. That’s LIFE!! No matter what you Plan, you never know what Life has Planned for you…… Success introduces you to the World……. But Failure introduces the World to you……. ……Always be Happy!! Often when we lose Hope and think this is the end… God smiles from above and says, “Relax Sweetheart; It’s just a Bend, not the End..!"_ 🤗😊😍

*Just Loved these lines*_

_" When I got enough confidence, the stage was gone….. When I was sure of Losing, I won……. When I needed People the most, they Left me……. When I learnt to dry my Tears, I found a shoulder to Cry on…… When I mastered the Skill of Hating, Someone started Loving me from the core of the Heart…… And, while waiting for Light for Hours when I fell asleep, the Sun came out….. That’s LIFE!! No matter what you Plan, you never know what Life has Planned for you…… Success introduces you to the World……. But Failure introduces the World to you……. ……Always be Happy!! Often when we lose Hope and think this is the end… God smiles from above and says, “Relax Sweetheart; It’s just a Bend, not the End..!"_

🤗😊😍

Friday, August 16, 2019

பில் கேட்ஸ்*

என்னுடைய தேடலில் கிடைத்த
பொக்கிஷம் இது

#உலக_பணக்காரர்,
கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் *பில் கேட்ஸ்* இடம் ஒருவர் கேட்கிறார்.

"உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?"

*ஆம்.  ஒருவர் இருக்கிறார்*

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.
நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.
நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை.  எனவே, அதை விடுத்தேன். அப்போது,
ஒரு கருப்பினச் சிறுவன்,  என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.
என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை ,
இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.
மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான்.
ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.

*19 வருடங்கள் கழிந்தன.*
நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.
ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.
அவனைக் கேட்டேன்.

"என்னைத் தெரிகிறதா ?"

"தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த *பில்கேட்ஸ்*"

பல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன்.  தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.

*"உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது."* என்றான் அந்தக் கருப்பு இளைஞன்....

*""ஏன் ? "*என்றேன் நான்.

அந்த இளைஞன் *"நான் ஏழையாய் இருந்த போது* , *உங்களுக்குக் கொடுத்தேன்* *ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள்.*
*ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் ??? "* என்றான்...

*கருப்பு இளைஞன் தான் என்னை விடப்* *பணக்காரன் என்பதை* *உணர்ந்தேன்.""* *என்றார் பில்கேட்ஸ்.*

*கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்க* *வேண்டுமென்பதோ,பணக்காரன் ஆகும்* *வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது....*
*உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பது  கிடையாது*

மகிழ்வித்து மகிழ்வோம்...

Tuesday, August 6, 2019

மனச்சோர்வு

# மனச்சோர்வு...

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும்.

மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல் ஒரு வெறுமை உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு என்ற எதிரியை உள்ளே அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!

மனச்சோர்வு எதனால் வருகிறது… அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது?

நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை.

சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள்.

நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.

உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது?

உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பியபடியெல்லாம் தங்களை ஏன் மற்றவர்கள் ஏய்த்துக் கொள்ள வேண்டும்?

அகங்காரம் எங்கே இருந்தாலும், அதற்கு அடி விழத்தான் செய்யும். அப்போது, மனச்சோர்வு முளைத்து எழும். அது உங்களைப் பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.

வெளியே இருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக் கூட சரியாகக் கையாண்டால், சமாளித்துவிடலாம்.

மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கி அழித்துக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் அது!

எதை நினைத்தும் சும்மா வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், எந்தப் பலனும் இல்லை. வருத்தம் என்பதும், துக்கம் என்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவர் தீக்குச்சி பற்றவில்லை என்றாலே துக்கமாகிவிடுவார். இன்னொருவர் வீடே தீப்பற்றி எரிந்தாலும், அலட்டிக் கொள்ள மாட்டார்.

துக்கம் என்பதும், வருத்தம் என்பதும் ஒருவருக்கொருவர் மாறுபடும். மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வருத்தம் கூடும் அல்லது குறையும் என்றால், அவை வெளியிலிருந்தா வருகின்றன? இல்லை. உங்கள் மனதுக்கு உள்ளேயேதான் உற்பத்தியாகின்றன.

உங்கள் மனத்தைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதோ, சோர்வாக வைத்துக் கொள்வதோ உங்கள் கையில்தான் இருக்கிறது.

நீங்கள் நினைத்தபடி உலகம் நடக்க வேண்டும், மற்றவர்கள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அகங்காரம் வீண் சுமை.

அதைக் காலடியில் போட்டு நசுக்கி விட்டு மேலே தொடரவில்லை என்றால், நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் வலிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் அச்சம் வரும். நம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு எழும்.

மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகத்தின் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை மாற்றிக் கொள்ளக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது என்று உணருங்கள்.

வலிகளும், வேதனைகளும் நிரம்பிய அனுபவங்களையே வாழ்க்கைப் பாடங்களாக ஏற்று, உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட வரம் இது!

எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டதால்தான் ஏமாற்றங்கள் என்பதை உணருங்கள்... மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்கப் பழகுங்கள்... அவற்றையே உங்களுக்குச் சாதகமாக மாற்றக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள்.

கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்...

# வெற்றி_நிச்சயம்..

# வாழ்க_வளமுடன்.

Friday, July 19, 2019

சுயநலமற்ற அன்பு....!

🙏🙏🕉🕉🙏🙏🕉🕉🙏🙏
சுயநல அன்பு
சுயநலமற்ற அன்பு....!

ஒருநாள் ஜென் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள்.

சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்;

குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார். “குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன? எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்” என்றான்.

ஜென் குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக்கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.

குரு அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். “தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ?” என்றார். அவனும் “ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன்; உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்; குளத்தில் நிறைய மீன் கிடக்கிறது” என்றான்.

குருவோ, “எனக்கு வேண்டாம் தம்பி!” என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்துவிட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை ஜென் குரு பார்த்துவிட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதை தெரிந்து கொண்டார்.

அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன.

குரு அவரிடமும் பேச்சு கொடுத்தார். “என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ?” என்று சற்றுமுன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார்.

பெரியவரும், “ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன்” என்றார்.

அவரிடம் பேசிமுடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார். “பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் ‘மீனென்றால் உயிர்’ என்று கூறும்போதே தெரிந்திருக்கும்.

அந்த இளைஞன், மீன்களை ‘ருசி’ என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான்.

ஆனால் அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது, ஆனால் இருவரின்
நோக்கம் வேறு.

மொத்தத்தில், அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது” என்று குரு சீடனுக்கு புரியவைத்தார்....

அன்பு மட்டுமே நிரந்தரம் ... மருந்து மாத்திரை இல்லாமல் எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் சக்தி அன்புக்கு மட்டுமே உண்டு ....

Thursday, July 18, 2019

ஹவ் டு ப்ளான் அண்ட் எக்ஸிக்யூட்

சின்னஞ்சிறு புத்தகம் ஒன்று, உங்களது சிந்தனையையே மாற்றிவிடக்கூடுமா?

நிச்சயம் முடியும். அதுதான் வாலஸ் ஸ்டெட்டினிஸ் எழுதியிருக்கும் ‘ஹவ் டு ப்ளான் அண்ட் எக்ஸிக்யூட்’ புத்தகத்தின் தனிச் சிறப்பு. ஒரு பயணத்தில் தன்னந்தனியே உட்கார்ந்தால் அரை மணி நேரத்தில் வாசித்து முடித்துவிடக்கூடிய எளிய புத்தகம். ஆனால் அதற்குள் எத்தனையோ உண்மைகளும் உத்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றாகப் பயன்படுத்தினால் நமது திட்டமிடுதல் பலமடங்கு முன்னேறிவிடும்!

இந்தப் புத்தகத்தின் அடிப்படை, திட்டமிடுதலுக்கான 24 உத்திகள். இவற்றைச் சரியானபடி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட திட்டமும் உங்களுடைய விரல் நுனியில் சுருண்டு கிடக்கும் என்கிறார் வாலஸ் ஸ்டெட்டினிஸ். இவை அனைத்தும் எளிமையான, எவரும் பயன்படுத்தக்கூடிய உத்திகள் என்பது இன்னும் விசேஷம்!

அந்த இருபத்து நான்கு உத்திகளில் முக்கியமானவற்றைமட்டும் இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்:

1. உங்களுடைய துறை எது, களம் எது என்பதைத் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். அது புரியாமல் இறங்கினால் எந்தத் திட்டமும் ஒழுங்காக அமையாது

2. நீங்கள் செய்யவிருக்கும் வேலையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, என்னென்ன எதிர்ப்புகள் உள்ளன என்பதை நன்கு அலசிக்கொள்ளுங்கள். ஆழம் பார்க்காமல் காலை விடாதீர்கள்
3. இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது மிக அவசியம். அவை நம்பர்களாக (எளிதில் கணக்கிடக்கூடியவையால) அமைந்தால் இன்னும் நல்லது. உதாரணமாக ‘நான் பெரிய கிரிக்கெட் வீரனாவேன்’ என்பதைவிட ‘அடுத்த வருடம் ஐபிஎல்லில் நான் விளையாடுவேன்’ என்பது சுலபத்தில் உறுதி செய்யக்கூடிய இலக்கு

4. அடுத்து, இந்த இலக்குகள் எதார்த்தத்தில் சாத்தியமானவைதானா என்று அலசுங்கள். உணர்ச்சிவயப்படாதீர்கள். நேர்மையாக யோசித்து, நிச்சயம் முடியும் என்று நீங்கள் நினைக்கிற இலக்குகளைமட்டுமே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்

5. ஒவ்வோர் இலக்கையும் அடைவதற்கான பாதைகளைக் கணக்கிடுங்கள். அவற்றை சீர் தூக்கிப் பார்த்து ஒன்று அல்லது இரண்டைமட்டும் தேர்ந்தெடுங்கள்

6. இந்தப் பாதைகளில் பயணம் செய்வதற்கான திட்டங்களை வடிக்கத் தொடங்குங்கள். கவனம், பாஸிட்டிவ், நெகட்டிவ் இரண்டையும் யோசித்தபிறகே உங்கள் திட்டம் எழுதப்படவேண்டும்

7. ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்யவேண்டியிருந்தால், அவற்றில் எது முக்கியம் என்று யோசித்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களைத் துரத்தி இரண்டிலும் ஏமாந்து நிற்க நேர்ந்துவிடும்

8. உங்கள் திட்டத்தை எழுதிவையுங்கள். அது எப்போதும் கண்ணில் படும்படியான ஓர் இடத்தில் இருக்கட்டும். அவ்வப்போது அதை எடுத்துப் பார்த்துப் பரிசோதித்துக்கொண்டே இருங்கள். நாம் வழி மாறுவதுபோல் தோன்றினால் சரி செய்யுங்கள் - வழியை அல்லது திட்டத்தை

9. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உங்களுக்கு உதவக்கூடியவர்கள் சிலர் இருக்கலாம். அவர்களுக்கு இதைப்பற்றித் தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள். அவர்களது முழு ஒப்புதலைப் பெறுங்கள். அப்போதுதான் அவர்கள் மனம் உவந்து ஒத்துழைப்பார்கள், உங்கள் வேலைகள் சுலபத்தில் முடியும். அநாவசியத் தடைகளுக்கு இடம் அளித்துவிடாதீர்கள்

10. திட்டம் நிறைவேறுகிற கட்டத்தில் யார் என்ன செய்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்துவாருங்கள். ஏதேனும் பிழைகள் இருந்தால் அன்பாகச் சொல்லித் திருத்துங்கள். நீங்களே பிழை செய்தால் கடுமையாக விமர்சித்துக்கொள்ளுங்கள். பல நேரங்களில் பெரிய திட்டங்கள் சொதப்பி விழுவது சின்னஞ்சிறு தவறுகளால்தான்!

நம்மில் பலர் நினைப்பதுபோல், திட்டமிடுவது ‘மேனேஜர்’களின் வேலை இல்லை. அதற்கென்று ப்ளானிங் நிபுணர்களும் தேவையில்லை. நாம் ஒவ்வொருவரும் திட்டங்களைத் தீட்டமுடியும், சரியாகச் செயல்பட்டு ஜெயிக்கமுடியும், அதற்குத் தேவையான முழு நம்பிக்கையை இந்தப் புத்தகம் ஊட்டுகிறது.

புத்தகத்தின் பெயர்: ஹவ் டு ப்ளான் அண்ட் எக்ஸிக்யூட் (How To Plan And Execute)

ஆசிரியர் பெயர்: வாலஸ் ஸ்டெட்டினிஸ் (Wallace Stettinius)

புத்தகம் வெளியான ஆண்டு: 2005

இதுவரையிலான விற்பனை: பல லட்சம் பிரதிகள்

மொழிபெயர்ப்பு: சுமார் பத்து மொழிகளில்

நன்றி...🙏🏽
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨