Saturday, March 7, 2020

மனமார பாராட்டுங்கள்

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் 
 தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது 
 இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -

“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
 காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் 
 ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
 தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
 ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்

 அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
 வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி 
 கீழே தன் கையெழுத்தையும் போட்டு, 

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து 
 அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார். 

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று 
 அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே 
 சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
 அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –

அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !

அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 
 குணாதிசயங்களை மேலும் மேலும்
 வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன. 

அந்த வகுப்பில் படித்த
 மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
 சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து, 
மரணம் அடைகிறான். 

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
 சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது. 

இறுதிச் சடங்கில்,

கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடி
போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த 
 மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
 செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
 அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு 
 டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
 எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
 தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர். 

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -

“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது 
 பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள். 

ஆமாம் – பல வருடங்களுக்கு
 முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல 
 குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -

“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
 உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை வருடங்களும்
 அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், 
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
 கதறி அழுகின்றனர்..,

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது, 
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
 அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
 தவறி விடுகிறோம்.

கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் 
 தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
 மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
 நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !

நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

மனிதர்களை மேலும் நல்லவர்களாக 
மாற்றும்.

Friday, March 6, 2020

சுதந்திரம்-நிம்மதி

பெரியவனனால் சுதந்திரம் கிடைக்கும் என்று சிறு வயதில் நினைக்கிறோம், பெரியவனாய் ஆனப்பிறகு சிறு குழந்தையாகவே இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாம் என நினைக்கிறோம், ஆக பெரியவனாக ஆனப்பின்னும் குழந்தை மனதுடன் இருந்து பாருங்கள் இரண்டும் கிடைக்கிறதா என்று பார்ப்போம். சாமியின் சிந்தனை.

Sunday, March 1, 2020

நான் உலகிலேயே அதிக துயரமுடையவனாக இருக்கிறேன்

"ஒரு  மனிதன்  கடவுளிடம்  பிரார்த்தனை  செய்தான்!!!

       "நான்  உலகிலேயே அதிக துயரமுடையவனாக இருக்கிறேன்.

  என் வாழ்நாள் முழுவதும்  பிரார்த்திக்கிறேன். 

எனக்கு  அதிகமாக ஒன்றும்  வேண்டாம்."என் துயரங்களை  நீங்கள்  யாரிடமாவது மாற்றிக் கொடுத்து அவருடையதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

ஏனெனில்  மற்ற  அனைவரும்  மகிழ்வுடன்  உள்ளனர். 

நீங்கள்  தேர்ந்தெடுத்துக்  கொடுங்கள். "

       அன்றிரவு அவன்  ஒரு  கனவு கண்டான். 

வானிலிருந்து  இடி போன்ற  குரல் ஒலித்தது 

        "அனைவரும்  அவரவர் துயரங்களை  ஒரு பையில்  எடுத்துக்  கொண்டு கோவிலை நோக்கி  விரைந்து  வாருங்கள் ".

         தன் பிரார்த்தனைக்குக் கடவுள்  காது கொடுத்துவிட்டார் என்று  அவன் நினைத்தான். 

        உடனே அவன் தன் துயரங்களை ஒரு  பையில் நிறைத்துக்கொண்டு  சாலையில் வந்தான்.

       சாலையில். ......
       அவன் கையில் இருந்த பைதான் சிறியதாக இருந்தது. 

பலர்  பெரிய பெரிய  பைகளைத் தூக்கிச் சென்றனர். 

சிலர்  பணியாட்களின் தலைகளில் சுமைகளாக வைத்துச் சுமந்து சென்றனர். 

        அவனுக்கு  வியப்பாக இருந்தது. 

 'இறைவா! இவர்கள்தான்  இந்த  அழகிய மனிதர்கள். 

இறைவன் ஏன்  எனது பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை  என்பது  இப்போதுதான்  புரிகிறது.  

நான்  என்  சிறிய பையுடன்  வீடு திரும்பி விட்டால் இறைவனுக்கு  நன்றி  கூறுவேன் ' என்று  நினைத்தான். 

       கோவிலில் மறுபடியும்  அந்தக்  குரல் ஒலித்தது 

       "எல்லோரும்  அவரவர் பைகளை சுவரில் தொங்கவிடுங்கள். 

பிறகு  விளக்குகள்  அணைக்கப்பட்டு மணி அடிக்கப்படும். 

அதுவே  அடையாளம்.  

இருளில் உங்களுக்கு  வேண்டிய பையை நீங்கள்  தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

 வெளிச்சம் உள்ளபோதே உங்களுக்குத் தேவையான பையருகே நின்று  கொண்டால் இருட்டில் தவறவிட மாட்டீர்கள் ".

         பிரார்த்தனை புரிந்தவன் தனது பையை பிடித்திருந்தான். 

மற்றவர்களும்  அவ்வாறே நின்றிருந்தனர். 

         அவன் ஆச்சரியமடைந்தான். 

 பக்கத்தில் நின்றவர்களிடம் கேட்டான்.  

         "இவர்கள் ஏன் பைகளை கைகளில் வைத்துக்  கொண்டிருக்கிறார்கள்?"

        அவர்கள்  சொன்னார்கள்:
        "நீ ஏன்  வைத்துக்  கொண்டிருக்கிறாயோ அதே காரணத்திற்காகத்தான். 

 இப்போது நம் கவலைகளைப் பற்றி  நமக்கு ஓரளவாவது தெரியும்.  

ஆனால்  மற்றவர்களது துயரங்கள்  நமக்கு பரிச்சயம் இல்லாததும் அறியாததும் அல்லவா! 

இந்த  வயதில்  ஏன் ஒன்றுமில்லாததிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?  

நம் பழைய நண்பர்களுடன்  வாழ்வதே மேல்! "

          விளக்கு அணைந்தது. 

அவரவரும் தங்கள்  பைகளுடன் கோவிலைவிட்டு மிகவும்  ஆனந்தமுடன் ஓடினர். 

          "கடவுள் மிகவும்  கருணையுள்ளவர்.

 என்னை சகதியிலிருந்து காப்பாற்றியுள்ளார். 

 மக்கள் எவ்வாறு  துயரங்களை மறைத்துள்ளனர். 

பெரிய  பைகளைச் சுமந்தவர்களை மகிழ்ச்சி  மிக்கவர்கள் என நினைத்தேனே!"

 என்று  அவன் நன்றியுடன்  பிரார்த்தித்தான். 

        

#ஓஷோ

Saturday, February 29, 2020

ரோபோவை போல் மாறும் மனிதன்

பொருட்களை கொண்டு தன்னை போன்று ரோபோவை உருவாக்குகிறான் மனிதன், தான் ஒரு பொருளாக மாறிக்கொண்டு இருப்பதை உணராமலே. சாமியின் சிந்தனை.

IOT(Internet of Things)

Talkless Things become Talkable, Talkative Humans become Talkless. By Samy's  Spark.

Saturday, February 22, 2020

Monday, February 17, 2020

ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

*ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி :  "இந்து" நாளிதழ் பதிப்பு!!*

*உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.*
 இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.

*1. கதிரவனைப் போல்...*

காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.

*2. புன்னகை அவசியம், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம்...!*

உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.

*3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...*

பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

*4. பாடம் வேண்டாம்...*

 ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.

*5. கேள்வி கேளுங்கள்...!*

 பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.

*6 . கடைசி அய்ந்து நிமிடங்கள்...!* 

புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி அய்ந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.

*7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்...*

 மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.

*8. பாடப்புத்தகத்தை தாண்டி...!*

வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.

*9. உங்கள் பிள்ளை அவர்கள்...!*

 மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

*10. நம்பிக்கையைக் கொடுங்கள்...!*

 உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.

*நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்!...*
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏